நாம் நற்செயல் ஆற்றுவதற்குரிய பிரேரணையை பகவான் அருளுகிறார். நாம் செய்ய விரும்பும் எச்செயலுக்கும் ஓர் உள்ளுணர்வு நம்மை உந்துகிறது. அவ்வாறின்றி நாம் செயல்படுவதில்லை. இந்த உந்துதலை கடவுள் நமக்கு அருளுகிறார்.
அவன் அருளன்றி நற்செயல்கள் செய்வதிலே நாம் உந்தப்படுவது எங்ஙனம்? நாம் தீய செயல்கள் செய்யும்போது ஏற்படும் உந்துதலுக்குக் காரணம் என்ன? அதுவும் கடவுளால்தான் ஏற்படுகிறது.
அவ்வாறானால், நாம் மிகவும் பெரிய நிலையில் வைத்துள்ள கடவுள், நம் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரியவரான பகவான் நம்மை தீய செயல்கள் செய்ய ஏன் தூண்ட வேண்டும்? இதற்கு நம் சாஸ்திரங்கள் கூறுவது என்னவெனில், “புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன.” நாம் முற்பிறவியில் செய்த கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்.
அதற்குரிய பிரேரணைகளை (நல்லதோ, கெட்டதோ) நமக்கு பகவான் அளிக்கிறார். இதற்காகக் கடவுளை நாம் குற்றம் சாட்டவோ, நிந்திக்கவோ முடியாது. இம்மாதிரியாக முற்பிறவியில் செய்த கர்மாக்களின் பலனை இப்பிறவியில் அனுபவிப்பது, இப்பிறவியில் செய்த கர்மங்களின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பது என்ற இந்தத் தொடர்பு தொன்றுதொட்டே இருந்து வருகிறது.
இந்த ஸம்சாரத்தின் தொன்மையை பகவான் வேதவியாஸர் தம்முடைய பிரஹ்ம சூத்திரங்களிலும், ஸ்ரீ சங்கரபகவத்பாதர் இந்த சூத்திரங்களுக்கான தம்முடைய உரையிலும் விளக்கியுள்ளார்கள்.
ஆகவே, ஸம்சாரமாகிற இந்தத் தொடர் ஓட்டத்திலே, ஒருவன் தனது செயல்களின் பலன்களை அனுபவிப்பது என்பது முறையற்றதாகவோ, சாஸ்திர விரோதமாகவோ ஆகாது. ஆகவே கடவுளின் அருளைப் பெற ஆர்வமாக உள்ள நாம், அந்த கடவுளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர்மத்தின் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
கடவுள் நமக்கு பகுத்தறியும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே அதைச் சரியான முறையில் உபயோகிப்பது நம் பொறுப்பாகும். அதைச் சரியான முறையில் பயன்படுத்தாவிடில் தவறு நம்முடையதேயாகும்.