81. வலது கையும் இடது கையும்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“க்ருதம் மே தக்ஷிணே ஹஸ்தே ஜயோ மே ஸவ்ய ஆஹித:” – ருக்வேதம்
“என் வலது கையில் காரியசித்தி உள்ளது. என் இடது கையில் வெற்றி உள்ளது”
பாரத கலாச்சாரத்தில் செயலாற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். செயலில் மனச்சோர்வும் தப்பிக்கும் வாதமும் நமக்கு கற்பிக்கப்படவில்லை. லட்சியத்தை அடைவதற்கு தூய்மையானதும் முழுமையானதுமான செயல்முறையைத் தூண்டும் விதமாக தர்ம போதனை அளிக்கப்பட்டது.
இயல்பாகவே வலது கையை நாம் செயல்புரிய பயன்படுத்துகிறோம். வலது கையால் செயல்புரி… இடது கையால் பயனைப் பெறுவாய்! என்பது மேற்கூறிய மந்திரத்தின் பொருள்.
வலது கையை பயன்படுத்து என்றால் சிரத்தையோடும் ஒருமனப்பாட்டுடனும் செயல் புரி என்று பொருள். நம் மன ஒருமையும் கவனமும் செய்யும் செயல் மீது இருக்க வேண்டும். பலன் மீது அல்ல. நம் புத்தியின் ஆற்றல் முழுவதும் செயல் மீது மையப்படுத்தப்பட வேண்டும். பலன் மீது கவனத்தை வைத்தால் மன ஒருமை சற்று அதன் பக்கம் திரும்பும். பணிக்குத் தேவையான முழுமையான முயற்சி குறைவுபடும். அதனால்தான் பலனைவிட பணியின் மேல் சிரத்தை வைப்பது முக்கியம்.
“குரு கர்மைவ தஸ்மாத் த்வம்” விதிக்கப்பட்ட கடமையை ஆற்றுவதில் அலட்சியம் கூடாது என்று எச்சரிக்கிறது கீதை.
பலனின் மேல் சிந்தை வைத்து தற்காலிக பலன்கள் மேல் கொண்ட மோகம் காரணமாக சாஸ்வதமான, வேதம் விதித்த தர்மச் செயல்களை விட்டு விட்டோம். அவ்வாறின்றி சிரத்தையோடு வேதம் போதித்த சத் கர்மாக்களை மேற்கொண்டால் நிச்சயம் ஜயம் கிடைக்கும் என்று இந்த மந்திரம் நம்பிக்கையூட்டி நல்வாக்கு கூறுகிறது.
உன் ஈடுபாடு, உன் முயற்சி, சிரத்தை இவற்றை செயலின் மேல் வை என்ற போதனை ‘தக்ஷிண ஹஸ்தம்’ என்ற சொல் மூலம் தெளிவாகிறது. அவ்வாறு முயற்சித்தால் ‘ஜயம்’ அதாவது வெற்றி கட்டாயம் எளிதாக கிடைக்கும் என்ற நம்பிக்கை ‘ஸவ்ய’ என்ற சொல்லால் அறிவிக்கப்படுகிறது.
ஏதாவது ஒன்றை முழுமையாக சாதிக்க முயற்சிப்போம். அதில் நம் திறமைக்கு பரிட்சை இருக்கும். அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற விடாமுயற்சி நல்லதுதான். ஆனால் வெற்றி மீது மட்டுமே கவனத்தை வைத்தால்… ‘எப்படியாவது வெற்றி’ என்ற எண்ணத்தால் அதர்ம வழியிலாவது முயற்சித்து தேர்ச்சி அடைந்தால் போதும் என்ற எண்ணம் தோன்றும் வாய்ப்பு உள்ளது. வெறும் பலன் மீது பார்வையை செலுத்துவதால் தீய வழியில் வெற்றி பெறுவதற்கு முயற்சிப்போம்.
அவ்வாறின்றி செயல் மீது மட்டுமே கருத்தை நிறுத்தி உழைத்தால் அதில் முழுமையை அடைய முடியும். அதுவே சரியான, நிரந்தரமான வெற்றியை அளிக்கும்.
இவ்விதமாக பலன் என்பது செயலை ஒட்டிக்கொண்டிருக்கும் என்று சொல்வதற்கு வலது கை, இடது கை என்று செயலையும் பயனையும் கூறியுள்ளார்கள். இத்தனை விரிவான பொருளையும் வாழ்க்கையை பொருளுடையதாக மாற்றும் செய்தியையும் பலவிதங்களிலும் போதிக்கிறது வேதம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 81. வலது கையும் இடது கையும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.