திருப்புகழ்க் கதைகள் பகுதி – 298
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கறைபடும் உடம்பு – சுவாமி மலை
திருக்குறள் சொல்லும் இயம நெறி
திருக்குறளில் இத்தகைய இயம யோக நெறி அடக்கம் உடைமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. அடக்கம் அனைத்து உயர்வுகளையும் நல்கும் தன்மையுடையது. அதனால் அவ்வடக்கத்தைப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும். உயிருக்கு அடக்கத்தைப் போன்ற செல்வம் வேறு எதுவும் கிடையாது. ஆமைபோன்று ஐம்பொறிகளையும் அடக்கி வாழ வேண்டும் அது மிகப்பெரிய ஆற்றலாக வெளிப்படும் என்பதனை வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
அடக்கத்தில் சிறந்தவனின் தோற்றம் மலையைவிடப் உயர்ந்தது என்பதைத் திருவள்ளுவர்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124)
என்று மொழிகிறார். பதஞ்சலி முனிவர் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், ஆசை இன்மை ஆகிய ஐந்து கட்டுப்பாடுகளை இயம நெறியில் எடுத்து மொழிகின்றார். இதனையே திருவள்ளுவரும் இன்னாசெய்யாமை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்று திருக்குறளில் எடுத்துரைக்கின்றார்.
இன்னாசெய்யாமை இயமநெறயில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. யாருக்கும் எந்தக் காலத்திலும் எந்தத் தீங்கும் செய்தல் கூடாது என்பதை,
எனைத்தாலும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)
என வள்ளுவர் மொழிகின்றார். வாய்மையே நிலையானது. இதனைச் சத்தியம் என பதஞ்சலி முனிவர் கூறுவார். வாய்மை என்றும் மாறாததும் நிலையானதும் முழுமையானதும் ஆகும். இறைவனை அறிவதற்கு வாய்மைநெறியே அடிப்படை நெறியாகும். வாய்மை உடல், உள்ளம், செயல் ஆகிய அனைத்திலும் தூய்மையாக இருப்பதைக் குறிக்கின்றது. இத்தகைய நெறியை,
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை. (295)
என வள்ளுவர் மொழிகின்றார். ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வா்யமையைச் சொல்வானாயின் அவன் தவமும் தானமும் செய்வாரைவிடச் சிறந்தவன் ஆவான் என்பதே இதன் உட்பொருளாகும்.
இப்படி யோகக் கலையின் முதல் படியான இயமம் மற்றும் நியமம் ஆகியவைகளைக் கடைபிடிக்கவே இக்காலத்தில் மக்கள் சிரமப் படுவர் என்றால் பிற படிகளை எவ்வாறு கற்றுத் தெளிய இயலும்? படிப்படியாக யோகக்கலையில் அனைத்து படிகளையும் நாம் கற்றுத் தேர்ந்தால் நமக்கு அட்ட மா சித்திகள் கிடைக்கும். இந்த அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்களையே நாம் சித்தர்கள் என்றழைக்கிறோம். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும், அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.
அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
(திருமூலர்–திருமந்திரம்-668வது பாடல்)
அணிமா என்றால் அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். ஆஞ்சநேயர் ஒரு சிறிய குரங்காக லங்கிணி முன்னர் தோன்றியதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மகிமா என்றால் மலையைப் போல் பெரிதாதல். இலங்கையைத் தாண்டும் முன்னர் ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்ததை நினைவில் கொள்ளுங்கள். இலகிமா என்றால் காற்றைப் போல் இலேசாய் இருத்தல். இப்படி இலேசாக ஆனதால்தான் ஆஞ்சநேயரால் வானில் மிதக்க முடிந்தது; பறக்க முடிந்தது. கரிமா என்றால் கனமாவது. அதாவது மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல். பீமசேனன் ஆஞ்ச்நேயரின் வாலைப் பிடித்துத் தூக்க முயன்றபோது கனமாக இருந்ததால் அவனால் தூக்க முடியவில்லை என்ற கதை ஞாபகம் வருகிறதா? அல்லது கிழப் பிராமணர் வேடத்தில் இருந்த கிருஷ்ண பரமாத்மாவைத் தூக்க முயன்ற கடோத்கசனால் அவரைத் தூக்க முடியாமல் போன கதை நினைவுக்கு வந்ததா?
அடுத்து பிராத்தி என்றால் எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல். பிராகாமியம் என்றால் தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல். மண்டனமிஸ்ரரின் மனைவி சரஸவாணியுடன் வாதம் செய்த ஆதிசங்கரர், சரஸவாணி ஆம்மையார் -இல்லறம் என்றால் என்ன? – என்ற கேள்விக்கு பதிலறிய அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்த சம்பவம் நினைவுக்கு வருகிறதா? இதற்கு அடுத்த சித்தி ஈசத்துவம் ஆகும். ஈசத்துவம் என்றால் நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். அடுத்து வசித்துவம், அதாவது அனைத்தையும் வசப்படுத்தல்.