ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை!

ஆன்மிக கட்டுரைகள்

00" height="175" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4-1.jpg" class="attachment-medium size-medium wp-post-image" alt="Bharathi therrtha swamigal" style="margin-bottom: 15px;" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4.jpg 1158w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4-3.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4-4.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4-5.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4-6.jpg 515w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeaae0aebee0aeb0e0aea4e0af80-e0aea4e0af80e0aeb0e0af8de0aea4e0af8de0aea4-e0aeafe0aebee0aea4e0af8de0aea4-7.jpg 150w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை! 17">
Bharathi therrtha swamigal
Bharathi therrtha swamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை
(கவிஞர் மீ.விசுவநாதன்)

(காப்பு)

வாரண மூர்த்தி நல்ல
வரப்பிர சாதி யான
தோரண வாயி லோனைத்
துதிசெய நன்மை ஓங்கும்;
பூரண ஞானப் பிள்ளை
பொலிகிற பிள்ளை யாரே
ஆரண மென்பர் மேலோர்
அவரடி போற்று கின்றேன். (1)

(ஆரணம் – மறை, வேதம்)

“குரு வணக்கம்”

மூடரைச் சான்றோ(ன்) ஆக்கி
முதலவன் காணச் செய்து
சீடரைப் ஞானி ஆக்கும்
சிருங்ககி ரிக்கோன், முத்தித்
தேடரை, மோக மற்ற
திருவினை, நல்லோர் நித்தம்
பாடவே வாணி வந்தாள்
பாரதீ தீர்த்த ரென்றே. (2)

“பிறந்த ஊரும், நதிக்கரையும்”

குண்டூ ரென்னும் ஊரில்
குளிர்ந்து பாயும் ஆறு
பண்சேர் “நாகு லேரு”;
பவானி சங்கர் என்னும்
மண்விண் காக்கும் ஈசன்
மகிழ்வாய்க் கோவில் கொண்டு
கண்கள் திறந்து பார்த்துக்
கனிவாய் அருள்வர் உண்மை. (3)

“சீதா ராம ஆஞ்சநேயலு”

வேத வாழ்க்கை வாழும்
“வேங்க டேச வதானி”
பாதம் வணங்கிச் சேர்ந்த
பண்பாள் “அனந்த லெக்ஷ்மி”
ஐந்தாம் பிள்ளை யாக
அவனி வந்த முத்து;
அந்தச் செல்வன் “சீதா
ராம ஆஞ்ச நேயர்”. (4)

அதிசயம்
மூன்றாம் வயதில் ஓர்நாள்
ஓவென் றழுத போது
ஏன்தா னென்று ஏங்கி
இறைவன் முன்னே அன்னை
வேண்ட, அழுகை நின்று
சிவனைப் பார்த்த பிள்ளை
வேண்டி “சம்போ” வென்று
வீழ்ந்து பணிந்த தென்பர். (5)

பண்பும் படிப்பும்
வருடம் செல்லச் செல்ல
வளர்ந்த தறிவு, பண்பு;
பெருகும் அறிவுத் தாக
வெள்ளம் அறிந்து கொண்டு
அக்கா பிரிய மாக
அன்பாய்க் கற்றுத் தந்தார்;
அக்கா லம்பொற் காலம்
அவருக் கமைந்த தாகும். (6)

ஆஞ்ச நேய லுவின்
அபார ஞானம் கண்டு
வாஞ்சை யாகப் பாடம்
வழங்கப் “பிரதா பகிரி”
வந்தார்; பாடம் சொன்னார்;
மனது மகிழ்ந்து சீடன்
சிந்தை ஒன்றிக் கற்ற
சிறப்பில் மகிழ்ந்தா ரம்மா. (7)

உபநயனம்

ஏழு வயதில் பூணூல்
இனிது நடந்த பின்பு
ஆழ மாக வேத
அறத்தைப் பற்றிக் கொண்டு
கூழோ கஞ்சி ஏதோ
கொஞ்சம் குடித்து நன்கு
வாழும் பண்பு தன்னை
வரமாய்க் கொண்டு விட்டார். (8)

நித்ய கர்மா செய்வார்
நெஞ்சில் காமம் நீக்கும்
“சத்கா யத்ரி” சொல்வார்
சத்யம் தவற மாட்டார்
உத்த மத்தன் தந்தை
உயிராம் வேத பாடம்
நித்தம் சொல்லக் கேட்டு
நிறைவாய் அடங்கி நின்றார். (9)

கருவில் கேட்ட நல்ல
கருத்துக் கதைக ளெல்லாம்
திருவாய் அமைந்த தாலே
“கிருஷ்ண யஜுரும்” கற்றார்;
பெருமை பெற்றார் பெற்றோர்;
பிறரும் மெச்ச நாளும்
அருளை அள்ளி அள்ளி
ஆண்ட வனவர்க் கீந்தார். (10)

நெறியான வாழ்க்கை

கற்ற தொழுக வேண்டும்
கனிவு வாக்கில் வேண்டும்
பெற்ற பொருள்கள் யாவும்
பெருமாள் செல்வ மென்னும்
பற்றி லாத பாதை
பால பருவந் தொட்டே
முற்றி யுள்ளே நின்று
மோகம் கொன்று வென்றார். (11)

தந்தைக்கு உதவி யாகத்
தானும் வைதீ கத்தில்
சிந்தையினை வைத்து நித்தம்
வேத நெறியைக் கற்றார்
முந்தைவினைப் பேற்றி னாலே
முகிழ்ந்த பக்தி யாலே
சந்தித்தார் குருவை ஊரில்
சாந்தி கொண்டார் உள்ளே. (12)

“1960ல் குருதரிசனம்”
நரசராவ் பேட்டை வந்த
நம்குரு வித்யா தீர்த்தர்
இரவிலே பூஜை செய்தார்
இளைஞராஞ் சநேய லுவங்கே
சிரசிலே கையை வைத்து
செகத்தையே மறந்தி ருந்தார்
வரமது குருவின் பார்வை
வாய்த்ததில் சாந்தி கொண்டார். (13)

“1961ல் மீண்டும் குருதரிசனம்”

“விஜய வாடா” ஊர்க்கு
விஜயம் அடுத்த ஆண்டு!
நிஜமா பொய்யா என்று
நினைக்க வைத்த பேறு !
சமஸ்கி ரதத்தில் பேசி
சபையைக் கவர்ந்த சீடன்
தமக்காம் குருவின் நெஞ்சத்
தவத்துள் நிறைத்து விட்டார். (14)

ஆங்கிலம், தெலுங்கு, மற்றும்
ஆர்வமாய்க் கணிதம் கற்கும்
பாங்கினைக் கொண்ட தாலே
படிப்பிலே முன்னே நின்றார்.
ஏங்கினார் மேலும் மேலும்
வேதமே கற்க வேண்டி;
தாங்கினார் தந்தை அன்பால்
தமையனின் ஆசை வெல்ல. (15)

“1966ல் உஜைனியில் குருதரிசனம்”
சாதுர் மாச காலம்
சன்யாசி யாரும் எங்கும்
ஊரூர் சென்றி டாமல்
ஓரிடத்தில் தங்கிக் கொண்டு
வேத நெறிகள் சொன்ன
விதிப்படியே பூஜை செய்து
பூமி வாழும் மக்கள்
பொலிவுபெற வாழ்த்து வார்கள். (16)

அபிநவ வித்யா தீர்த்தர்
அப்படியோர் காலம் தன்னில்
புவியிலே புண்ய மான
“உஜைனியிலே” விரதம் ஏற்றார்!
செவியிலே வேத நாதம்
தேன்போலே கேட்கும் நித்தம்!
கவியெலாம் அங்கு கூடி
காவியங்கள் தர்க்கம் செய்வர்! (17)

“உஜைனிக்கு சுவாமி வித்யாரண்யாருடன்”

அந்த அழகைக் காண
ஆஞ்ச நேயலு சென்றார்
சொந்த ஊர்க்கு வந்த
சுவாமி ஒருவரை நாடி!
எந்தக் கவலை, துன்பம்
ஏதும் கொண்டிடா நெஞ்சில்
இந்தக் குருவை மட்டும்
இருத்தி தியானமே செய்தார். (18)

கண்டார் குருவை நேரில்
கண்களில் சாந்தி பொங்க !
வாண்டாய் அலைந்த எண்ணம்
மௌனமாய் நின்ற தங்கே
கொண்டார் இன்பம் உள்ளே
குருவிழி வழியி னாலே!
உண்டார் இல்லை இன்ப
ஊற்றினால் உறக்க மில்லை. (19)

அடுத்தநாள் தரிசனப் போதில்
ஆசார்யர் தாளைப் போற்றித்
தொடுத்தனர் தன்னுடை ஆசை!
“உங்களுக்குத் தொண்டு செய்து
படித்திட வேண்டுறேன்; ஈசா
பக்தனைநீர் கொள்ளு மென்றார்”.
பிடித்தது சீடனின் பேச்சு
பிரியமாக ஆசி தந்தார். (20)

“குருவின் கருணை”

தானே சீட னுக்காய்
“தர்க்க சங்க்ரஹம்” என்ற
தேனாம் பாடம் தன்னை
தினமும் கற்றவர் கொடுத்தார் !
மேலாம் கருணை கொண்ட
மேகம் அவரருள் என்று
நூலோர் சொன்ன வார்த்தை
நூறு சதமெனக் கண்டார். (21)

“குரு சீடருக்கு அறிவுரை”

அப்பா அம்மா உன்னை
அன்பால் தேடு வார்கள்
இப்போ துடனே நீயும்
எழுது கடிதம் என்றார்
சிப்பாய் போல ஓடிச்
செய்து விட்டார் சீடர்;
அப்பா அம்மா உள்ளம்
அதனால் அமைதி ஆச்சு. (22)

“1968ல் சிருங்கேரி வந்தார் “
வடநாடு யாத்திரை சென்று
மறுபடி சிருங்கேரி வந்தார்
திடமான அத்வைத ஞானி
தெய்வமாம் நம்வித்யா தீர்த்தர்;
கடலாழ முத்தினை ஒத்தக்
கவிஞராம் சீடருமே பாம்புப்
படத்தாலே தவளையைக் காத்த
பதியினை வந்த டைந்தார். (23)

“சிருங்கேரி “
வேம்பும் அரசும் ஒன்றாய்
வேருடன் நிற்றல் போல
பாம்பும் தவளை யோடு
பாசமாய் இருத்தல் பார்த்து
ஆமாம் இந்த மண்தான்
அமைதியைப் பேணு மென்று
ஓமோம் என்று ஓதி
முதல்மடம் அங்க மைத்த (24)

சங்கரர் வாழ்ந்த பூமி!
சங்கர வம்சம் வாழும்
மங்கல சிருங்கே ரிக்கு
மாந்தரே வருக என்று
திங்களைச் சூட்டிக் கொண்ட
செந்நிற சிவனே போன்ற
எங்களின் குருவே அன்பால்
இன்முகங் கொண்ட ழைப்பார். (25)

“நரசிம்மவனம்”

நரசிம்ம வனத்தி லுள்ள
“ஆக்னீக மந்திரம்” என்னும்
மரம்சூழ்ந்த அறையை அன்று
மகாசன்னி தானமே தந்தார்
பரம்பொருளைக் காட்ட வேண்டி
பாதையினைத் காட்டினார் என்றே
சிரம்தாழ்த்தி வணக்கம் சொல்லி
சீடருமே தங்கியும் வந்தார். (26)

“கசடறக் கற்கக் கற்க”

கசடறக் கற்க வேண்டும்
கற்றபடி நிற்க வேண்டும்
இசைபட என்றும் வாழ
வேதநெறி ஒழுக வேண்டும்
அசைவிலா உள்ளுக் குள்ளே
அகிலத்தை அடக்கி வைக்கும்
நிசமான ஞானம் கொள்ள
நினைத்தாரே சீட ரும்தான் (27)

“தாயைப்போல் பரிவு”

ஒருபிர தோஷ நன்னாள்
துங்கைக் கரையில் உள்ள
அருமையாம் சார தாவின்
ஆல யம்சென் றுவிட்டு
திரும்பிடும் போது பார்த்தார்
தெய்வ நிகர்ஆ சானை !
இருட்டிடும் முன்பே வாவா
என்றார் குருவும் அன்பால்! (28)

தக்கதோர் குருவைக் கொண்டு
தர்க்க சாத்திரப் பாடம்
அக்கணம் சீடன் கற்க
ஆசான் விரும்பினார் ! நல்ல
பக்குவப் பட்ட சான்றோர்
பக்கம் இருந்திடச் செய்து
திக்கெலாம் புகழும் வண்ணம்
சீடன் பேர்பெற வைத்தார். (29)

காலையில் கற்ற பாடம்
கருங்கல் எழுத்தைப் போல
மாலையில் சொல்வார் சீடர் !
மயங்கு வாராம் ஆசான்!
சோலையில் வீசும் தென்றல்
சுகமாய் குருவும், “அம்பாள்”
வேலையி தென்றே எண்ணி
நெகிழ்ந்தே மகிழ்ந்தி ருப்பார் . (30)

“அதிகாலைப் படிப்பு”

அதிகாலை வேளை தன்னில்
அமைதி யான போதில்
மதிதானே விழித்தி ருக்கும்
மனத்தில் பதியும் பாடம்
விதிசெய்வாய் சீடா நீயும்
வீணே தூங்கி டாமல்
நிதியாக எண்ணிக் கற்று
நிலத்தில் பேர்கொள் என்றார். (31)

ஆக்கமுள பணிகள் செய்ய
ஆசைப் பட்டால் போதும்
ஊக்கமது தானே கூடும்
உளமும் அடங்கி ருக்கும்
தூக்கத்தில் ஆசை வைத்தால்
துவளும் புத்தி கூர்மை
நீக்கிடுக சோம்பல் தன்னை
நிமிரும் கல்வி என்றார் . (32)

நீலவண்ணக் கழுத்து டையோன்
நெகிழும் வண்ணம் பூஜை
ஞாலத்தை மறந்து செய்யும்
நல்ல பயிற்சி பெற்றார்.
காலத்தை வீணாக் காமல்
கண்ட படிபே சாமல்
சீலமிகு சார தைக்கே
சிந்தை என்றி ருப்பார் ! (33)

“சீடரின் வளர்ச்சியில் குருவின் மனம்”

எட்டாண்டு காலம் தங்கி
வேதம் கற்ற சீடர்
எட்டாத உயரம் செல்வார்
என்றே குருஉ ணர்ந்தார் !
மொட்டாக இருந்த உள்ளம்
முழுதும் மலர்ந்த தாக
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்
மகாசன் னிதான ஆசான். (34)

“சிருங்கேரி பீடத்தின் மகிமை”

சங்கரர் வகுத்த நான்கு
சரித்திர பீடம் தன்னில்
மங்கிடாப் புகழைத் தாங்கி
மதிப்புடன் இன்றும் உள்ள
தென்திசைப் பீட மாக
இருக்கிற சிருங்கே ரிக்குத்
தன்திசை அறிந்த பூர்ணத்
தவசிகள் பெருமை யன்றோ! (35)

“குருவின் பிரார்த்தனை”

கனக்கும் ஆசை விட்ட
கர்ம யோகி யாக,
சினத்தைச் சிரிப்பி னாலே
சிதைத்த துறவி யாக,
தனக்குப் பின்னே நல்ல
தரத்தில் சீடன் வேண்டி
மனத்தால் வாணி முன்னே
மகாசன் நிதானம் கேட்பார். (36)

“சீடனைத் தேர்வு செய்த குரு”

ஒருநல்ல நாளில் சீடன்
ஒருவரைத் தேர்வு செய்ய
குருநாதர் நினைக்க, “வைத்தி
சுப்ரம ணிஐ யர்”தான்
குருமுன்னே வந்து நின்றார்!
குருவுடன் அவரை நோக்கிக்
தருகந்தப் பஞ்சாங் கத்தைத்
தன்னிடம் என்று சொல்லி (37)

அங்குள அலமாரி காட்ட
ஐயரதை எடுத்த போது
தொங்கிய சீட்டொன்று வீழ்ந்து
துலக்கியது சீடர் தேர்வை !
இங்கிதை நீர்படியும் என்று
இன்முகத்துக் குருவும் சொல்ல
இங்கித மாய்ப்படித்த ஐயர்
இன்பத்தில் ஆழ்ந்து போனார்! (38)

பொத்தென விழுந்த சீட்டில்
பொதிந்துள செய்தி யாவும்
முத்தெனும் வித்யா தீர்த்தர்
துறவினைக் கொள்ளும் போது
எத்துணை நெறிகள் என்ற
ஈடிலா அறத்தைப் பற்றி
சுத்தமாய் இருந்த தம்மா !
சோதனை கடந்த தம்மா ! (39)

“பெற்றோருக்கு அறிவித்தல்”

அறிவடக்க சீடன் அந்த
ஆஞ்ச நேயலு தன்னை
நெறிமாறா பீடத் திற்கு
நிதியாய்ச் சேர்த்திடும் சேதி
அறிவிக்க எண்ணி தந்தை
“அவதா னி”களிடம் சொன்னார்
குறியாகக் குருவைப் போற்றும்
குலமே தொழுததே அம்மா ! (40)

“ஸ்ரீ சாரதாவின் கட்டளை”

சன்யாசி என்னைப் பார்த்து
சாரதா கட்டளை போட்டாள்!
“உன்னுடைய சீட னாக
ஒளிமிகு மகனையே தந்தேன்
நன்றென்றும் நடக்கு மென்று
நாமகள் ஆசியும் செய்தாள்”
அன்னவளின் வாக்கு தன்னை
அருளுடன் உம்மிடம் சொன்னேன்” (41)

“ஆனந்தம்”

என்று குருநாதர் சொல்ல
இன்பத்தில் தந்தை மூழ்கி
நன்று நன்றென்றே அந்த
ஞானகுரு முகத்தை நோக்கி,
“என்றோ செய்துள்ள புண்யம்
இன்றெங்கள் குலத்தைக் காத்துக்
குன்றா வேதநெறி வாழும்
கொடுப்பினையும் தந்த தென்றார்!” (42)

“தாயிடம் சொன்னார் தந்தை”

நரசராவ் பேட்டை சென்று
நடந்ததை எடுத்துச் சொன்னார்!
பரமனின் செய்கை என்று
பக்தியால் “தாயும்” ஏற்றார்!
அரனவன் அருளின் ஊற்று
அளித்ததாய் சுற்றம் சொல்ல
சிரமதில் கைகள் வைத்து
சிந்தையில் மகிழ்ந்தார் பெற்றோர். (43)

“1974ஆம் வருடம்
சீடரைத் தேர்வு செய்த குரு”

நவராத்ரி முடிந்து தேரில்
நாமகள் வலமும் வந்தாள்!
சிவரூப குருவும் தேவி
சிந்தையில் மூழ்கிப் பின்னே
அவராக வெளியில் வந்து
அங்குள பக்தர் பார்த்து
நவகோளும் நன்மை செய்யும்
நாளதில் சீடன் தேர்வு (44)

சிறப்பாக நடக்கு மென்றார் !
சீதா ராமாஞ்ச நேயப்
பிறப்புக்கு மாற்றாய் உள்ள
பேறு சன்யாசம் தந்து
முறையான சீட ராக்கி
முன்னோர் குருவழியில் செல்வேன்
பிறைகொண்ட பித்தன் உள்ளான்
பிழையே துமின்றிதினம் காப்பான் !” (45)

“சீடரின் கவலையும், பணிவும்”

சீடனாக இருக்கும் யோகச்
சேர்க்கை எனக்குண் டாமோ?
ஓடத்தில் உலகை வைத்தால்
ஒழுங்காய்ப் பயணம் போமோ?
பாடத்தை முறையாய்க் கற்றேன்
பற்று விட்டேன் அல்லேன்!
பீடத்தில் அமரும் சக்தி
பிள்ளை எனக்குண் டாமோ? (46)

இப்படி எண்ணிய நெஞ்சுள்
எதிர்க்குரல் கேட்ட தங்கே !
“எப்படி ஏறினும் அந்த
ஏணியாம் குருவே காவல்!
தப்படி வைத்திடா ஞானி
தருவது கொள்ளல் தர்மம்!
அப்படி எண்ணியே நீயும்
அடுத்தடி வைக்க வேண்டும்!” (47)

“சிஷ்ய சுவீகாரத்தின் முன்தினம்”
(10.11.1974)

முந்தைய நாளில் சீடன்
முறையாகக் குருவைப் போற்றி
சந்திர மௌலீ மற்றும்
சாரதாவை வணங்கி வந்தார்!
அந்தியில் பூஜை கண்டு
அஷ்டசிரார்த் தமுமே செய்தார் !
புந்தியில் “ராம நாமம்”
பொலிவுறவே இரவில் சொன்னார்! (48)

(சிஷ்ய சுவீகார தினம் – 11.11.1974)

காலையில் நீராடி சந்தியா
கடமைகள் செய்தார்; ஹோமமும்
மேலையோர் சொற்படியே செய்துபின்
மேற்கிருந் துவரும் துங்கையில்
மந்திர கோஷத்தில் குளித்தவர்
மண்ணிலே யார்க்கும் அன்புடன்
சந்திர கிரணம்போல் குளிர்ச்சியாய்த்
தவத்தின துபலன் ஈயவும் (49)

உறுதி செய்தார்; பூணூல்
உடனறுத்து நீரில் விட்டார் !
அறுதி யிட்ட துறவை
அவர்ஏற்ற வகையைப் போற்றி
குருவும் அழைத்தார்; நூலோர்
குழுவாக வேதம் ஓத
அருவும் உருவு மான
அதிஷ்டானம் வந்த டைந்தார்! (50)

“சன்யாசம் தந்தார் குருதேவர்”

பூவி னாலே செய்த
பொன்னாம் கரத்தி னாலே
காவி உடையும், தண்ட
கமண்ட லமுமே தந்து
ஆவி சேர்த்த ணைத்து
அன்புச் சீட ரோடு
சேவிக் கவேண்டி அங்கே
சேர்ந்தார் அதிஷ் டானம் ! (51)

“மகாவாக்கிய உபதேசம்”

மகத்தாம் மந்தி ரமான
“மகாவாக் யத்தை”ச் சீடன்
அகத்தில் பதியும் வண்ணம்
“அபிந வவித்யா தீர்த்த”
ஜகத்கு ருவேதான் ஓத
ஜகமே பக்தி யாலே
முகத்தில் இன்பம் பொங்க
ஓமென் றோதிற் றம்மா ! (52)

“ஸ்ரீ பாரதீ தீர்த்தரானார்”

சார தைமுன் வைத்து
சாளக் கிராம பூஜை
ஆரா தனைகள் செய்ய
அப்ப டியேசீ டனும்தன்
நேரா னகுரு பூஜை
செய்ய, குருசீ டர்கு
“பார தீதீர்த் த”ராகப்
பட்டம் தந்த ழைத்தார்! (53)

“தேவதா தர்சனம்”

சார தாவின் முன்பு
சற்றே தியானம் செய்து
தோர ணகண நாதன்
தோத்தி ரமும்செய் திட்டார்
நேரே சங்க ரர்சந்
நிதிமுன் வேண்டிக் கொண்டு
நீரோ டும்துங் கையை
நெருங்கி அக்கரை சேர்ந்தார் ! (54)

“சிஷ்ய சுவாமிகளின் பெருமை”

மாலை தரிச னத்தில்
வந்த பக்தர் பார்த்து
பாலை நிகர்த்த சீடர்
பண்பை மெச்சி மெச்சி,
“மேலாம் குருவின் ஆசி
மேலும் கிடைக்க நீங்கள்
காலம் தோறும் பக்தி
கவனம் செய்க” என்றார்! (55)

“குருவைப் போற்றுக”

“சீடர் தேர்வில் நன்கு
தேர்ச்சி பெற்று விட்டேன்
நாடு போற்றும் வண்ணம்
ஞானி ஒருவர் தன்னைத்
தேடித் தந்து வாணி
சிந்தை குளிர வைத்தாள் !
கூடி வந்து உங்கள்
குருவைப் பணிக” என்றார் ! (56)

“ஸ்ரீ சாரதா பீடத்தின் ஆசார்யர்கள்”

பாரம் பர்யம் மிக்க
பாரே போற்றும் பீடம் !
ஆரம் பமுத லாக
அமைந்த யோகி யர்கள்
ஈரம் மிகுந்த நெஞ்சும்
ஈசன் உருவு மாக
நேரம் காலம் எல்லாம்
பிரும்மத் தியானம் செய்வோர்! (57)

“பார தீதீர்த் தர்”அப்
பண்பு வம்சம் வந்தோர் !
நார தமுனி போல
ஞானச் செல்வ ராவார் !
பேரும் புகழும் வேண்டார்
பேசாப் பொழுதை வேண்டி
ஊரும் உலகும் வாழ
உள்ளே தவமி ருப்பார் ! (58)

“பெருமை மிகு ஸ்ரீ பாரதீ தீர்த்தர்”

தெளிந்த நீரைப் போல
நிறைந்து கற்ற தெல்லாம்
எளிய உவமை மூலம்
எடுத்துச் சொல்லும் நேர்த்தி
உளியால் சிற்பம் செய்யும்
உயர்ந்த சிற்பிக் கீடாய்க்
களிப்பார் கற்றோர்; சொல்லில்
கரைவார் எளியோர் அங்கே! (59

வித்யை விநயம் ரெண்டும்
விரும்பி இவரைத் தேடி
பக்தி செய்யும் ; வீணாம்
பகட்டு விலகி ஓடும்;
முக்தி நெறியைச் சொன்ன
மூல குருவின் ஆசி
சக்தி அளிப்ப தாலே
சரித்தி ரத்தில் நின்றார் ! (60)

“ஸ்ரீ மகாசன்னிதானம்,
ஸ்ரீ சன்னிதானம்”

சீடர் வந்த பின்பு
சேர்ந்தே எங்கும் செல்வர்;
“சூடன் போன்ற தன்மை
சுவாமி களென்று சொல்லி
கூடும் பக்தர் யாரும்
கொள்க அவரி டம்தான்
வீடு பேறு கொள்ளும்
வினைக்கு ஆசி” என்பார்! (61)

புதிய புதிய செய்தி
பொதிந்தி ருக்கும் வண்ணம்
அதிக கவன மோடு
ஆற்றும் உரைகள் கேட்டு
மதியில் குளிர்ந்து போவார்
மகாசன் னிதானம் ! ஞான
பதியாம் குருவ ருள்என்
பர்ஸ்ரீ சன்னி தானம் ! (62)

“குருவின் வாக்கை மதி”

குருவின் வார்த்தைக் கென்றும்
கொடுப்பார் மரியா தையே !
ஒருநாள் உபன்யா சத்தில்
,” சுவாமி கள்தான் இன்று
பூஜை செய்வார்” என்றார்;
புரிந்து கொண்ட சீடர்
பூஜைக் குத்தன் ஆசான்
சொன்ன நேரம் வந்தார்! (63)

“காவி உடைக்குள் கடவுள்”

உறவை விட்டு வந்து
உள்ளத் தாலே தூய
துறவு ஏற்ற பின்பு
துவரா டையைக் கொண்டார்!
பீடா திபதிக் கான
சிறந்த சரிகைக் காவி
ஆடை யையு டுத்த
ஆசான் அவர்க்கு ரைத்தார்! (64)

தேவி சார தாவின்
சிரித்த முகத்தின் சாயல்
காவி உடைக்குள் வந்த
கண்ணி யத்தின் பேற்றை
நாவி னாலே சொல்ல
ஞான மார்க்கம் தோன்றும்!
சேவிப் போர்க்கு வாழ்க்கைப்
பிறவி அறுந்து போகும்! (65)

“பணிவே விநயம்”

சின்ன வயதுப் பையன்
சிரித்த முகத்தைக் காட்டி,
“என்ன ருமைக் குருவே
எனக்கு மந்தி ரம்தான்
வேண்டும்” என்ற போது
“விநமு டனேநீ கேட்க
வேண்டும்” என்று நல்ல
விதமாய் வழியும் சொன்னார்! (66)

அதன்பின் அந்தப் பையன்
அபிந வவித்யா தீர்த்தர்
பதத்தில் வீழ்ந்து மிக்கப்
பணிவாய் வேண்டிக் கொள்ள
சிதம்ப ரேசர் நாமம்
சிந்தை செய்யச் சொன்னார் !
நிதம தையே சொன்ன
சிறுவன் உயந்தான் வாழ்வில். (67)

“சபரிகிரி ஸ்ரீ ஐயப்ப தரிசனம்”

சபரி மலைக்குச் சென்று
சாஸ்தா தரிச னத்தில்
தபசி கள்தன் னுள்ளம்
கரைந்து சுதனைக் கண்டார்
உடனே சாஸ்தா பேரில்
உருக்க மாய்சு லோகம்
கடலாய்ப் பெருகி ஓட
கவிதை யாய்ச்செய் திட்டார்! (68)

அந்த ஸ்லோகம் தன்னை
அடியார் சொல்லி வந்தால்
எந்தப் பிணியும் இன்றி
இன்பம் கொள்வர் சத்யம்.
மந்த புத்தி மாறும்
மனத்தில் சக்தி கூடும்
நந்த வனத்துப் பூவாய்
ஞான வாசம் சேரும். (69)

“ஒன்றிலே ஒன்றப் பழகு”

ஓசை எதுவந் தாலும்
ஒன்றில் மனத்தை வைத்து
பூசை செய்யும் வேளை
பொன்னாய் ஒளிர்வான் போலே
மீசை வைத்த ஈசன்
மெல்லத் தெரிவான் என்பார்!
பாசம் பற்றை வென்ற
பார தீதீர்த் தர்தான். (70)

குருவின் மகிமை

சாரதா பீடம் தன்னில்
தரவழி குருவம் சத்தை
பாரதீ தேவி என்றே
பக்தரும் பணிவ துண்டு !
ஆயிரம் சான்று சொல்லி
அவைகளை விளக்க லாம்தான்!
தாயது அன்பை எந்தத்
தராசினால் கணக்குப் பார்க்க? (71)

ஒன்றி ரெண்டு காட்ட
உயர்வு தெரியு மென்று
இன்றி தையே இங்கு
எளிதாய் எழுது கின்றேன்!
தென்றல் காற்று தங்கத்
தேரில் வருதல் போல
தென்தி சைக்கு ஆசான்
சீட ருடனே வந்தார்! (72)

குருவும் சீடரும் தென்திசைப் பயணம்

சத்திய மங்கலம் வந்தார்
சந்திர சூரியர் போல!
நித்தியக் கடமையாம் பூஜை
நியமமும் உரையுமே செய்தார்!
சத்திய உரையினைத் தங்கள்
சன்னிதா னம்தமி ழில்தான்
சுத்தமாய்ப் பேசிய பேச்சில்
சொக்கியே போனதாம் சத்யம்! (73)

பன்மொழி வித்தகர்

பன்மொழிப் புலமை கண்டு
பாரதீ தீர்த்தர் மீது
பன்மொழிப் புலவோர் கூட்டம்,
பாமரர் கூட்ட மென்று
அன்பினால் பக்தி செய்வோர்
ஆயிரங் கோடி என்று
நன்றியால்க் கண்ணீர் மல்க
நானிலம் கூறக் கேட்டேன்! (74)

பற்றறுத் தோன்தாள் பணி

கல்லில் வடித்த சிற்பம்
கணக்கில் கல்லா னாலும்
நல்லுள் ளத்துள் தானே
ஞான ஒளியாய்த் தோன்றும்!
சொல்லி வருவ தில்லை
துறவு ! சொல்லா மல்தான்
மல்லி மலரைப் போல
மனத்துள் வாசம் செய்யும் ! (75)

அமைதி வேண்டும் என்றால்
அன்பு பெருக வேண்டும் !
சுமையாம் வாழ்வு தன்னை
சுகமாய் மாற்ற வேண்டி
தமையே மறந்து கொஞ்சம்
தனது கண்கள் மூட
இமையோன் சிவனைப் போல
இருப்பார் சன்னி தானம்! (76)

தன்னைப் பணியும் பக்தன்
தரத்தைப் பார்க்கா வண்ணம்
அன்னை தரத்தில் நின்று
அருளும் உயர்ந்த வள்ளல் !
முன்னோர் சென்ற பாதை
மூத்தோர் செய்த புண்யம்
என்னைப் போன்ற வர்க்கு
எளிதாய்ச் சேர்ந்த செல்வம்! (77)

சிக்கெனப் பற்றுக பற்றுவிட

ஊரென அறிந்தேன் அல்லேன்
உறவினை அறிந்தேன் அல்லேன்
பேரெனக் கேட்கும் முன்னே
பிரியமாய் பக்தி செய்தேன்
தூரென இருந்த உள்ளம்
தூயதாய் ஆவ தற்கு
பாரதீ தீர்த்தர் பாதம்
பணிவதே என்று ணர்ந்தேன் ! (78)

எதிலும் ஒழுங்கு

திருநீற்றில் நேர்த்தி; ஆடை
திருமேனி கொள்ளல் நேர்த்தி;
வரும்வார்த்தை எல்லாம் நேர்த்தி;
வண்ணப்பூ வெடுத்து ஈசன்
உருமீது மெல்ல வைத்துப்
பூஜைசெய்யும் நேர்த்தி என்று
தருணமெலாம் நேர்த்தி யான
தவசியேஸ்ரீ சன்னி தானம்! (79)

அன்பே சிவம்

மானிடம் அன்பு காட்டி
மயிலிடம் பரிவு கூட்டி
தேனிபோல் நல்ல தெல்லாம்
தேடியே தினமும் சேர்த்து
மானிடப் பண்பு ஓங்க
மறைவழி வாழும் யோகி
தானினை வென்ற சான்றோர்
பாரதீ தீர்த்தர் என்பேன். (80)

“பிறவி நீங்க வழி”

பிறவியாம் கடலில் நீந்திப்
பேரின்பக் கரையில் ஏறத்
துறவியின் பாதம் பற்றத்
தோன்றியதோர் நேரம் என்னுள்
குருவிபோல் சிறக டித்துக்
குழந்தையென வந்த மர்ந்த
குருஎவர் சொல்சொல் என்றால்
சொல்பார தீதீர்த் தர்தான். (81)

“ஸ்ரீ சங்கர வழி”

திங்களைச் சுமக்கும் ஈசன்
தேடிக் காலடி தோன்றி
சங்கரர் என்ற பேரால்
அத்வை தப்பயிர் பேண
அங்கவர் செய்த தெல்லாம்
அகிலம் போற்றிடும் வண்ணம்
இங்கவர் சீடர் செய்தார்
எளியோர்க் கிரங்கிடும் தீர்த்தர். (82)

பொறுமை, கனிவு, கல்வி,
புதுமை, பக்தி, ஞானம்
வெறுமை தோன்றா உள்ளே
வேத கோஷப் பள்ளி ;
வறுமை கொண்ட பேர்க்கு
வாரி வழங்கும் வள்ளல்
இருமை வென்ற யோகி
இவரே என்று சொல்வேன் (83)

“கல்யாணபுரி விஜயம்”

கல்லிடைக் குறிச்சி ஊரில்
கணக்கிலா பக்தர் உண்டு.
நல்மனம் கொண்ட பேர்கள்
ஞானியைப் போற்று கின்ற
துல்லிய தூயோர் உண்டு;
துயரென வருவோர்க் கெல்லாம்
நெல்மணி வாரித் தந்து
நிம்மதி பெறுவோர் உண்டு. (84)

அங்கொரு வருடம் வந்தார்
அரும்பெரும் குருநா தர்தான்!
எங்குமே சீடர் கூட்டம்
இணையிலா பக்தி யோடு
தங்களின் குருவைக் கண்டு
தங்கமாய்ப் பொலிந்தி ருந்தார்!
அங்கொரு கோவில் காண
அழைத்தனர் ஆசார் யாளை ! (85)

“கிராமக் கோவில் தரிசனம்”

அழகினைச் சுமந்த கோவில்
அற்புதத் தெய்வக் காட்சி
பழகிய நண்பர் போலே
பரமனைத் தொழுதார் யோகி!
“பழமையாய் இருந்த தெல்லாம்
பார்த்துநான் புதுமை செய்தேன்
தொழுகிற இடங்கள் எங்கும்
தொடர்பணி செய்து வந்தேன் ” (86)

“பக்தரின் நானை நீக்கிய குருநாதர் “

என்றவர் நடக்கும் போது
இடறிய நேரம் கொஞ்சம்
நின்றவர்,” இந்தக் கல்லே
இடித்ததால் விரலில் ரத்தம்
என்றதும்,”ஓய்ஓய் நீங்கள்
இதுவரை என்ன சொன்னீர்!
மன்றிலே எல்லாம் நானே
மதிப்புடன் செய்தேன் என்றீர்! (87)

நடந்திடும் போது கல்லில்
நறுக்கென நீர்தான் முட்டி
படக்கென விழவும் பார்த்தீர்!
பழிதனைக் கல்லில் போட்டீர்!
திடமுடன் இதையும் நானே
செய்ததாய்ச் சொல்லும்” என்று
மடமதி அகந்தை நீக்க
வழியதைச் சொன்னார் ஞானி ! (88)

“பணிந்த சீடருக்கு ஆசி”

குறைதனை உணர்ந்த சீடர்
குருவினை வணங்கி விட்டு,
“இறைவனே எனக்கு நீங்கள்!
இப்படி என்னுள் உள்ள
கறைதனை நீக்கி உங்கள்
கருணையால் என்னைக் காத்தீர்!
மறையினைப் போன்ற உங்கள்
மகிமையைப் பணிவே னென்றார் ! (89)

“மதுரைக்கு விஜயம்”

“உழைப்பாலே உயரும் பூமி
உமையாளின் செல்ல ஊர்தான்
பிழைப்புக்காய் வந்த பேரை
பிரியமுடன் காக்கும் மீனாள் !
அழைத்தவுடன் அவளைக் கண்டு
அருள்மழையில் நனைய எண்ணி
மழைக்காக மக்கள் ஏங்கும்
மதுரைக்கு விஜயம் செய்தார் ! (90)

“பக்தர்களின் பிராத்தனை”

சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள்
சுருண்டு தவித்த காலம்
மொட்டுக்கள் மலர்கள் எல்லாம்
மௌனம் காத்த நேரம்
சிட்டுக்கள் பெரியோர்கள் கூடி
சிருங்க கிரியின் யோகி
பட்டுத்தாள் பணிந்த ழைக்க
பாரதீதீர்த் தருமே வந்தார்! (91)

வான்மழை வேண்டும்; மக்கள்
மனங்குளிர வேண்டும்; பூஜை
தேன்மலர்ச் சோலை வேண்டும்;
தெய்வப்பெண் மீனாள் ஆட்சி
தானெனும் சிறப்பு வேண்டும்;
தவத்தோராம் பாதம் பட்டு
நானெனும் அகந்தை நீங்கி
நல்மதுரை வாழ வேண்டும்! (92)

மக்களின் பிராத்தனை கேட்டு
மகானும் வழியைச் சொன்னார்!
தக்கதோர் பூஜையும் செய்தார்;
தட்டா வானம் கொட்ட
திக்கெலாம் நீரது பாய
தெரிந்த பச்சை எங்கும்
தக்கதோர் செழிப்பினைக் காட்ட
தரணி மகிழ்ந்த தம்மா! (93)

“அன்னை ஸ்ரீ மீனாட்சி தரிசனம்”

மீனாட்சி சுந்தரர் பார்த்து
முறையாய் தியானம் செய்தார்!
ஆனாலும் அவருளே உள்ள
அன்பு சிவமே பொங்கும்
தேனாக எதிரிலே நிற்கும்
தெய்வக் காட்சி என்று
வானோர்கள் மெச்சிடும் யோகி
வணங்கி வலமும் வந்தார்! (94)

“சொன்னபடி வாழும் யோகி”

சொன்னால் செய்வார்; தானே
சொன்ன வண்ணம் வாழ்வார்!
தன்னால் முடியு மென்ற
தலைக்க னமிலாப் பண்பால்
பின்னால் வரும்நல் வம்சம்
பிழைக்கே ஆளா காமல்
முன்னோர் சென்ற பாதை
முறையைப் போற்றி நிற்பார்! (95)

“கற்றோரை விரும்பும் துறவி”

தெரியா விபரம் தன்னை
தெரிவிக்கும் மனிதர் முன்னே
சரியாய்ச் செவிகள் தீட்டி
தம்முள்ளே வாங்கிக் கொள்வார்!
விரிவாய் விளக்கம் சொல்லும்
வித்வத்மா சபையோர்க் கெல்லாம்
அரிதாய்ப் பொருள் சொல்லி
ஆன்றோரை மகிழ வைப்பார்! (96)

“குழந்தைகளின் உமாச்சித் தாத்தா”

இந்தா மாம்பழ மென்று
எதிரே குழந்தை கையில்
பந்தா இன்றியே கொஞ்சி
பச்சை மனத்தை எல்லாம்
சொந்த மாக்கிடச் செய்வார்
சூர்ய ஒளிபோல் தூயர்!
இந்த பாரதீ தீர்த்தர்
என்று சொல்லு வேனே ! (97)

“அன்பே சிவமானவர்”

அன்ன சாலை கட்டி
அனைவரும் உண்ணச் செய்வார்!
இன்னும் இன்னும் என்று
எளியரும் கல்வி கற்கத்
தன்னால் ஆன மட்டும்
தரமுடை பாட சாலை
நன்றாய் ஏற்ப டுத்தி
நன்மையை ஓங்க வைப்பார்! (98)

மாணவ மணிகள் வந்தால்
மந்திரம் சொல்லச் சொல்வார்!
நாணமும் , பக்தி யோடும்
மடமட வென்று கூறி
ஆணவ மற்று நிற்கும்
அழுக்கிலா குழந்தை யர்க்கு
பாணதீர்த் தத்தின் நீராய்
பாரதீ தீர்த்தர் காப்பார் ! (99)

“மௌனம்”

நதிநீ ராடல் இன்பம்;
நல்லோர் நட்பு இன்பம்;
உதிக்கும் கதிரோன் இன்பம்;
உண்மை ஒளியே இன்பம்;
விதியைப் பார்த்துக் கேலி
செய்யும் துறவி கொண்ட
மதியின் தெளிவு இன்பம்;
மௌனம் மேலாம் இன்பம்! (100)

(ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – முதல் பாகம் நிறைந்தது)

<

p class=”has-text-align-center”>(அம்மன் தரிசனம் ஆன்மிக மாத இதழில் 2010 2011 ஆம்
ஆண்டுகளில் தொடராக வெளிவந்தது)

ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply