Amaruvi Devanathan
இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?
வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம் தரையிலும், மற்றோரு பாதம் மேல் நோக்கியும் இருக்கும் அந்தக் கண்ணனுக்குப் பொற்சதங்கை செய்யத் திருவுள்ளம் கொண்டு நஞ்ஜீயர் பொற்கொல்லனிடம் ஒரு கழஞ்சு பொன் யாசகம் பெற்று சதங்கை சமர்ப்பித்தார். அக்கண்ணனுக்கு என்ன பெயரிடலாம் என்று சிந்தித்த நஞ்ஜீயர், ‘சதங்கையழகியார்’ என்று பெயரிட்டுக் கோவிலாழ்வாரில் எழுந்தருளப்பண்ணினார்.
மறுநாள் காலை அவர் இல்லத்தில் இருந்து நான்கு வீடுகள் தாண்டி குடியிருந்த இன்னொருவர் நஞ்ஜீயரைக் கண்டு, ‘இன்று காலை சொப்பனத்தில் ஒரு சிறு பிள்ளை வந்து நாவல் பழம் கேட்டது. நீ எங்கிருந்து வருகிறாய் என்றேன். நான்கு விடு தள்ளிதான் குடியிருக்கிறேன் என்றது. உன் பெயரென்ன என்றேன். ஏதோ சதங்கையழகியார் என்று மழலையில் சொன்னது. அப்படி இவ்விடம் யாராவது உண்டோ?’ என்று கேட்டுள்ளார்.
தான் விளையாட்டாக இட்ட பெயரைப் பெருமாள் தனது பெயராக சுவீகரித்ததைக் கேட்ட நஞ்ஜீயர் மூர்ச்சித்து விழுந்தார் என்று குருபரம்பரையில் வருகிறது.
இக்கருத்தை ஒட்டிய பொய்கையாழ்வார் பாசுரம் இதோ:
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்.
தீபாவளி நன்னாளில் வாசகர்கள் எல்லா நலனும் பெற்று வாழ சதங்கையழகியார் அருள் புரியட்டும்.
Diwali – The Festival of Lights
- Amaruvi Devanathan̷ 0;.