-e0ae89e0ae95e0aebee0aea4e0aebf-e0aeaae0af81e0aea4e0af8de0aea4e0aebee0aea3e0af8de0ae9fe0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“பரிணாமப்ரதாயினி” என்பது காலத்தைக் குறிக்கிறது. “கர்ம பல ப்ரதாதா” என்பது பகவானின் நாமம்.
காலமும் பரமேஸ்வரனின் சொரூபமே! இதனை உணர்ந்து வழிபட்டால் முக்திக்கு வழி பிறக்கும் என்று மகரிஷிகள் தரிசித்து விளக்கியுள்ளார்கள்.
முன்வினைப் பயனை அருளுவது காலமே! சூரியனும் சந்திரனும் சஞ்சரிப்பதைப் பொறுத்து பஞ்சாங்க கணிதத்தை பல யுகங்களுக்கு முன்பே பாரதிய மகரிஷிகள் ஏற்படுத்தினார்கள். வேதத்தின் ஒரு அங்கமான ஜோதிட வித்யை பஞ்சாங்க கணக்கீட்டிற்கு ஆதாரம். அதனை அனுசரித்து 60 ஆண்டுகளாக காலத்தை நிர்ணயித்தார்கள்.
இந்த காலச் சக்கரத்தில் ‘சார்வரி’ ஆண்டு நிறைவடைகிறது. சார்வரி என்றால் இரவு. யோகத்தின்படி அகோர தத்துவமாகவும் சிக்ஷா சொரூபத்தின்படி கோரமாகவும் காலராத்திரியாகவும் உள்ள சக்தி சார்வரி. இந்தத் தத்துவங்களை இந்த ஆண்டில் உலகம் அனுபவித்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு மகிழும் நாகரீக மனிதனின் அறிவுக்கு புலப்படாததும், தீர்வுகாண முடியாததுமான பிரச்சினையாக வந்து சேர்ந்த பெருந்தொற்று, பொருளாதாரம் சுகாதாரம் முன்னேற்றம் என்று ஒவ்வொரு துறையையும் தாக்கியது. நவீன மருத்துவ முறைக்கு அடங்காத இந்த பெருந்தொற்றை சில இடங்களில் பண்டைய மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்திய விஷயங்களும் செய்தியாக வந்தன.
எது எப்படியானாலும் கொடூரமாக பயமுறுத்திய இந்த ஆபத்து சூழலிலும் சில நல்ல மாற்றங்களும் படிப்பினைகளும் மக்களின் அனுபவத்திற்கு வந்தன. வருத்தமும் ஏமாற்றமுமான குணங்களோடு இந்த ஆண்டு முடிவடைந்து புத்தாண்டான ‘ப்லவ’ வருடத்திற்குள் நுழைகிறோம்.
‘ப்லவ’ என்றால் ஓடம். “நாவேவ சிந்தும் துரிதாத்யக்னி:” என்பது துர்கா ஸூக்தம். துரிதம், துக்கம், துன்மார்க்கம், துராச்சாரம் இவற்றைத் தாண்டி கரைசேர்க்கும் இறைசக்தி துர்கா.
இரவாக (சார்வரி) இதுவரை தென்பட்ட கால சக்தி இனிமேல் ஓடமாக (ப்லவ) நோய் நொடிகளான துன்பத்திலிருந்து கரை சேர்க்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்!
புத்தாண்டுத் தொடக்கத்தை வசந்த நவராத்திரியாக ஸ்ரீராம நவமி வரை கடைபிடிக்கும் சம்பிரதாயம் உள்ளது. உலகை உய்விக்க வந்த ஆனந்த சொரூபனான ஸ்ரீராமன் தர்மத்தை நிலைநாட்டி இயற்கையையும் உலகையும் காத்தருள வேண்டுமென்று வணங்கி வழிபடுவோம்!
ராமம் என்றாலே ஆனந்த தத்துவம். ‘ஜகதானந்த காரகன்’ ராமனின் நாமம், தியானம், கதா சிரவணம் உலகிற்கு நன்மை பயக்கும் என்ற எண்ணத்தோடு ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை அதிக எண்ணிக்கையில் ஜபம் செய்வோம்! சக்தி நிரம்பிய சாத்வீக மகா மந்திரம் ஸ்ரீ ராமஜெயம். இதனை சமர்த்த ராமதாசரிடமிருந்து சிவாஜி மஹாராஜா ஏற்று ஜபம் செய்து ஶ்ரீராமரின் அருளால் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார்.
இந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபம் செய்யும்போது பரிபூரணம் அடைகிறது. யாகங்கள், ஆகுதிகள் போன்றவை இல்லாமலேயே பலன் அளிக்கும் சிறந்த சக்தி வாய்ந்த இந்த ராம நாம ஜபம் மூலம் நோய்களும் துன்பங்களும் நீங்குவதோடு தர்ம ரட்ணை நிகழ வேண்டும் என்பது முக்கிய சங்கல்பமாக இருக்கவேண்டும்.
நோய்த் தொற்றை விட ஆபத்தான தர்ம விரோத சக்திகள், தேசப் பகைவர்களை துணை சேர்த்துக்கொண்டு நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் வேளையில் கோதண்டராமனின் மந்திர பாணம் சிறப்பாக பணிபுரிந்து தர்ம துரோகிகளை துரத்தியடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சத்திய பராக்கிரமசாலியான ஸ்ரீராமனின் ஜெய மந்திரம் அசாந்தியை நீக்கி அமைதியை நிலைநாட்டட்டும்! ஹிந்து மதத்தின் மீது நடக்கும் தாக்குதல்கள், அழிவுகள், அரசியல் சதிகள், ஊழல்கள் போன்ற அசுரச் செயல்களின் மீது விஜய ராமனின் வீரம் வெற்றி பெறட்டும்!
இந்தப் புத்தாண்டு, சனாதன இந்து தர்மத்தின் வளர்ச்சியோடு தேச வளர்ச்சியையும் முன்னெடுக்கட்டும்!
மதமாற்றம் போன்ற மாயரோகம் நீங்கி பண்பாடு நிறைந்த சனாதன தர்மம் தழைக்கட்டும்!
பாரத தேசத்திற்கும் ஹைந்தவ தர்மத்திற்கும் ஸ்ரீராம ரட்சை!
- ருஷிபீடம் மாத இதழ் ஏப்ரல் 2021 தலையங்கம்.
ஏப்ரல் 13. உகாதி புத்தாண்டில் ஸ்ரீராம ரட்சை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.