பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)

ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

பாபங்குச ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம், ” ஓ மதுசூதனா, ஏகாதசி மஹாத்மியத்தில் அடுத்ததாக ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதன் பயன், மஹிமை பற்றிய கருணை கூர்ந்து விவரமாக கூறுங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கையில்,” ராஜன், பாவங்கள் அனைத்தையும் நீக்கும் ஏகாதசி விரத மஹிமையை உனக்கு சொல்கிறேன், கவனமாக கேள்.

ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை விதிமுறைப்படி பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் மூலம், இவ்வுலக வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்வதுடன், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் பெறுவர்.

ஐம்புலனையும் அடக்கி நீண்ட நெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய புண்ணிய பலனை, விரத வழிமுறைப்படி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால் ஒருவர் பெறலாம். அளவிலா கடும் பாவங்களைப் புரிந்திருந்தாலும், பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம், நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம்.

இப்புவியின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் கிடைப்பதன் புண்ணிய பலனை, பகவான் மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தால் ஒருவர் பெறலாம். பகவானின் புனித திருநாமங்களான ராம, விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன், இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர், மரணத்திற்குப் பின் எமதர்மராஜன் இருப்பிடமான எமலோகத்தை காண மாட்டார்.

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபங்குச ஏகாதசியை அனுஷ்டிக்கும் பக்தர்களும் எமலோகத்தைக் காண மாட்டார்.

நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.

ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை விட மேலான புண்ணியம் வேறு எதுவும் கிடையாது. பாவங்களை நீக்கி மோட்சப்பிராப்தி அளிப்பதில், அனந்தசயன பத்மநாப பூஜைக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசிக்கு இணையான நாள் இம்மூவுலகிலும் இல்லை.

பாபங்குச ஏகாதசி விரத புண்ணியத்திற்கு இணை இம்மூவ்வுலகிலும் இல்லை.

நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிப்பவர் மரணத்திற்கு பின்னர் யமதர்மராஜனை காண வேண்டிய அவசியமில்லாமல் விஷ்ணு தூதர்களால் ஸ்ரீ ஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். வாழ்விற்குப் பின் மோட்சப்பிராப்தி, சொர்க்கலோக வாசம், திடமான ஆரோக்கியம், அழகான பெண்கள், தனம், தான்யம் இவற்றை விரும்புவர் பாபங்குச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் விரும்பியது அனைத்தும் பெறுவர்.

கங்கை, கயா, காசி, புஷ்கரம், மேலான குருக்ஷேத்ரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி, பகவானை வணங்குவதால் கிட்டும் புண்ணியத்தை விட மேலான பலனை அருளும் சக்தி வாய்ந்தது பாபங்குச ஏகாதசி. பகலில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, இரவில் கண்விழித்து பகவத்நாம ஸ்மரணம், புராணம், பாகவதம் படித்தல், கீர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இப்படி விரதத்தை பூரணமாக கடைப்பிடிப்பவர் மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவர்.

அதுமட்டுமல்லாமல், தாய், தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தியை அடைவர். மோட்சப்பிராப்தி பெறுவதுடன், முன்னோர்கள் அனைவரும் பூவுலக பிறப்பிற்கு முன் ரூபமான வைகுண்ட ரூபத்தை அடைகின்றனர்.

மஞ்சள் பட்டாடையில், அழகிய ஆபரணத்துடன், நான்கு திருக்கரங்கள் கொண்டு கருட வாகனத்தில் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் செல்வர்.

இது பாபங்குச ஏகாதசியை நன்முறையில் அனுஷ்டிப்பதால் பக்தர்களுக்கு கிட்டும் பலனாகும்.

Leave a Reply