682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வேதாந்தத்தின் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கு தன்னை அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு தகுதி ஏற்படாதவனுக்கு உபதேசத்தால் பயன் கிடைக்காது; மாறாக எதிரிடையான விளைவுகளே ஏற்படும்.
எல்லாமே பிரஹ்மம் என்று ஒரு மூடனுக்கோ அரைகுறையாக படித்திருக்கிறவனுக்கோ உபதேசித்தால், அவன் அதை தப்பாக புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவனை அந்த உபதேசம் தவறான செயல்கள் மூலம் நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆகவே தத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஒருவனுக்கு தகுதி இருக்க வேண்டும்.
அப்பொழுது அந்த தகுதிதான் என்ன? சாஸ்திரங்களிலும் குருவின் உபதேசங்களிலும் அசையாத நம்பிக்கை, லௌகீக விஷயங்களில் விரக்தி, ஆசையின்மை மற்றும் பகவானிடம் அஸாதாரண பக்தி ஆகியவை ஒருவனை தகுதியுள்ளவனாக்கும்.
ஆதலால், முதலாக இந்த குணங்களை வளர்க்க வேண்டும். இந்த முயற்சியில் ஒருவன் வெற்றி பெற்று, தன்னை தயாராகிக் கொண்டால் மட்டுமே அவனுக்கு வேதாந்த தத்வத்தை உபதேசிக்க முடியும்.
பழைய காலத்தில், ஒருவன் தத்துவோபதேசத்துக்காக குருவை அணுகினால், குரு அதற்கு அவன் தயாராக இருக்கிறானா என்று சோதித்துவிட்டு, அவன் தயார் நிலையில் உள்ளான் என்று உறுதியான பின் தான் அவனுக்கு உபதேசம் செய்வதுண்டு.
ப்ரசினோபநிஷத்தில், ஆறு சிஷ்யர்கள் (ஸுசேகர், சத்யகாமர் மேலும் சிலர்) குரு பிப்பலாதரை சிக்ஷையாரம்பத்திற்காக அணுகினார்கள். ஆனால் குரு அவர்களை தன்னிடம் வருவதற்கு முன் மற்றும் ஒரு வருடம் தபஸ் செய்ய போகவேண்டும் என்று உத்தரவிட்டார். காரணம் என்னவென்றால், அவர்கள் உபதேசத்திற்கு முற்றிலும் தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்த விரும்பினார். ஒரு வருடம் கழித்த பின் குரு அவர்களுக்கு உபதேசம் அளித்தார். அவர்களும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டு முக்தி அடைந்தார்கள்.
ஆதலால் தத்துவத்தை கற்றுக்கொள்வதன் முன் தேவைகளை எல்லாம் சரியாக கருத்தில் கொண்டு வேண்டிய தகுதியை அடைந்ததற்கு பின் குருவிடமிருந்து வேதாந்தம் பற்றிய உபதேசத்தைப் பெற்று கொள்வது தான் சரியானது. இதன் மூலம் எல்லோரும் குறைவற்ற வாழ்க்கையை நடத்த முடியும்.
தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.