e0af8d-e0ae85e0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">
ஏக் நாதர் விடியற்காலை வழக்கம்போல் எழுந்து விட்டார் ஆஸ்ரமத்தில் இருந்த செடிகளுக்கு நீர் வார்த்துக்கொண்டே விட்டல நாம சங்கீர்த்தனம் செய்தார்.
என்னமோ அவருக்கு திடீரென்று தொண்டை வரண்டது. கழுத்து கொஞ்சம் கொஞ்சமாக வீங்கியது. மிக அழகான குரல் வளம் கொண்டவர் ஆச்சே. ஆனந்தமாக விட்டலன் பஜனை செய்து எப்போதும் தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பவராச்சே. இன்று என்ன நடந்தது? ஏன் திடீரென்று இவ்வாறு ஆனது? பேசவே முடியாதபோது பாடுவது எப்படி?
என்ன காரணம் என்று மனத்தில் ஒரு புறம் கேள்வி எழுந்தாலும் மனத்தின் பெரும் பகுதி காரணம் உலகத்திலேயே ஒன்று தானே. அந்த விட்டலன் தான் சர்வ காரணன். அவன் தான் காரணம், அவன் நடத்துவதே காரியம் என்று கேள்வியை அமுக்கி விட்டது. எனவே ”விட்டலா எல்லாம் உன் செயல்’ என்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களை செய்ய கிளம்பிவிட்டார்
ஓரு நாள் இரவு ஏகநாத்துக்குக் கனவில் இளம் வயதினராக ஞான தேவ் தோன்றினார். ஏக்நாத் காலத்தின் போது ஞான தேவ் இல்லை. அவர் மகா சமாதி அடைந்து முன்னூறு வருஷங்களுக்கும் மேலே ஆகிவிட்டதே. அவரது சமாதி ஆலந்தி என்கிற ஊரில் அல்லவோ இருக்கிறது,
அதுவும் தனிமையான ஒரு குகையில் தானே உள்ளது. அதில் என்ன வேடிக்கை என்றால் ஞான தேவர் சமாதி அடைந்த பிறகு அங்கு ஒரு குகை தோன்றியது நாளடைவில் அது வளர்ந்து அவர் சமாதியை உள்ளடக்கிக் கொண்டது.
மகான்கள் சமாதியை எவரும் அணுகி அங்கு சப்தம் செய்ய கூடாது. குறுக்கும் நெடுக்கும் நடக்கக் கூடாது அவர்களைத் துளியும் தொந்தரவு செய்யாமல் அமைதி காக்க வேண்டும்
அந்த கனவில், ஞானதேவர் தோன்றி ” ஏக்நாதா, என்னைச் சுற்றி இருக்கும் குகையில் ஒரு பெரிய மரம் தோன்றியிருக்கிறது. அதன் வேர்கள் உள்ளே இறங்கி என் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் வந்து அந்த மரத்தின் வேர்கள் என் கழுத்தை சுற்றியிருப்பதை அகற்றி விடுகிறாயா?”
ஞானதேவரின் வேண்டுகோள் ஏகநாத்திற்கு தெய்வத்தின் கட்டளை அல்லவா?
“உத்தவா, இங்கு வா. நீ உடனே நாம் ஆலந்தி கிராமம் செல்ல ஏற்பாடு செய். யார் யார் வருகிறார்களோ அனைவரும் வரட்டும்.”
சிஷ்யன் உத்தவன் உடனே மிருதங்கம் ஜாலரா, சிப்லா கட்டைகள் எல்லாம் எடுத்துக்கொண்டான். ஏக்நாத் விட்டலன் பஜனை செய்து கொண்டு கிளம்பி விட்டார். நிறைய பேர் வழியில் சேர்ந்து கொண்டார்கள். சிலநாள் யாத்திரைக்கு பிறகு ஆலந்தி செல்லும் வழி தென்பட்டது.
போகும் வழியில் சித்தேஸ்வரர் கோவில் பகுதியில் எல்லாம் அடர்ந்த வனப்பகுதி. அந்த காட்டைக் கடந்து தான் ஆலந்தி கிராமம் அடைய வேண்டும். வழி செய்துகொண்டு காட்டுப் பகுதியில் சென்றனர்.
செடி மரம் கொடிகளை அகற்றிக் கொண்டு தான் வழியே செய்து கொள்ளவேண்டும். விட்டல பஜனை செய்துகொண்டே அவர்கள் வழி தயாரித்துக்கொண்டு காட்டின் மையப்பகுதியில் இருந்த ஒரு குகையை கண்டு பிடித்தார்கள்.
அந்த சிதிலமான குகை கனவில் சொல்லியபடியே இருந்தது. ஏக்நாத் அதை சுற்றி வந்து தேடியபோது ஒரு இடத்தில் ஒரு பெரும் பாறை அதன் வாசலை மூடியிருந்ததைக் கண்டு பிடித்தார்.
ஏக்நாத் ஞானேஸ்வர் இயற்றிய ஞானேஸ்வரி ஸ்லோகங்களை உச்சரித்துக்கொண்டே அந்த குகை வாசலை மெதுவாக அகற்றினார் குகையின் இருண்ட வாயிலிலிருந்து உள்ளே செல்ல சில கல் படிகள் இருப்பதை ஏக்நாத் பார்த்தார்.
அவற்றை தொட்டு வணங்கிக் கொண்டே உள்ளே இறங்கினார். குருதேவரின் ஆத்ம ஒளி குகை முழுதும் பளீரென்று வெளிச்சத்தில் காட்டியது.
“ஆஹா, என்ன ஆச்சர்யம்”. உருவமற்ற ஒரு ஒளிப்பிழம்பாக ஞானேஸ்வர் காட்சி அளித்தார். முன்னூறு வருஷங்களுக்கு முன்பு அவதரித்த மகான். சிறந்த விட்டல பக்தர். அவரை சூக்ஷ்ம சரீரத்தில் கண்டு தரிசிப்பது எவ்வளவு பெரிய புண்ணியம், பாக்கியம். ஏக்நாத் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாகப் பொங்கியது
ஒரு சில வேர்கள் உள்ளே அந்த ஒளி வட்டத்தில் காணப்படுவதை ஏக்நாத் கவனித்தார். பல வருஷங்களாக வளர்ந்த அவற்றை மிகுந்த ஸ்ரமத்துடன் வெட்டி அப்புறப்படுத்தினார்.
“மகனே, ஏக்நாத், நான் அந்த வேர்களை வெட்டி அப்புறப்படுத்த உன்னை அழைக்கவில்லை . உன்னை நேரில் காண வேண்டும் என்கிற ஆர்வத்தாலே தான் உன்னை உடனே இங்கு வரவழைக்க அவ்வாறு உன்னிடம் கேட்டேன்.”
“உன்னை இங்கு கொண்டு வந்ததின் நோக்கமே வேறு. கடந்த முன்னூறு வருஷங்களாக நான் இயற்றிய கீதா பாஷ்யம் காலக் கிராமத்தில் இந்தப் பல நூற்றாண்டுகளில் பல பேரால் மாற்றி சொல்லப்பட்டும், சில கருத்துகள் சொல்லாமல் விடப்பட்டும் நான் சொல்லிய கருத்துக்களை முற்றிலுமாக மறைத்தும் மாற்றியமைத்தும் காணப்படுவதால் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பயன் தரவில்லை.
அதை மீண்டும் புதுப்பித்து அதன் சரியான அர்த்தங்களை எளிதில் மக்கள் அறிந்து, புரிந்து, தெரிந்து பயன் அடைய நீ ஏற்பாடு செய்ய வேண்டும். உன் பொறுப்பில் அதை விட வேண்டும் என்பதே என் நோக்கம். “
“நீ செய்ய வேண்டியது என்னவென்றால் நான் இயற்றிய ஞாநேஸ்வரியின் மூலச்சுவடிகளைத் தேடி வரிசைப்படுத்தி நான் எந்த கருத்துகளை அதில் சொல்லியிருக்கிறேனோ அந்த உட்பொருளை நான் எண்ணிய வகையில், எளிமைப்படுத்தி மீண்டும் உருப்பெற செய்யவேண்டும். இது உன்னாலேயே முடியும். மராத்தி மொழிக்கு நீ செய்யும் கடமை இது. புரிந்து கொண்டாயா?” என்றார் ஞானேஸ்வர்.
ஞாநேஸ்வரியை ரசித்து படித்தவர் ஏக நாத். எனவே இந்த ஆனந்தமான அவருக்கு விருப்பமான கட்டளையை சிரமேற் கொண்டு ஏற்றுக் கொண்டார்.
மூன்று நாட்கள் அந்த குகையில் மகான் ஞாநேஸ்வரோடு கலந்து பேசி தனக்கு இருந்த நிறைய சந்தேகங்களுக்கு விடை பெற்றுக்கொண்டார்.
பொங்கும் மகிழ்ச்சியோடு குரு தேவரின் கால்களில் சரணாகதி அடைந்து அவரது ஆசியுடன் மெதுவாக குகையை விட்டு வெளியேறி அந்த குகையின் த்வாரத்தை மீண்டும் கல் பாறையினால் சரியாக மூடினார். அவரது கழுத்தின் வீக்கத்தை காணோம்.
தொண்டையில் எந்த வலியுமில்லை. குரல் கணீரென்று பழையபடி இருந்தது. இந்த மூன்று நாட்களும் அவரது சிஷ்யர்கள் மற்றவர்கள் எல்லோரும் குகை வாசலில் அமர்ந்து விட்டலனின் பஜனையில் மூழ்கி இருந்தனர்.
பிரதிஷ்டான புரம் சென்று அங்கு மிக்க பிரயாசையோடு ஞானதேவர் இயற்றிய ஞானேஸ்வரி மூலத்தின் பிரதி ஒன்று கண்டு பிடித்தார் ஏக்நாத். காலம் காலமாக நடைமுறையில் உலவி வந்த ஞாநேஸ்வரியின் சில ஸ்லோகங்கள் மூலத்திலிருந்து முற்றிலும் மாறியிருந்ததை அறிந்து கொண்டார்.
நிறைய இடைச்செருகல்களும் இடம் பெற்றிருந்தது. மகான் ஞானேஸ்வரின் பெயரில் அவர் இயற்றியதாக காணப்பட்ட எண்ணற்ற இடைச் செருகல்களை நீக்கினார்.
இந்த முயற்சி இடைவிடாமல் ஒரு வருஷத்திற்கும் மேலாக அவரை ஈடுபடச்செய்தது. புத்துயிர் பெற்று, புத்தொளியுடன் ஞானேஸ்வரி, பகவான் ஞானேஸ்வர் எப்படி உபதேசித்தாரோ அவ்வாறே மராத்தி மொழியில் உருவானது. ஏக்நாத்தின் பிரயாசையால் இன்றும் மராத்தியர்களுக்கு வரப்ரசாதமாக அமைந்துள்ளது.
ஏக்நாத் புதுப்பித்த ஞாநேஸ்வரின் “ஞானேஸ்வரி” யையும் அவரையும், விட்டல பக்தர்கள் தலைமேல் தூக்கிக்கொண்டு பண்டரிபுரம் சென்றார்கள். பாண்டுரங்கனின் பாதார விந்தங்களில் ஏகநாதர் ஞானேஸ்வரி உரையை வைத்து ஆசி பெற்றார்.
விட்டலன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அதே சந்நிதியில் நாம தேவர் ஞானதேவர் ஆகியோருடன் உரையாடியதை நினைவு கொண்டு புன்சிரிப்புடன் ஏகநாதரையும் அவர்களில் ஒருவராக மனமார ஏற்றுக்கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமோ.
வழி நடத்தும் மகான்கள்! அருளும் இறைவன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.