e0aea3e0aeaee0af8d-e0aeb5e0aea8e0af8de0aea4e0aeb2e0af8de0aeb2e0af8b-e0aea4e0aebfe0aeb0e0af81e0aeb5e0af8be0aea3e0aeaee0af8d.jpg" style="display: block; margin: 1em auto"> ஓணம் வந்தல்லோ… திருவோணம் வந்தல்லோ! Dhinasari Tamil Sakthi Paramasivan.k
கடவுளின் சொந்த தேசம் என்று கூறப்பட்ட கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை, இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை நேற்று அஸ்தம் நட்சத்திரம் பிறந்ததும் அத்தப்பூ கோலம் மலர, கோலாகலமாகத் தொடங்கியது.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திருவோணம் பண்டிகை கேரளா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருவோணம் பண்டிகை என்பது மகாவிஷ்ணுவின் அவதார தினமான ஆவணி மாதம் திருவோணத்தன்று ஆரம்ப காலத்தில் தமிழர்களால் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு மிகப்பெரிய பக்தி பூர்வமான விழாவாகக் கூறப்படுகிறது.
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே எனும் ஆழ்வாரின் வாக்குக்கு ஏற்ப, திருவோணம் பண்டிகை கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் அந்தக் காலத்தில் உலகளந்த பெருமாள் கோயிலில் தொடங்கி பிரபலமான மகாவிஷ்ணுவின் தலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தற்போது இந்தப் பண்டிகையானது கேரளாவில் வெகு விமர்சையாக திருவோணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்றும் மகாபலிச் சக்கரவர்த்தி வருகைக்காக வரவேற்றும் கொண்டாடப்படும் மிகப் பெரும் பண்டிகை என்றும் கேரளாவில் இந்தத் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திருவோணம் பண்டிகையின் வரலாறு!
இந்து புராணங்களின்படி, அசுரர் குலத்தில் பிறந்தாலும் ஸ்ரீ விஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்த பிரஹலாதனுக்கு, மகாபலி என்ற பேரன் இருந்தான். அவன் சுரர்களாகிய தேவர்களைத் தோற்கடித்து மூன்று உலகங்களையும் கைப்பற்றினான். அதனால் தங்கள் உலகை இழந்த தேவர்கள், மகாபலிக்கு எதிரான போரில் தங்களுக்கு உதவ விஷ்ணுவை அணுகினார்கள். ஆனால் மகாபலி தன் பக்தன் பிரஹலாதனின் வம்சம் என்பதாலும், அவன் வம்சத்தாரைக் காப்பதாக பிரஹலாதனுக்குக் கொடுத்த வாக்கையும் கருதியும், மகாபலி ஒரு நல்ல ஆட்சியாளராகவும் தனது பக்தராகவும் இருந்ததால் விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளை மறுத்துவிட்டார். எனினும் மகாபலி தவறு செய்யும் போது அவரைத் திருத்திப் பணிகொள்வதாக தேவர்களுக்கு வாக்களித்தார்.
மகாபலிக்கு சக்தி அதிகரித்ததால், கர்வம் கூடியது. தானே எல்லாம் என்ற கர்வம் ஏற்பட்ட நேரத்தில் அவரைத் திருத்திப் பணிகொள்ள வாமன அவதாரத்தை எடுத்தார் ஸ்ரீவிஷ்ணு. அந்நேரம் மகாபலி பெரும் செருக்குடன் ஒரு யாகம் செய்தார். அப்போது எவர் வந்தாலும் அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மகாபலியின் பக்தியை சோதிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட விஷ்ணு, வாமனன் என்ற குள்ள சிறுவனின் அவதாரத்தில் மகாபலியை அணுகினார்.
அரசன் மகாபலி, அந்தச் சிறுவனுக்கு தன்னால் இயன்ற அனைத்தையும் வழங்குவதாகக் கூறினார். ஆனால் வாமனச் சிறுவன் மறுத்து, ஒருவன் தனது தேவைகளை விட அதிகமாகத் தேடக் கூடாது என்றும், அவருக்குத் தேவையானது மூன்றடி நிலம் மட்டுமே என்றும் கூறினார். மகாபலி, சிறுவனின் விருப்பத்தால் ஆச்சரியப்பட்டாலும், அதை வழங்க ஒப்புக்கொண்டு நீரில் தாரை வார்த்து வழங்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் சிறுவனாக வந்த வாமனர் திடீரென நெடிய வளர்ந்து, நிலத்தையும் நீரையும் ஒரு காலால் மூடி, மற்றொரு காலால் வானத்தையும் மூடி, இப்போது தன் மூன்றாவது அடியை வைக்க இடம் தேட, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மகாபலி தன்னைத்தானே அவருக்கு வழங்க முன்வந்தார். அதனால் வாமனர் மகாபலியின் சிரத்தில் பாதம் வைத்து அவரைப் பாதாளத்தில் தள்ளி விட்டார். அதன் மூலம் இவ்வுலகை மக்களுக்கும், வானுலகை தேவர்களுக்கும் மீட்டுக் கொடுத்தார். ஆனால் மகாபலியின் பக்தியால் மகிழ்ந்த ஸ்ரீவிஷ்ணு, ஒவ்வோர் ஆண்டும் தனது நிலத்திற்குச் செல்ல வரம் அளித்தார். இவ்வாறு தான் மகாபலிக்கும் திருவோணத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதன்படி, மகாபலியின் மறு வருகை இந்த ஓணம் பண்டிகையைக் குறிக்கிறது!
இந்தப் புராண வரலாற்றின் படி, மகாபலி சக்கரவர்த்தி மலையாள தேசத்து மக்களை மலையாள புத்தாண்டு என அழைக்கப்படும் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் பிறந்தது முதல் திருவோணம் வரை பல்வேறு இடங்களில் பார்க்க வருவதாக மலையாள தேசத்து மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இதனால் அஸ்தம் நட்சத்திரம் பிறந்த நேற்று முதல் கேரளாவில் பல்வேறு கோவில்கள் மற்றும் பொது இடங்கள், வணிகத் தலங்களில் அத்தப்பூ கோலமிட்டு மன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவானது கேரளாவில் எர்ணாகுளம் அருகில் உள்ள திருப்புணித்துறையில் மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. பார்க்கும் இடமெல்லாம் அத்த பூக்கோலங்கள் வழியாக, மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது!
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், அச்சன்கோவில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் உட்பட முக்கிய கோவில்களில் திருவோணம் பண்டிகை விழாக்கள் முக்கிய முக்கியமான அத்தப்பூ கோலம் இடும் நிகழ்வு நடைபெற்றது.
எர்ணாகுளம் அருகில் உள்ள திருப்பூணித்துறாவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவில் உள்ளது. இங்கு தான் மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்டு பின் அவருக்கு அனுக்கிரகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இங்கே உலகளந்த பெருமாள் ஆகவும் மகாவிஷ்ணு இருப்பதாகக் கூறப்படுகிறது!
இக்கோவிலில் நேற்று அஸ்தம் பிறந்ததும் திருவோணத் திருவிழா தொடங்கியது. 10 நாட்களில் நடைபெறும் இந்தத் திருவிழா மிகப் பிரபலமானது. சபரிமலை குருவாயூர் உட்பட கேரளாவின் முக்கியக் கோவில்களில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று திருவோணம் பண்டிகை கொண்டாட்டத்தில் பக்தர்களுக்கு திருபுவன விருந்து 26 வகை பதார்த்தங்களுடன் பரிமாறப்படுவது முக்கிய நிகழ்ச்சியாகும்!
ஓணம் வந்தல்லோ… திருவோணம் வந்தல்லோ! News First Appeared in Dhinasari Tamil