e0af8d-e0ae9ae0af80e0aeb0e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 165
உயிர்க்கூடு விடும் – பழநி
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
மூவர் பாடல் பெற்ற தலம். தருமையாதீனத் திருக்கோயில். மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்தடிகள் நம்பியாண்டார் நம்பிகள், அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், அருணாசலக்கவிராயர் முதலியோர் சீகாழியின் சிறப்பையும் ஞானசம்பந்தரின் பெருமையையும் பல படப் புகழ்ந்து பாடியுள்ளார்.
கிழக்கு ராஜகோபுரம் பிரதானவாயில். இடப்பால் அலுவலகம் உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்வாயிலில் வெளிப்புறம் ‘தோடுடைய’ பதிகம் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். விபூதிப்பட்டையும், பட்டும் சார்த்தித் தரிசிக்கும்போது கம்பீரமான தோற்றம் மனத்திற்கு நிறைவாக இருக்கிறது.
மூலவர் – பிரமபுரீஸ்வரர். பக்கத்தில் திருஞானசம்பந்தர் சந்நிதி உற்சவத்திருமேனியுடன் (கையில் பாற்கிண்ணம் ஏந்தி நின்ற நிலையில்) உள்ளது. கருவறை வெளிச்சுவரில் ஞானசம்பந்தர் வாழ்க்கைச் சிற்பங்கள் ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது, சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது.
மலைப்படிகளேறிக் கட்டு மலையின் மீது சென்றால், ஞானப்பாலைத்தந்தருளிய தோணியப்பரைத் தரிசிக்கலாம். இச்சந்நிதி கயிலாய அமைப்பிலுள்ளது. இங்குள்ள சாளரத்தில் நின்று பார்த்தால் (சற்றுச்சாய்வாக) பிரமதீர்த்தக் குளம் தெரிகிறது. ‘பிரமாபுரம் மேவியபெம்மான் இவன்’ என்று சம்பந்தர் சுட்டிக்காட்டிய அமைப்பு நினைவு கூரத்தக்கது.
அதற்கும் மேலேறிச் சென்றால் சட்டையப்பரைத் தரிசிக்கலாம். சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. இம்மூர்த்திகரம் தனிச்சிறப்புவாய்ந்தது, இச்சந்நிதி உயர்த்தில் உள்ளது. குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும்.
ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள், தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப் பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றுகிறது.
வாரத்தில் ஒருநாள் – வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குமேல் அர்த்தசாமம் முடிந்தவுடன் இதற்குப் புனுகு எண்ணெய் சார்த்தி, நெய்யில் செய்த வடை, பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. நித்தியப்படி நெய்தீபமே ஏற்றப்படுகிறது.
இப்பெருமானுக்குச் சட்டையப்பர், சட்டைநாதர், வடுகநாதர் எனப்பல பெயர்களுண்டு. சட்டைநாதரைப் தரிசித்துக் கீழிறங்கி வலமாக வரும்போது மூங்கில்கன்றும் அதன்பக்கத்தில் பாரிசாதமும் உள்ளதைக் காணலாம். அடுத்துத் தேவேந்திரலிங்கம், நவக்கிரகம், பிரமபுரீஸ்வரலிங்கம் உள்ளன. பிரமதீர்த்தக் குளம் முதன்மை வாய்ந்த தீர்த்தமாகும்.
முன்னால் வளைவு போடப்பட்டு, அதன் இருபுறங்களிலும், பிரமன் வழிபடுவது, தந்தையாகிய சிவபாத இருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியப்பரைச் சுட்டுக் காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிப்பது முதலியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன.
பிராகாரத்தில் திருஞானசம்பந்தர் மூலச்சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி – நின்ற திருக்கோலம் – மனநிறைவான தரிசனம். இச்சந்நிதி உள்மண்டபத்தில் சலவைக் கற்களில் திருஞானசம்பந்தர் பதிகமும், மகாவித்துவான் மீனாடசி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சீகாழிக் கோவைப் பாடல்களும் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
சீகாழி அருணாசலக் கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். ‘திருக்கழுமல மும்மணிக்கோவை’ பட்டினத்தடிகளால் பாடப்பட்டது. ஞானசம்பந்தர் மீது மும்மணிக் கோவை, திருச்சண்பை விருத்தம், திருத்தொகை திருவந்தாதி, திருவுலாமாலை, திருக்கலம்பகம் முதலிய பிரபந்தங்களை நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ளார்.
காழிக்குமரவேளைச் சிறப்பித்துப் பாடியுள்ள திருப்புகழும் உள்ளது. இத்தலத்தில் வாழ்ந்த மகான்களில்
1. உலகத் தீமைகளைப் பார்க்க விரும்பாது மச்சைவிட்டு இறங்காமல் மேலேயே தங்கி வாழ்ந்து, மறைஞானசம்பந்தரிடம் அருளுபதேசம் பெற்ற மச்சுச்செட்டியார்
2. ‘சிவப்பிரகாசம்’ நூலுக்குக் கொளுச் சூத்திரம் எழுதியவரும் காழிப்பழுதை கட்டிச் சிற்றம்பலநாடிப் பாண்டாரம் என்னும் பெயர் உடையவருமான சீகாழிச் சிற்றம்பல நாடிகள்
3. ‘ஒழிவில் ஒடுக்கம்’ நூலைப்பாடிய சீகாழிகண்ணுடைய வள்ளலார்
4. ‘காழிப்புராணம்’ ‘காழிப்பள்ளு’, காழி அந்தாதி’ ‘இராமநாடகக் கீர்த்தனை’ முதலிய நூல்களைப் பாடிய சீகாழி அருணாசலக்கவிராயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன், வீரராசேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் ஆகிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
இவற்றின் இறைவன் பெயர்
1. திருக்கழுமலம் உடையார்
2. திருத்தோணிபுரம் உடையார் எனவும், ஞானசம்பந்தரின் பெயர் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப்பெறுகின்றது.
தலத்தின் பெயரை ‘ராஜராஜவள நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இத்தலத்தில் உள்ள, திருஞானசம்பந்தர் அவதாரம் செய்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களால் நினைவாலயமாகப் போற்றப்பட்டு வருகின்றது.
திருப்புகழ் கதைகள்: சீர்காழி! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.