இக்கோயிலில் மாசித் திருவிழா இம் மாதம் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிறப்பம்சமாக ஞாயிற்றுக்கிழமை இரவு சிவன் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் 6 ஆம் நாளான திங்கள்கிழமை இரவு சுவாமி வெள்ளித்தேரிலும் அம்மன் இந்திர விமானத்திலும் வீதி உலா வந்து சிவன் கோயில் அடைந்தனர்.
7 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்திலிருந்து சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை 4.3 0 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி பக்தர்களுக்கு காட்சிஅளித்து வீதி உலா நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளுலும், பகலில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேருதலும் நடைபெறும்.
மாசித் திருவிழாவையொட்டி முன் எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு காவடிகள் ஏந்தியும் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மாசித் திருவிழாவின் முக்கியத் திருநாளான பத்தாம் திருநாள் தேரோட்டம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. 19 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.