நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா

செய்திகள்

தமிழகத்திலுள்ள மாரியம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் திருக்கோயில். இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை தினத்துக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை மாசிப் பெருந்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை தீரவேண்டும் என்ற நோக்கில், இந்த ஆண்டு தை மாதம் அமாவாசைக்கு அடுத்த முதல் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டும் விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நத்தத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கரந்தமலையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். நத்தம் எல்லையில் உள்ள அரண்மனை சந்தனக் கருப்பு கோயிலில் தீர்த்தம் கொண்டு வந்த இந்த பக்தர்களை, கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள், ஊர் பெரியவர்கள் மேளதாளத்துடன் எதிர்கொண்டு வரவேற்று, ஆலயத்துக்குள் அழைத்து வந்து தீர்த்த அபிஷேகம் செய்தனர்.

பின்னர் தொடங்கிய காப்பு கட்டும் விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, காப்புகளைக் கட்டி நேர்ந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் ஸ்தாபிதம் விழா நடைபெற்றது.

தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் நகர் புறப்பாடு நடைபெறும். இதைத் தொடர்ந்து, வரும் 22-ம் தேதி சுமார் 60 அடிக்கும் உயரமான கழுமரம் ஏறும் புகழ்பெற்ற நிகழ்ச்சியும், பிறகு பூக்குழி விழாவும் நடைபெறுகின்றன.

திருவிழாவின் 15-ம் நாளில், ஸ்தாபிக்கப்பட்ட கம்பம் மீண்டும் அம்மன் குளத்தில் கொண்டு விடுவதுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது.

விழாக் காலத்தில் பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்து மஞ்சள், வேப்பிலை நீரைக் கொண்டு வந்து நாள்தோறும் கம்பத்துக்கு அபிஷேகம் செய்வர். நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல், திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

இந்தாண்டு, 40 ஆயிரம் பேர் காப்பு கட்டி விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373806

Leave a Reply