To Read in Indian languages…
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றது. வழக்கம்போல் செழுமையை குறிப்பிடும் வகையில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த வைபவத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் அழகருடன் சேர்ந்து வைகை ஆற்றில் இறங்கி அருள் பெற்றார்கள்.
மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8 வரை 16 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உற்சவங்கள் களைகட்டும். சித்திரை திருவிழாவின் நாயகராக கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கி மக்களுக்கு அருள் பாலிக்கிறார் .
வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக மே 4ம் தேதி கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து தங்கக் குதிரையில் புறப்பட்டார். கள்ளழகருக்கு மூன்று மாவடியில் எதிர் சேவை நடந்தது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக ஆற்றின் மையப் பகுதியில் அமைந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் எழுந்தருளால் நிகழ்வுக்காக கள்ளழகர் இன்று காலை 6 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
இந்த வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கள்ளழகர் உடன் சேர்ந்து வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது வாராரு அழகர் வாராரு பாடல்களுடன் உற்சாக ஆடல் பாடல்களும் இருந்தன. அழகரின் அலங்காரத்துக்கு ஏற்ப அன்பர்களின் கோஷம் வைகை ஆற்றை அலங்கரித்தது.
இதன் பின், நாளை 6ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும், ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறும். பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். மே 8 ம்தேதி அழகர் பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு திரும்புகிறார்.
முன்னதாக, மதுரை நாயகி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்வு ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. மே 1ல் மீனாட்சி திக் விஜயமும், அடுத்த நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் கோலாகலமாக நடைபெற்றது. மே 3 நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தார்கள்.