நெல்லையப்பர் கோயில் உடையவர் லிங்கம் மரகத லிங்கமா? விளக்கம் அளிக்க வேண்டும்!

செய்திகள்
nellaiyappar temple shivlinga pooja - Dhinasari Tamil

வருடத்தில் 8 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு காட்சிதரும் நெல்லையப்பர் திருக்கோவில் உடையவர் லிங்கம் மரகதலிங்கம் என செய்திகள் வெளியாகிய நிலையில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது.

நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது . பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் 27.3.2023. முதல் 3.4.2023 வரை தினமும் மாலை சாயரட்சை பூஜை (மாலை 5.30 – 6) காலத்தில் நெல்லையப்பர் கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர் லிங்கம் கருவறையிலிருந்து வெளிவந்து பங்குனி உத்திர திருவிழா காலத்தில் மட்டுமே உத்ஸவ மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் மண்டபத்தின் முகப்பில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறும்.

இந்த பங்குனி உத்திர திருவிழா நாட்களின் சாயரட்சை காலத்தில் மட்டுமே இந்த உடையவர் லிங்கத்தை பக்தர்களாகிய நாம் தரிசிக்க முடியும். இந்த உடையவர் லிங்கம் மரகதலிங்கம் என செய்திகள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் இது மரகதலிங்கமாக இல்லாத நிலையில் அவ்வாறு தவறாக செய்தி பரப்பப்படுவது, கோவில் ஊழியர்களுக்கும் அர்சகர்களுக்கும் பிற்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். மரகதலிங்கம் எங்கே என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் மரகதலிங்கமாக இருப்பின் அதனை உரிய முறையில் ஆவணப்படுத்தி பாதுகாப்புடன் பூஜை செய்ய வேண்டும் இல்லையெனில் அதனை மாற்றிவிடக் கூடும்.

இது குறித்து நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply