ஆழ்வார்திருநகரி

ஆலய தரிசனம்

பஞ்சக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது இந்தத் தலம். காரணம், பூமியில் உள்ள ஹரி க்ஷேத்திரங்களுள் முதலில் நாராயணன் இங்கே அவதரித்ததால் இது ஆதிக்ஷேத்திரம் எனப்படுகிறது பெருமான் ஆதிநாதர் என அழைக்கப்படுகிறார். ஊழிக்காலத்தில் அழிக்கப்பட்ட பூமியை வராக ரூபம் எடுத்து மீட்ட தலம் என்பதால் இது வராக க்ஷேத்திரம். ஆதிசேஷனே உறங்காப் புளிய மரமாகவும், ஆதிபிரானே நம்மாழ்வாராகவும் கோயில் கொண்ட தலமாக இருப்பதால் இது சேஷ க்ஷேத்திரம். தாமிரபரணி ஆறும், திருச்சங்கானித் தீர்த்தமும் இருப்பதால் இது தீர்த்த க்ஷேத்திரம். தன் மேல் பக்தியுடன் இருக்கும் தாந்தன் என்ற கடையனைக் கண்டு இந்திராதி தேவர்கள் இகழ்ந்து பேசினர். இதனால், அவர்கள் பெருமாளின் கோபத்துக்கு ஆளானார்கள். அதன்பிறகு தேவர்கள் தாந்தனிடம் சென்று, தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். பெருமாள் பின்னர் தேவர்களை மன்னித்தார். தாந்தனுக்கும் மோட்சம் அளித்தார். எனவே இது தாந்த க்ஷேத்திரம். பிரம்மனைப் படைப்பதற்கு முன்பே மகாவிஷ்ணு இங்கே வந்து கோயில் கொண்டார். பிரம்மா தன் படைப்புத் தொழிலைச் செய்யும் போது அவருக்கு ஐயம் ஏற்பட்டது. அந்த ஐயங்களைப் போக்க, இத்தலத்தில் வந்து தவம் புரிந்தா. அவரை ஆதிநாதர் தெளிவு பெறச் செய்தார். திருமாலே குருவாக வந்து பிரம்மனுக்கு அருள் புரிந்ததால் இது குருகா க்ஷேத்திரம். அந்தப் பெயரே மாறி, திருக்குருகூர் என அழைக்கப்பட்டது.

நம்மாழ்வார், மணவாளமாமுனிகள் ஆகியோர் அவதரித்த தலம். நம்மாழ்வார் இங்குள்ள புளிய மரத்தடியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்களை முறையே தமிழில் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி ஆகியவையாக வெளிப்படுத்தினார். எனவே வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்பட்டார். அவர் வீற்றிருக்கும் இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இது 5,100 ஆண்டுகள் பழைமையானது எனப்படுகிறது.

இங்குள்ள நம்மாழ்வாரின் விக்ரஹம் மதுரகவி ஆழ்வாரால் தாமிரச்சத்து மிகுந்த தாமிரபரணி நீரைக் காய்ச்சி எடுக்கப்பட்ட செம்பாலான விக்கிரஹமாகும்.

ஆண்டு முழுவதும் இங்கே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. நான்கு தேர்கள் உள்ளதால் நான்கு முறை தேரோட்டம் நடைபெறுகிறது. வைகாசி உத்திர நட்சத்திரத்தன்று தொடங்கும் பிரம்மோற்ஸவத்துக்கு நவதிருப்பதியின் ஒன்பது பெருமாள்களும் தங்கள் தங்கள் கருட வாகனங்களில் நம்மாழ்வாருக்கு அருள்புரிய அவரைத் தேடி இங்கு வருவர். இது தனிச்சிறப்பான ஒன்று.

மற்ற பெருமாள் கோவில் கருடன் பெருமானை சேவித்துக் கொண்டிருக்க, இங்கே மட்டும் கருடன் சங்கு சக்கரத்துடன் அபய ஹஸ்தத்துடன் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தலத்தில் அரையர் சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பெருமானை வணங்கினால், திருமணத் தடை, தொழில் தடை அகலும். வியாழ தோஷம் நிவர்த்தி ஆகும்.

தலத்தின் பெயர் : ஆழ்வார் திருநகரி

அம்சம் : வியாழன் (குரு)

மூலவர் : ஆதிநாதன்

உற்ஸவர் : பொலிந்து நின்ற பிரான்

தாயார் : ஆதிநாத நாயகி , திருக்குருகூர் நாயகி

இருப்பிடம் : திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் உள்ளது.

நடை திறக்கும் நேரம் காலை 07 – 12 – மாலை 5 – 8

தரிசன உதவிக்கு: ஆழ்வார் திருநகரி – பார்த்தசாரதி 0463 9 – 273588

Leave a Reply