அறப்பளீஸ்வர சதகம்: தகாத சேர்க்கை!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

தகாத சேர்க்கை

பூததயை இல்லாத லோபிய ரிடத்திலே
பொருளைஅரு ளிச்செய் தனை!
புண்ணியம் செய்கின்ற சற்சன ரிடத்திலே
பொல்லாத மிடிவைத் தனை!
நீதியகல் மூடர்க் கருந்ததி யெனத்தக்க
நெறிமாத ரைத்தந் தன்னை!
நிதானம்உள உத்தமர்க் கிங்கிதம் இலாதகொடு
நீலியைச் சோவித் தனை!
சாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று
தாழ்ந்துபர வச்செய் தனை!
தமிழருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்
தாம்பாட வேசெய் தனை!
ஆதரவிலாமல்இப் படிசெய்ததென் சொலாய்?
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

குற்றம் அற்றவனே! எமது தேவனே!,
உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சரிடத்திலே செல்வத்தைக்
கொடுத்தருனினை, நன்மை புரிகின்ற நல்லோரிடம் கொடிய வறுமையைக்
குடியாக்கினாய், அறத்தின் நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி
போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், அமைதியான
நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக்
கூட்டிவிட்டாய், உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின்
பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழின் இனிமையைக்
காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இவ்வாறு ஒருவர்க்கொருவர்
பற்றில்லாமற் பண்ணினது ஏன்? கூறுவாயாக.

நீலி – வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு
வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்
செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்
மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்
பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்
மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்
ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள்.
இவ்வாறு ஒரு கதையுண்டு.

ஒற்றுமைப் பண்பில்லாதவர் ஒருங்கே வாழ்தல் அரிது.

Leave a Reply