திருமாலின் 12 திருநாமங்கள்
அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்துக்கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து, அவரை 100, 1000, லட்சம் அல்லது கோடி திருநாமங்களால் போற்றி கொண்டாடுகிறோம்.
இத்தனை திருநாமங்களில் இவருக்கு மிகவும் பிடித்தமான திருநாமம் எது என்பதையும் ஏன் அவருக்கு அந்த நாமம் பிடித்திருக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
திருமாலுக்கு கோடி நாமங்கள் சொல்லி போற்றுகிறோம். அவற்றுள் பிடித்தது லட்சம் நாமங்கள். அவற்றுள் பிடித்தது சஹஸ்ர நாமங்கள், அந்த சஹஸ்ர நாமங்களில் பிடித்தது அஷ்டோத்தரசத நாமங்கள். இவற்றுள் பன்னிரெண்டு நாமங்கள் சிறந்தவைகளாகும் அந்த 12 நாமங்கள்:
1) கேசவா, 2) நாராயணா, 3) மாதவா, 4) கோவிந்தா, 5) விஷ்ணு, 6) மதுசூதனா, 7) திரிவிக்ரமா, 8) வாமணா, 9) ஸ்ரீதரா, 10) ரிஷிகேஷா, 11) பத்மநாபா, 12) தாமோதரா.
இந்த பன்னிரெண்டு திருநாமங்களிலும் திருமாலுக்கு மிகவும் சிறந்தது, மிகவும் பிடித்தது என்று சொல்லப்படுவது கோவிந்தா என்னும் திருநாமம் தான். ஏனெனில் இந்த கோவிந்தா என்ற திருநாமத்திற்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகள்:
1) கோ – கடலுக்குள்ளே மறைக்கப்பட்ட வேதங்களை மீட்டெடுத்ததால் கோவிந்தா என அழைத்தனர்.
2) கோ – பர்வத மலை தரையில் புதையாமல் காத்தவர் என்பதால் கோவிந்தா என அழைத்தனர்.
3) கோ – நிலைமாறிய பூமியை நிலைபெறச் செய்தவர் என்பதால் கோவிந்தா என்றனர்.
4) கோ – சனகாதிகள் மற்றும் சப்தரிஷிகள் வேண்டுகோளின் படியும், நரசிம்மர் தோற்றத்தின் போது பக்தனின் சொன்ன சொல் காக்கவும் வந்தவர் என்பதால் கோவிந்தா என்றனர்.
5) கோ – விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மண்ணிலிருந்து விண்ணை அளந்து நின்றதால் கோவிந்தா என்றழைத்தனர்.
6) கோ – க்ஷத்திரியர்களை அடக்கியவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர்.
7) கோ – ஆயுதங்கள், 50 வகையான அஸ்திரம்,சஸ்திரம் உள்ள வானூர்தியை இந்திரனால் பெறப்பட்டவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர்.
8) கோ – சமுத்திரத்தை கலக்கி பூமியைக் கிழித்தவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர்.
9) கோ – மஹாலட்சுமி திருமாலிடம் கோபித்துக் கொண்டு சென்றுவிட அனைத்து சம்பத்துக்களும் இழந்த நிலையில் திருமால் தன் வைகுண்டத்தை விட்டு ஸ்ரீநிவாசராக பூமியில் எங்கெங்கோ சுற்றி திரிந்து பசி களைப்பில் ஒரு முனிவரிடத்தில் அவரிடமிருந்த பசுக்களில் ஒரு பசுவை அதன் பாலை அருந்தி தன் பசியை போக்கிக் கொள்ளும் பொறுட்டு தனக்கு தானமாக தரும்படி வேண்ட முனிவரும் நீங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் என்பதை வினவ மிருந்த பசி களைப்பில் தான் யாரென்றே தெரியாவில்லை என்றபடி பதில் அளிக்க சரி பரவாயில்லை இங்கேயே இருங்கள் என்று உள்ளே சென்று நீர் நிறைந்த செம்பை எடுத்து வருவதற்குள் ஸ்ரீநிவாசர் தன்னை கலி துரத்தி வருவது போல் உணர அவர் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கிறார்.
அப்போது வெளியே வந்து பார்த்த முனிவர் ஐயா கோ(பசு) இந்தா, கோ இந்தா, கோ இந்தா என்று பின்னாலேயே முனிவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே செல்ல அந்த முனிவர் கூறிய வார்த்தை ஸ்ரீநிவாசருக்கு ‘கோவிந்தா’ என்று காதில் விழுந்தது. முனிவரின் கோவிந்தா என்று அழைத்த அந்த வார்த்தையே தனக்கு பிடித்தமானதாக கருதியதால் அனைவரும் கோவிந்தா என அழைத்தனர். அதுமட்டுமல்ல பசுக்களை ரட்சிப்பவர் என்பதாலும் கோவிந்தா என்றனர்.
10) கோ – கலியுக தோஷம் நீக்குபவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர்
11) கோ – விருப்பு, வெறுப்பின்றி அனைவரையும் காத்து ரட்சிப்பவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர்.
12) கோ – வல்வினையை போக்கி வருவினையை தடுத்து காத்தருளும் ஆற்றலை உடையவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர்.
ஆக இப்படிப்பட்ட மகிமை பொருந்திய மந்திரச் சொல்லான “கோவிந்தா” என்பது அந்த திருமாலுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.