ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் புண்ணியமானது. அதே சமயம் மனிதனின் உயிரை எடுப்பது மகாபாபம்.
இந்த சத்யத்தை புரிந்து கொள்ளாமல் பல மனிதர்கள் மற்றவர்களை ஹிம்சிப்பதை பார்க்கும் பொழுது மனதுக்கு வருத்தம் உண்டாகிறது.
எவ்வளவு படித்தாலும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த மாதிரி மனிதர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள் தான்.
நம் கலாச்சாரத்தில் முதல் உபதேசம் ‘யாரையும் ஹிம்சை செய்யக்கூடாது’ என்பதுதான்.
துஷ்யந்த மஹாராஜா ஒரு ஆசிரமத்தில் மானை சம்ஹரிக்கப் போன சமயம், அந்த ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் அவரைத் தடுத்தார்கள். உடனே அந்த ராஜா அந்த காரியத்தை நிறுத்தினார் .
ஒரு சிறிய மான் குட்டியை கூட சம்ஹரிக்கக் கூடாது என்று கூறும் பொழுது ஒரு மனிதனின் பிராணனை எடுப்பது எப்படி நியாயம் ஆகும்?
ஒருவனுக்கு வேறு எந்த உதவி செய்யாவிட்டாலும் அவனை ஹிம்சை செய்யாமல் இருந்தாலே அது மிகவும் உசிதமாகும்.
இதை நீதி சாஸ்திரங்களில் ப்ராணகதான்னிவிருத்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கும் படியான பாபம் செய்வதற்கு, கோபம் தான் காரணமாக இருக்கிறது. அதனால் தான் கோபத்தை மனிதனின் சத்ரு என்று சாஸ்திரங்கள் கூறுவதுண்டு.
அந்த கோபத்தை ஜெயித்துவிட்டால் கோபத்தால் ஏற்படும் தவறுகள் நடக்காது.
ஆகையால் மனிதனும் கோபத்தை ஜெயித்து, அதன்மூலம் உண்டாகக்கூடிய பாவங்களைச் செய்யாமல் எல்லோரிடமும் அன்புடன் நடந்தால் அவனுடைய வாழ்க்கை பவித்திரம் ஆகிவிடும்.
எல்லோருக்கும் இப்படி பவித்ரமான வாழ்க்கை நடத்தும் சக்தி உண்டாகட்டும்
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்