ஆடலரசுக்கு ஆனித்திருமஞ்சனம்!

கட்டுரைகள்

தில்லை மரங்கள் அடர்ந்திருந்த வனத்தில் அரங்கேறிய சிவனின் ஆனந்தத் தாண்டவத்தை எவ்வாறு புராணங்கள் இயம்புகின்றன என்று பார்ப்போம். வலது கையில் டமருகத்தை அடித்துக் கொண்டும், மற்றொரு கையில் அபயம் கொடுத்துக் கொண்டும், இடக் கையில் அக்னியை வைத்துக் கொண்டும், பிரிதொரு கையால் தமது குஞ்சித பாதத்தைக் காட்டிக் கொண்டும், வலது காலை முயலகன் முதுகின் மேல் வைத்துக் கொண்டும், குஞ்சித பாதம் என்கிற இடது காலைத் தூக்கிக் கொண்டும், திருச்சடைகள் எட்டுத் திக்கிலும் விரிந்தாட, தேவ துந்துபிகள் ஒலிக்க ஆனந்த நடனம் செய்தார் நடராஜர். அவரது கால்களில் வேதச் சிலம்புகள் ஒலித்தன.

இந்த ஆனந்த நடனத்தை அன்னை உமையவள், மஹா விஷ்ணு, பிரம்மா, இந்திராதி தேவர்கள், மகரிஷிகள், தில்லை முனிவர்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, ஆதிசேஷன் முதலியோர் கண்டு களித்தனர். இவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த சிவபெருமான் சகல ஜீவராசிகளும் உய்யும் பொருட்டு எப்பொழுதும் எல்லா யுகங்களிலும் நடனமாடுகிறார். இதனை உணர்த்தும் பொருட்டுதான் மாணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “”முன்னைப் பழம் பொருட்கும், முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனே’ என்று பாடியுள்ளார்.

இதய பாகமான சிதம்பரம்!

சைவத்தில் “கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊரின் பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். பஞ்ச பூதத் தலங்களில் இது ஆகாயத்தலம். இவ்வுலகத்தை புருஷ வடிவமாக உருவகப்படுத்தி, அதற்கு இதய பாகமாக சிதம்பரத்தைக் கூறுவார்கள்.

நடராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ள இவ்வாலயத்தில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராச சபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன. நடராஜப் பெருமான் திருமேனி யாகாக்னியிலிருந்து ஜோதி ஸ்வரூபமாக தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பர். ஆடல் வல்லானின் ஆலயத்தில் நடராஜப் பெருமானுக்கு ஒரு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அவை சித்திரை மாதம் – திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் – உத்திர நட்சத்திரம், ஆவணி-பூர்வ பட்ச சதுர்த்தசி, புரட்டாசி-பூர்வபட்ச சதுர்த்தசி, மார்கழி- திருவாதிரை, மாசி- பூர்வபட்ச சதுர்த்தசி என்பனவாகும்.

வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் முறையே உத்திராயணத்தில் ஆனி மாதத்திலும், தட்சிணாயணத்தில் மார்கழி மாதத்திலும் நடைபெறுகின்றன. ஆனி மாதத்தில் நடைபெறும் உற்சவம் “ஆனித் திருமஞ்சன மகோத்சவம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்தில் முதல் ஏழு நாட்களில் சப்தவிடங்க தலங்களில் பூஜிக்கப்படுகின்ற தியாகேசரே சோமாஸ் கந்தராகவும், எட்டாம் திருநாளில் அட்ட வீரட்டானத்தில் பூஜிக்கப்படுகின்ற பைரவரே பிட்சாடனராகவும் காட்சியளிக்கின்றனர்.

எட்டாம் திருநாள் காலை மாணிக்கவாசகப் பெருமானின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. ஒன்பதாம் திருநாளும், பத்தாம் திருநாளும் எம்பெருமான் ஆனந்த நடராஜரே சர்வ ஆபரண அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். அதிகாலை 3 மணிக்கு சகல திரவிய மகாபிஷேகமும் (திருமஞ்சனம்) கண்டு அருள்கிறார்.

அந்த வகையில் வருகிற 28-ஆம் தேதி சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 5-ஆம் தேதி பிட்சாடணமூர்த்தி தங்க ரத வீதி உலாவும், 6-ஆம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெறுகின்றன. 7-ஆம் தேதி ராஜசபை என்று சொல்லப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 3 மணிக்கு ஆனித் திருமஞ்சன மகா தரிசனம் காணலாம். 9ஆம் தேதி தெப்போற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்

வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்

பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே

– என்று திருநாவுக்கரசர் பாடி அருளியவாறு ஆடல்வல்லானின் உருவத்தை மனதில் இருத்தி, அவன் திருவடிகளைச் சரணடைவோம்.

கட்டுரை: வெள்ளிமணி

Leave a Reply