e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-3-2.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 3
இவா பேசற பாஷையே எனக்குப் புரியல
– வேதா டி. ஸ்ரீதரன் –
சென்னைக்கு வந்த சில வருடங்களுக்குப் பின்னர், ஆர்எஸ்எஸ்., முழு நேரப் பணியில் இருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.
வாழ்வாதாரத்துக்காக, சிலருடன் சேர்ந்து ஶ்ரீசக்ரா என்ற ஒரு வியாபாரம் ஆரம்பித்தேன். இது அச்சுப் பணி தொடர்பானது. ஆஃப்ஸெட் ப்ரின்டிங்குக்குத் தேவையான ஃபிலிம்கள் எடுத்துத் தரும் மையம் இது. மேலும், ப்ரின்டிங் ஆர்டர் எடுத்து அச்சிட்டுத் தரும் வேலைகளையும் செய்து வந்தோம்.
செய்து வந்தோம் என்று சொல்வதை விட, செய்வது என்று தீர்மானித்திருந்தோம் என்று சொல்வதே சரி. ஏனெனில், எந்த ஆர்டரும் கிடைக்காமல், அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டப்படும் நிலையில் இருந்தோம்.
அண்ணாவின் ஒன்று விட்ட தம்பியான கண்ணன் என்பவருடன் எனக்கு ஏற்கெனவே அறிமுகம் உண்டு (இவரைப் பற்றி நேற்றைய பதிவில் சொல்லி இருந்தேன்.) அவர் திவ்ய வித்யா ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளை மூலம் அண்ணாவின் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும், அந்த நூல்களை அச்சிடுவதில் அவருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதும் அப்போது தெரிய வந்தது. அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னை அண்ணாவிடம் அழைத்துச் சென்றார்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்று ஞாபகம். அண்ணா, பாண்டி பஜாருக்கு அருகே தனது அக்கா இல்லத்தில் இருந்தார். காரில் போகும் போது கண்ணன் அண்ணாவைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசிக் கொண்டே வந்தார்.
அமெரிக்காவில் வசித்து வந்த ஒரு பக்தருக்குத் திடீரென மனநிலையில் ஏதோ பெரிய பாதிப்பு. இதன் விளைவாக அவர் சுயநினைவை இழந்து விடுவார். அந்தச் சமயத்தில் புத்தகங்களில் இருந்து பக்கங்களைக் கிழித்துச் சுருட்டிச் சுருட்டிப் போட்டுக் கொண்டே இருப்பாராம். சில நாட்கள் தொடர்ச்சியாக இதேபோல இருப்பது, பின்னர் இயல்பு நிலை என்று மாறி மாறி இந்த மனோவியாதி தொடரவே, அவர் வேலையை ராஜினாமா பண்ணி விட்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்து விட்டார்.
சென்னையில் உமேஷ் அவர்களைச் சந்தித்துத் தன்னுடைய பிரச்னையை முறையிட்டார். உமேஷ் அவரை அண்ணாவிடம் அனுப்பி வைத்தார். அண்ணா அவரைச் சில நாட்களுக்குப் பின்னர் வருமாறு சொல்லி அனுப்பி விட்டார்.
அந்த அன்பர் கிளம்பிப் போனதும் அண்ணா தனது அறையை மூடிக் கொண்டு விட்டாராம். சுமார் இரண்டு வாரங்கள் வரை வெளி உலகத் தொடர்பு இல்லை. அறைக்குள் அண்ணா ஏராளமான புத்தகங்களைக் கிழித்துச் சுருட்டிச் சுருட்டிப் போட்டிருக்கிறார். அதாவது, அந்த அன்பரின் கர்மவினையை அண்ணா ஏற்றுக் கொண்டு அதன் விளைவுகளை அனுபவித்திருக்கிறார். இதனால் அந்த அன்பரின் மனப்பிரச்சினை முழுமையாக மறைந்தது. அதன் பின்னர் அந்த அன்பர் தமிழ்நாட்டிலேயே நல்ல வேலையில் சேர்ந்தார்.
இது காரில் போகும்போது கண்ணன் தெரிவித்த விஷயம்.
(அந்த அன்பரின் பெயர் எனக்கு நினைவில்லை. விசாரித்துத் தெரிந்து கொண்டு பிரசுரிப்பது சாத்தியமே. ஆனாலும் விருப்பம் இல்லை. எனவே, தவிர்க்கிறேன்.)
இந்தச் செய்தி எனக்கு மிகுந்த பிரமிப்பைத் தந்தது. சிலரால் இதுபோன்ற விஷயங்களை நம்ப முடியாமல் இருக்கலாம். எனக்கு அத்தகைய சிரமங்கள் எதுவும் இல்லை. அதுவரை அண்ணா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அண்ணா ரொம்பப் பெரியவர் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.
நாங்கள் அண்ணா இருந்த வீட்டுக்குச் சென்றபோது அந்த வீட்டுக் கூடத்தில் நிறையப் பேர் இருந்தார்கள். பெரும்பாலோர் பெண்கள். மேலும், ஏதோ கட்டட வேலையும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எனவே, சந்தடி அதிகம் இருந்தது. அண்ணா அறைக்குள் இருந்தார். கண்ணன் அவரை நமஸ்கரித்தார். எனவே, நானும் நமஸ்காரம் பண்ணினேன்.
(கடைசி வருடங்களில், தான் படுக்கையில் இருப்பதால் தன்னை நமஸ்காரம் பண்ண வேண்டாம் என்று அண்ணா பல முறை சொன்னதும், இருந்தாலும், நாங்கள் அனைவருமே அவரை ஒவ்வொரு தடவையும் நமஸ்காரம் பண்ணினோம் என்பதும் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. மேலும், கடைசி நாட்களில் தன்னைச் சந்திக்க விரும்பிய இரண்டு ஸந்நியாசிகளை அண்ணா சந்திக்க மறுத்து விட்டார். உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறேன், இந்த அறைக்குள் அந்தப் பெரியவர்கள் வருவது அவர்களுக்கு மரியாதைக் குறைச்சல் என்பது அவர் சொன்ன காரணம்.)
அண்ணா மிகவும் ஒல்லியாக இருந்தார். அனேகமாக, அறுபது பிராயம் கடந்தவர் என்பது புரிந்தது. மாநிறம். சாதாரண ஜிப்பா அணிந்திருந்தார். துணி கசங்கி இருக்கவில்லை என்றாலும் அயர்ன் பண்ணப்படவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. அவர் பிரம்மசாரி என்பதையும், மிகமிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பதையும் யாரும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
(இந்த இடத்தில் அண்ணாவைப் பற்றிய மிக முக்கியமான தகவல் ஒன்றை அவசியம் குறிப்பிட வேண்டும். அண்ணாவின் புத்தகங்களை வைக்க இடமில்லாமல் நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறோம். அவ்வப்போது அவர் புத்தகங்களைக் கழித்துக் கட்டுவதுண்டு. இருந்தாலும் அவரிடம் நிறையப் புத்தகங்கள் இருந்தன. ஆனால், புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அவரது உடைமைகள் அனைத்தையும் வைப்பதற்கு ஒரே ஒரு சிறிய அலமாரி போதும்.)
கண்ணன் என்னை அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ப்ரின்டிங் விஷயம் தவிர நான் அவருடன் பேசுவதற்கு எதுவும் இல்லை. எனவே ஒரே நிமிடத்தில் நான் வந்த காரியம் முடிந்தது. அண்ணாவும் கண்ணனும் நாட்டு நடப்பைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, அப்போது பெரிதும் பேசப்பட்டு வந்த ஜெயலலிதா ஊழல் பற்றிப் பேச்சு வந்தது.
‘‘நூறு, நூத்தைம்பது கோடி சம்பாதிச்சிருப்பான்னு சொல்றாளே! அவ்ளோ பணம் எப்படிப்பா திருட முடிஞ்சது?’’ என்று அண்ணா பெரு வியப்புடன் கேட்டார்.
‘‘என்ன அண்ணா, உங்க எஸ்டிமேட் ரொம்பக் கம்மியா இருக்கு?ஆயிரத்து நானூறு கோடிக்குக் கீழே யாருமே மதிப்பிடலை’’ என்றார் கண்ணன்.
அரசியல் தலைவர்கள் மாவட்டம் தோறும் அடியாட்களை வைத்துப் பராமரிப்பது முதலான ஒருசில விஷயங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பதாக அண்ணா அப்போது தெரிவித்தார். அவரால் இத்தகைய விஷயங்களை நம்பவே முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதன் பிறகு அவர் சொன்னது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத விஷயம். ‘‘ஒரு வீட்டுக்குப் பதிலா ரெண்டு வீடு, மூணு வீடு வச்சிண்டிருக்கான்னா கூடப் புரிஞ்சுக்க முடியறது. ஆனா, ஊருக்கு ஊர் வீடு வாங்கிப் போட்டு என்னப்பா பண்றது? ஒரு நேரத்தில ஒரு படுக்கையிலதானேப்பா படுத்துத் தூங்க முடியும்? இத்தனை வீட்டையும் வச்சிண்டு என்ன பண்ணுவா? ஏதோ ஒரு காருக்குப் பதிலா ரெண்டு மூணு கார் இருந்தாக் கூடப் புரியறது. வரிஸ்..ஸையா கார் வச்சிண்டு என்ன பண்ண முடியும்? ஒரு நேரத்தில ஒரு கார்ல தானப்பா போக முடியும்? எதுக்குப்பா மனுஷா இவ்ளோ சொத்துச் சேர்க்கறா?’’
சற்று நேரம் கழிந்த பின்னர் நாங்கள் இருவரும் அவரிடமிருந்து விடைபெற்றோம். அண்ணா வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பினார். நாங்கள் கிளம்பும்போது, அன்று வீட்டுக்கு வந்திருப்பவர்கள், அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் முதலியவை பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அண்ணா,‘‘எனக்கு இவா பேசற பாஷையே புரிய மட்டேங்கறது, கண்ணா!’’ என்று சொன்னது பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து விட்டது. அதை இப்போது நினைத்தாலும் குபீரென்று சிரிப்பு வருகிறது.
இந்த முதல் சந்திப்பு என்மீது மூன்று வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
முதலாவது விஷயம் பிரமிப்பு….
அமெரிக்க அன்பரின் கர்மவினையை அண்ணா ஏற்று அனுபவித்த சம்பவத்தைக் கண்ணன் மூலம் அறிந்ததால் ஏற்பட்ட பிரமிப்பு, மேலும் சில வருடங்கள் தொடர்ந்தது. அதிலும், ஸ்வாமி பற்றி அண்ணாவின் நூல்களில் தரப்பட்டுள்ள மிரகிள்களைப் படிக்கப் படிக்க இன்னும் அதிகமானது. அவரது அதீந்திரிய சக்தியைப் பிற்காலத்தில் நானே ஓரளவு நேரடியாகப் பார்த்ததும் உண்டு. இதனால், எனக்கும் அவர் இதேபோல அனுக்கிரகம் பண்ண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வளர்ந்தது. அண்ணா எதுவும் பண்ணவில்லை என்று அவர் மீது கோபமும் வந்தது.
இரண்டாவது விஷயம் அவரது தனிமை உணர்வு.
அன்றைய சந்திப்பில் நான் முக்கியமாகக் கவனித்த விஷயம் தமிழக அரசியல் சூழலை அவரால் நம்பவே முடியவில்லை என்பது. இதன் பின்னரும் நிறைய சந்தர்ப்பங்களில் அவரிடம் இதைக் கவனித்திருக்கிறேன். அவரது அறிவை ஞானம் என்று சொல்லாமல் வெறும் படிப்பறிவு என்றே வைத்துக் கொண்டால் கூட, ஒரு மனிதரால் இவ்வளவு படிக்க முடியுமா என்ற வியப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது.
அதையும்விட, அவர் ஒருசில இடங்களில் ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, இது வெறும் படிப்பு அல்ல, இலக்கியத்தை அணுஅணுவாக ரசிக்கும் அழகு என்பது புரியும். அவர் ஆழ்ந்து படித்தவர் மட்டுமல்ல, அனுபவித்தும் படித்தவர். ஆனால், இவ்வளவு படித்த அவரால் எத்தனையோ சாதாரண வாழ்வியல் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சில சம்பவங்களை அவரால் நம்பவே முடியவில்லை என்பதும் உண்மை.
இவா பேசற பாஷையே எனக்குப் புரிய மாட்டேங்கறது என்று அவர் சொன்னதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பல விஷயங்களில் இருந்தும், பல மனிதர்களிடமிருந்தும் அவர் விலகி இருந்தார். அவரது வேலைக்குத் தனிமை அவசியமானது என்பது நன்றாகவே புரிந்தது. ஆனால், தனது பணிகளுக்கான தேவையாக மட்டும் அவர் தனிமையைப் பார்க்கவில்லை. அவர் எந்நேரமும் தனியாக இருப்பதையே விரும்பினார்.
ஒரு சில தடவை அவரைப் பார்க்கப் போகும்போது, அவரது தனிமைக்கு இடைஞ்சலாக இருக்கிறேனோ என்ற குற்ற உணர்ச்சி தலைதூக்கியதும் உண்டு. அண்ணா இவ்வளவு தனியாக இருக்கிறாரே, அவரைக் கவனித்துக் கொள்ள முறையான ஏற்பாடுகள் இல்லையே என்று வருந்தியதும் உண்டு.
மூன்றாவது விஷயம் அவரது எளிமை.
பிற்காலத்தில் இந்த எளிமையை ரொம்பவே ரசித்ததும் உண்டு. எரிச்சல் பட்டதும் உண்டு. நிறைய கேலி செய்ததும் உண்டு. அண்ணா, போஸ்ட் கார்டில் முடிய வேண்டிய வேலைக்கு இன்லேண்ட் லெட்டரைப் பயன்படுத்த மாட்டார். அதேநேரத்தில், பிறருக்காக அவர் பணம் செலவு பண்ணுவது இதற்கு நேர்மாறாக இருக்கும். உண்மையில் அவரது எளிமைக்குக் காரணம் துறவு மனப்பான்மை என்பது பின்னர்தான் புரிந்தது.
பின்குறிப்பு:
இந்தப் பதிவுகளின் நோக்கம் அண்ணாவின் வாசகர்களான ஆஸ்திகர்களுக்கு – குறிப்பாக, காஞ்சி, சாய் அன்பர்களுக்கு – அவரைப் பற்றித் தெரிவிப்பதே. அவருடன் பழகிய மற்றவர்களும் தங்கள் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டால் நான் இதேபோல அவற்றையும் அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன். இவை அனைத்தையும் இந்தத் தளத்தில் உள்ள அனைவரும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.!
அண்ணா என் உடைமைப் பொருள் (3): இவா பேசற பாஷையே எனக்குப் புரியல! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.