சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.
அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால். புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட கிருஷ்ண பரமாத்மா சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.
அநீதிகளை அழிக்க (பகவானுக்கு) பயன்படுகின்ற சக்கரத்தாழ்வாரின் சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சி வரதர் கோயில், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
வருகிற ஜூலை 8-ஆம் தேதி சுதர்ஸன ஜெயந்தி அனைத்துத் திருமால் ஆலயங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நாமும் சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பேரின்பம் அடைவோம்.