கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும்!

கட்டுரைகள்

?அவ்வப்போதைய மனக்குழப்பத்துக்கு மருந்தாக பகவத்கீதையைத்தான் எடுக்கிறோம். பல தெளிவான பதில்கள் அதில் கிடைக்கின்றன. ஆனாலும் சிலசமயம் குழப்புகின்றன. கர்மயோகப்படி, செயல்புரிந்தே மேன்மையடையலாம் என்று தெளிவாகிறது மனம். “ஜனக மகாராஜர்’, கர்மங்கள் செய்தே சித்தியடைந்தவர் என்கிறது கீதை. ஆனால் பிறகு வேறிடத்தில் “ஞானமே’ உயர்ந்தது என்கிறார் கிருஷ்ணர். “கருமத்தைக் காட்டிலும் ஞானமே மேலானது என்று நீ சொல்லும்போது, எதற்காக என்னைக் கொடிய கர்மத்தையே செய்ய ஏவுகின்றாய்?” என்று அர்ஜுனனே கண்ணனிடம் கேட்கிறானே! இப்படி, செயல்புரியக் கட்டளையிடும் கர்மயோகமும், செயலற்ற தன்மையான தியானமும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே?

– கர்மமும் தியானமும் ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அனுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்பநிலையில் கர்மானுஷ்டானம்; அதனால் சித்தசுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம் இத்யாதி. இதில் சித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில், லோக க்ஷேமத்திற்காக கர்மா & உள்ளே அடங்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.

முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான். நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும் – என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள் & வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாக்ஷாத் நம் பகவத்பாத ஆச்சார்யாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை & பக்தி, முடிவில் ஞானம்.

?கர்மத்திலிருந்து பிறகு ஞானம் என்று தெரிந்தது. ஆனால் கர்மானுஷ்டானத்தைக் கடைப்பிடிப்பதில் முழுசாய் மனம் ஈடுபடுவதில்லையே! இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் இவற்றில் ஈடுபட மனப்பிடிப்பு ஏற்படுவ தில்லையே!

– “கர்மானுஷ்டானமாவது? அதிலென்ன ஸார் இருக்கிறது? வெறும் ஸுபர்ஸ்டிஷன்’ என்று சொல்லாமல் & ரிச்சுவல் எல்லாம் மீனிங்லெஸ் என்று சொல்லாமல், நிறைய அனுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருப்போம். இதனால் நம் சித்தமலம் போகப்போகத்தான் உள்ளேயிருக்கிற ஸ்வயஞ்ஜோதி அனுபவத்தில் தெரிய ஆரம்பிக்கும்.

? ஒரு செயலைச் செய்யும்போது, “நாம்தான் செய்கிறோம்’ என்ற எண்ணம் எப்படியும் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே! என்ற கீதை வாக்கியத்தை எல்லோரும் சொல்கிறார்களே̷ 0;

– சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால் எந்தக் காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்கமுடியும். ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். “நான் செய்கிறேன்’ எனக்காகச் செய்து கொள்கிறேன் என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம்.

? ஆனால் பலனை நினைத்துக் கொண்டுதானே இன்று எந்தச் செயலையும் செய்கிறோம். இது ஒருபுறம் இருக்கட்டும்… எந்த ஒரு செயலுக்கும், நல்லது / கெட்டது என இரு பலன்கள் உண்டல்லவா? இப்படி பலன்களை எண்ணிச் செயல்படும்போது, நம் எதைச் செய்வது? எதைச் செய்யக் கூடாது? என்றெல்லாம், எதை வைத்து தீர்மானிப்பது?

– சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், “இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், “இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார்.

“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் ஸ்ரீகார்யா கார்ய வ்யவஸ்திதௌ’ என்கிறார். “எது செய்யத் தக்கது. எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்குப் பிரமாணம்’ என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்யவேண்டும் என்கிறார்.

Leave a Reply