‘சாப்பாட்டு’ ராமன்!

கட்டுரைகள்

இவை தவிர பல்வேறு ராமாயணங்கள் இருந்தாலும், மேலே கூறப்பட்டுள்ளவையே பிரதானமானவை. எப்படி சிவபெருமானுக்கு மூன்று கண்களோ, அதுபோல் ராம பக்தர்களின் முக்கண்களாக இந்த ராமாயணங்கள் விளங்குகின்றன.

இவை ஒரு புறமிருக்க ராம பிரானை பற்றிய ஆயிரமாயிரம் கீதங்களை ஏராளமான அடியவர்கள் இயற்றியுள்ளனர். ஆதிசங்கரர், கபீர் தாஸர், துளஸி தாஸர், சமர்த்த ராமதாஸர், ராமானந்தர், ஆழ்வார்கள், பத்ராசல ராமதாஸர், தியாக பிரம்மம், ஏகநாத சுவாமிகள், ஜனாபாய், உத்தவ சித்கணர் போன்ற எண்ணற்ற பக்தர்கள் ராம பிரானை போற்றி கீதங்கள் பல புனைந்துள்ளனர். இந்த எல்லாப் பாடல்களிலுமே ராம பிரானின் பாரபட்சமற்ற அன்பு, பகைவரிடத்திலும் கனிவு, பெற்றோர்களிடம் பணிவு, குருவிடம் பெரும் பக்தி, ஒரே மனைவி என்னும் அறநெறி, சத்யத்தில் திடமான பற்று, ஒப்பற்ற வீரம் என்று பெருமானின் “கல்யாண குணங்களே’ பாடப்படுகின்றன. இங்கே நாம் எடுத்துக் கொண்டுள்ள மையக் கருவோ “சாப்பாட்டு ராமன்’ பற்றியது.

உபநிஷத்துகள் உட்பட எந்தக் கிரந்தங்களும், எந்தத் துதிகளும் ராமனை சாப்பாட்டோடு முடித்துப் போடவேயில்லை. கோதண்ட ராமன், தசரத ராமன், சீதா ராமன், ஜானகி ராமன், ùஸஸமித்ரி ராமன், அயோத்தி ராமன், பட்டாபி ராமன், கல்யாண ராமன், காகுத்த ராமன், கௌசலை ராமன், சிவ ராமன், அனந்த ராமன் என்று எத்தனையெத்தனையோ ராமன்கள்! ஆனால் இந்தப் பட்டியலில் “சாப்பாட்டு ராமன்’ என்ற பெயரும் எப்படி நுழைந்தது? இது பொருத்தமாகத் தெரியவில்லையே?

கண்ண பரமாத்மாவாவது, “சாலக்ராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்தான்’ என்று ஆழ்வார்கள் பாடியபடி ஆயர்பாடியில் பாற் குடங்களையும், தயிர் குடங்களையும் வேட்டையாடியிருக்கிறான். “சோரன்’ என்றால் “கள்வன்’ என்று பொருள். கிருஷ்ணனுக்கோ நவநீத சோரன் (வெண்ணெய் திருடி உண்பவன்) ததி சோரன் (தயிர் கவர்ந்து பருகுபவன்) க்ஷீர சோர் (பாலை ஏமாற்றி குடித்துவிடுபவன்) என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இடைச் சிறுவர்களோடு சேர்ந்து “வன போஜனம்’ பண்ணும்போது “காக்காய் கடி’ கடிக்கவும் தயங்காதவன் கண்ணன். ஆயினும் கிருஷ்ணனை, “பூர்ணம் ப்ரம்ம ஸநாதனம்’ என்கிறது ஸ்ரீமத் பாகவதம். “பரிபூர்ணமான பரம் பொருளே கண்ணனாக அவதரித்தது; அதன் திருவிளையாடல்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது’ என்று கூறிவிட்டார் சுகாசார்யார்.

ராமபிரானோ இது போன்ற “சோர’ லீலைகளைப் புரிந்தவரில்லையே? “உனக்குப் பட்டாபிஷேகம்’ என்று தசரதர் அன்போடு கூறிய போதும், “இல்லை, நீ வனவாசம் போ’ என்று கைகேயி பேசிய போதும், முகக் குறிப்பில் புன்னகையை மட்டுமே தேக்கி வைத்து, “சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை’ போலிருந்தவராயிற்றே?

ராஜ்ய பாரத்தையே துச்சமாக மதித்தவர், சாப்பாட்டையா முக்கியமானதாய் நினைத்திருப்பார்? இதுபோக இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விசுவாமித்திரரின் வேள்வி காக்கப் போனபோது அம்முனிவர், குமாரர்களாகிய ராம}லட்சுமணர்களுக்கு “பலை, அதிபலை’ என்ற மந்திரங்களை உபதேசித்தார்; “இதை ஜபிப்பதால் பசி, தாகம் போன்ற இயற்கை உபாதைகளை வென்றுவிடலாம்’ என்றும் சொல்லிக் கொடுத்தார். அந்த இளம் வயதிலேயே பசி, தாகத்தை மந்திர பலத்தால் வெல்வதற்குக் கற்றுக் கொண்டுவிட்ட ராமபிரானோடு “சாப்பாட்டை’ எப்படி முடிந்து வைத்தனர்…?

வனவாசத்தின்போதும் முனிவர்களைப் போல் கிடைத்ததைக் கொண்டு, உண்டு திருப்தியடைந்தவராயிற்றே ராகவன்? அதுவும் சீதையைப் பிரிந்தபோது ஊன், உறக்கத்தையும் துறந்த உத்தமரல்லவா அவர்? அத்தகைய சக்ரவர்த்தி திருமகனை, “சாப்பாட்டு ராமன்’ என்பது எந்த விதத்தில் நியாயம்?

} இந்த எண்ணம் பலருக்கிருக்கலாம். ஆனால் நமது பெரியோர்கள், தகுந்த காரணமின்றி எதையும் சொல்வதில்லை. “ஒக மாட! ஒக பாண! ஒக பத்னி’ (ஓர் சொல்! ஓர் வில்! ஒரு மனைவி) என்று தியாக பிரம்மம் பாடியதுபோல் வாழ்ந்த ஒப்பற்ற ராமனை, “சாப்பாட்டு ராமன்’ என்பது சாலப் பொருந்துகின்ற விஷயமே! அதற்குக் காரணமானவை பல சம்பவங்கள்.

இங்கே ஒரு “சாப்பாட்டுக்கு “இரண்டு பருக்கைகளை’ மட்டுமே உதாரணமாகக் காட்டி, “சாப்பாட்டு ராமனை’ நியாயப்படுத்துவோம். “பருக்கைகள்’ என்று சரளமாக எழுதிவிட்டோமே தவிர, இரண்டுமே தனித்தனி “அன்ன கூடம்’ போலப் பெரும் உதாரணங்கள்!

சபரி அளித்த சாப்பாடு

சபரி! ராமாயணம் தெரிந்த யாராலும் இந்த மூதாட்டியை மறக்கவே முடியாது. மதங்க முனிவரின் ஆசிரமத்தில், தொண்டு செய்வதையே உயிராகக் கொண்டு வாழ்ந்த உன்னத பக்திமதி இவள். முதுமை வந்து சபரியை தீண்டியபோது, குருநாதராகிய மதங்கர், “”இந்த பர்ண சாலையிலேயே தங்கியிரு! நான் விண்ணுலகம் புகப் போகிறேன். “என்னை விட்டு எப்படி வாழ்வது?’ என்று தவிப்பாகத்தான் இருக்கும். ஆனால் உன் இளமைப் பருவத்திலிருந்தே இங்கே வாழ்ந்த சாதுக்களுக்கு அளவு கடந்த தொண்டுகள் செய்துவிட்டாய். உன் குரு பக்தியெனும் நறுமணம், நாம ரூபமற்ற அந்தப் பரம்பொருளின் நாசிக்கே எட்டிவிட்டதென்றால் பார்த்துக் கொள்! பூமியில் தீயோரை ஒழித்து, சாதுக்களைக் காப்பாற்றும் அந்தப் பரபிரும்மமே “ராமன்’ என்று அறிக! நீ அந்த பகவானைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். “ராம ராம’ என்று சொல்லிக் கொண்டு இங்கேயே இரு. நாமம் சொல்பவர்களைத் தேடி வருவது அந்த “நாமி’யின் (திருப்பெயருக்கு உரியவன்) இயல்பான அருட்திறத்தில் ஒன்று” என்று கூறிவிட்டு மறைந்தார் முனிவர்.

அன்று முதல், “எப்போ வருவாரோ?’ என்று அன்றாடம் காத்திருந்து, ராமபிரான் வந்தால் அவருக்கு சமர்ப்பிக்க இனிய கனி வகைகளை சேமித்து வைத்து, ராம நாமத்திலும் தியானத்திலுமே பொழுதைக் கழித்துக் கொண்டு ராமனையே எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சபரி.

அந்த இனிய நாளும் வந்தது. கபந்தாசுரனை வீழ்த்திவிட்டு மதங்க முனிவரின் ஆசிரமம் நோக்கி வந்தார் ராமபிரான். கூடவே இளைய பெருமாள்! சபரி, அந்த ராஜ குமாரர்களைத் தரிசித்தாள். அவளது குருநாதர்தான் அவளுடைய இதயத்தில் ராம ரூபத்தையும், ராம நாமத்தையும் “பிரதிஷ்டை’ செய்துவிட்டுப் போயிருக்கின்றாரே? ஆக, இங்கேயும் அண்ணலும் நோக்கினார்! அம்மையும் நோக்கினாள்!

பெருமானை தரிசித்த மாத்திரத்தில், “ராம! ராம!’ என்று கதறினாள் சபரி. பிரேமையால் உந்தப்பட்டு, என்ன செய்வதென்று புரியாமல் பரபரத்தாள். “பூர்ண பிரம்மம்’ ஒரு குடிசைக்குள் அல்லவா நுழைந்துவிட்டது…?

ராமனுக்காக சேகரித்த மதுரமான கனிகளை அப்படியே சமர்ப்பிக்காமல், ஒவ்வொன்றையும் கடித்துப் பார்த்து, இனிப்பை உறுதி செய்து கொண்டு, எச்சில் கனிகளை ராமனிடம் உண்ணத் தந்தாள் சபரி. அவள் பிரேமையில் சொக்கிப் போயிருந்த இஷ்வாகு வம்ச குல திலகனாகிய ராகவர், அன்போடு அக்கனிகளைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தார். இளைய பெருமாளுக்கோ வியப்பு! “”எந்தச் சந்தர்பத்திலும் ஆசார நியமம் தவறாதவராயிற்றே நம் அண்ணா? இங்கேயும் “ஏழை, ஏழ்தலன், கீழ் மகள்’ என்றெல்லாம் பாராது இவள் எச்சில் பட்ட கனிகளை உண்டு உகப்படைகிறாரே?” என்று ஆச்சரியப்பட்டார்.

ஆக, மந்திர பலத்தால் இளமையிலேயே பசி- தாகம் வென்றவரும், இயல்பிலேயே ஜிதேந்திரியரும், ஆசார சீலருமான ராமபிரான், சபரி கொடுத்த கனிகளை உண்டதை “அளவுச் சாப்பாடு’ என்பதா? அது அளவற்ற பெருங்காதல் சாப்பாடாயிற்றே? யுத்தத்தில் மட்டுமல்ல, பிரேமையிலும் (கண்ணப்பர் சரித்திரம்) தானும், சிவபெருமானும் ஒருவருக்கொருவர் சமமே என்று சபரி மூலமாக பிரகடனப்படுத்தியதாலேயே ராம சந்திர மூர்த்திக்கு, “சாப்பாட்டு ராமன்’ என்ற “கௌரவப் பட்டம்’ சாலப் பொருந்தும்.

இதோ! சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி உற்சவம் சமீபித்துவிட்டது (ஜனவரி 26-ம் தேதி). ஒப்பற்ற ராம பக்தரான அவர், ஒரு சந்தர்பத்தில், கோடைக் காலத்தில், உத்தரபிரதேசத்தில், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். கூடவே ஒரு பணக்கார வியாபாரி; ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எதையாவது வாங்கித் தின்பதை “விரதமாக’ வைத்துக் கொண்டிருந்தான். அவன் தின்றால் பரவாயில்லை! கையில் காசில்லாத நம் சுவாமியை ஏசவும் அந்த வியாபாரி தவறவில்லை. “தாரிகாட்’ ரயில் நிலையம் வந்தது. அங்கே புகைவண்டி, நிறைய நேரம் நிற்கும். அந்த நிலையத்தின் பிளாட்ஃபாரத்தில் இறங்கி, ஒதுங்க நிழல்கூடக் கிடைக்காததால் வெயிலில் அமர்ந்து கொண்டார் சுவாமி விவேகானந்தர். பசியும், தாகமும் சுவாமிகளை வாட்டின. ஆனால் புலன்களை வென்ற அந்த புருஷோத்தமர், கீதையில் கூறியபடி “ஸ்தித ப்ரக்ஞனாக’ சலனமின்றி அமர்ந்திருந்தார்.

அந்த வியாபாரியின் கொட்டம், அங்கேயும் அடங்கவில்லை. “”ஏ துறவியே! பணம் சம்பாதிக்கின்ற நான் பூரியும், லட்டுவும் வாங்கிச் சாப்பிடுகிறேன். சம்பாதிக்கத் தெரியாத உனக்குப் பசியும் வெயிலும்தான்! பட்டினி கிட” என்று அரக்கத்தனமாக உறுமினான். அந்த நிலையிலும் அமைதி காத்தார் சுவாமிஜி.

அப்போது அந்த அதிசயம் நடந்தது. ஒருவன், உணவுப் பொட்டலத்தோடு அந்த ரயில் நிலையத்துக்குள் “அரக்கப் பறக்க’ ஓடி வந்தான். விவேகானந்தரை கண்டதும் அவரது திருவடிகளில் விழுந்து சேவித்து, “ஆஹா! கனவில் என் பிரபுவாகிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி காட்டியருளியபடியே இருக்கின்றீர்களே! நீங்கள் பசியோடிருப்பதை பகவான் என் பகல் கனவில்(?) காட்டி, உங்களுக்கு உணவு சமர்ப்பிக்க உத்தரவிட்டார். நான் ராம நாமம் சொல்பவன்தான். ஆனால் கனவில் பெருமானை தரிசிக்குமளவு பேறு பெற்றவன் அல்லன். “ஏதோ மன பிரமை’ என நினைத்து, என் பகல் தூக்கத்தை மறுபடி தொடர்ந்தேன். மீண்டும் பிரபு கனவில் தரிசனமளித்து, “அங்கே என் பிள்ளை பசியோடிருக்கிறான். உடனே உணவோடு செல்’ என்று இந்த இடத்தையும், உங்களையும் அழுத்தமாக அடையாளம் காட்டினார். ஓடி வந்திருக்கிறேன் உணவோடு! நீங்கள் உடனே சாப்பிடுங்கள். தேவர்களுக்கும் கனவில்கூட அரிதான ராமபிரம்மம், உங்களை முன்னிட்டு இந்த சாதாரணனுக்கும் தரிசனமளித்துவிட்டது. குருவை அடைந்து, அவர் மூலம் பகவானை அடைவது மரபு. எனக்கோ பகவத் தரிசனம் முதலில்! குரு தரிசனம் இரண்டாவதாக! ஆஹா! நீங்களன்றோ எனக்கு இனி ஒப்பற்ற ஜகத்குரு! இந்தக் கருணையை யார் செய்ய வல்லார்?” என்று பலவாறாக அரற்றினான்.

சுவாமி விவேகானந்தரும் அன்போடு அவன் கொண்டு வந்ததை உண்டு பசியாறி, அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

இத்தனை நேரம் சுவாமிஜியை ஏசிக் கொண்டிருந்த அந்த “ரயில் சிநேகிதன்’ மனம் வருந்தி, சுவாமிஜியின் மன்னிப்பை எளிதாகப் பெற்றுவிட்டான். கருணைமூர்த்தியான ஸ்ரீராமகிருஷ்ணரின் பிரதான ஆன்மீகத் தளபதியும், பகைவரையும் மன்னித்தருளவே ஆசைப்படும் ராம சந்திர பிரபுவின் பக்தருமான விவேகானந்தருக்கு, அந்த ஏச்சுப் பேச்சு வியாபாரியை மன்னிப்பதில் என்ன தயக்கம் வந்துவிடப் போகிறது?

“இந்தச் சம்பவத்துக்கும், “சாப்பாட்டு’ ராமனுக்கும் என்ன சம்பந்தம்? ” என்று இனியும் யாரும் கேட்கப் போவதில்லை. இருந்தாலும் விளக்கிவிடுவோம். ராமபிரம்மம் தோற்றமும், மறைவும் இல்லாதது. என்றென்றும் “ராம நாமம்’ என்னும் தாரக மந்திர வடிவில் உலகம் முழுவதும் விரிந்து பரந்துள்ளது. அந்த இரண்டெழுத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவர்களை, அந்தப் பரமாத்மா சாப்பாட்டுக்கு கஷ்டப்பட அனுமதிக்கவே மாட்டார்! இது முக்காலத்திலும் சத்தியம்!

ஆக, சபரி கொடுத்த சாப்பாட்டை உண்டு அவளுக்கு மோக்ஷம் கொடுத்ததனாலும் – நேற்று ராம நாமம் சொல்ல ஆரம்பித்தவர்கள் தொடங்கி, சுவாமிஜி விவேகானந்தர்போல இமயமாய் உயரத் தெரியாதவர்களாயினும் தனது நாமத்தைச் சொல்லும் எல்லோரிடத்திலும் பரிவு காட்டி, இகத்திலும் சோறு போட்டு, (பரத்துக்கும் “சோறு’ என்ற பெயருண்டு) பரத்தையும் கொடுக்கும் பரம கருணை வள்ளலான ஸ்ரீராமனை, “சாப்பாட்டு ராமன்’ என்றழைப்பது நியாயம்தானே?

Leave a Reply