திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்

செய்திகள்

கடைசியாக 193 3 ஆம் ஆண்டு இந்தத் தேரோட்டம் நடைபெற்றதாம். நாளடைவில் தேர்கள் மற்றும் தேர் மண்டபங்கள் சிதிலமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை.

மகாலிங்கசுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் ஆணையின்படி கோவை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யாலயா குருகுல ஸ்தாபகர் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளை தலைவராகக் கொண்டு மகாலிங்கசுவாமி சேவா அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அதன் மூலம் 5 புதிய தேர்களை நிர்மானிக்கவும், 5 தேர்மண்டபங்களை புதுப்பிக்கும் திருப்பணியும் தொடங்கியது. முதல்கட்டமாக மகாலிங்கசுவாமியின் திருத்தேர் ரூ.5 கோடியில் உருவாக்கப்பட்டு, அதன் வெள்ளோட்டம் கடந்த நவ.25 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், நிகழாண்டு தைப்பூச பெருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ஆம் நாளான புதன்கிழமை முக்கியவிழாவான தேரோட்டம் நடைபெற்றது.

அன்று அதிகாலை 4.30 மணிக்கு மகாலிங்கசுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தேருக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிய தேரில் விநாயகர், சுப்பிரமணியரும், புதிதாக செய்யப்பட்ட சுவாமியின் பெரிய தேரில் மகாலிங்கசுவாமி, பெருநலமாமுலையம்மை மற்றும் சண்டிகேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர்.

காலை 10.15 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யா குருகுல ஸ்தாபகர் தயானந்தசரஸ்வதி சுவாமிகள், பேரூர் இளைய ஆதீனம் மருத்தாசல அடிகளார், சென்னை ஓம்முருகா ஆசிரமம் சங்கரானந்தா சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, திருவிடைமருதூர் ஒன்றியக் குழுத் தலைவர் செ. ராமலிங்கம், துணைத் தலைவர் கோ.சி. இளங்கோவன், ராயா கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply