e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-23.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 23
குண விசேஷம்
– வேதா டி.ஸ்ரீதரன் –
அண்ணாவின் எழுத்து நடை வசீகரமானது. அதேநேரத்தில் கொஞ்சம் கடினமான உரைநடையும் கூட. புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டம் என்பது கூடப் பரவாயில்லை. சில இடங்களில் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போகும். இதனால், அவரது நூல்களைப் படிக்கும் போது சில சமயம் எரிச்சல் ஏற்படும். அண்ணாவைப் பற்றிப் பேசும்போது ஓர் அன்பர், அண்ணாவின் எழுத்து வாசகர்களை வாணலியில் போட்டு வறுத்து எடுத்து விடும் என்று குறிப்பிட்டார். ஆம், அண்ணா புத்தகங்களின் சில பகுதிகள் அப்படித் தான் இருக்கும்.
அதேநேரத்தில் அண்ணா எழுத்தில் நுட்பமான இரண்டு அம்சங்கள் உண்டு.
முதலாவது அம்சம் மொழி சம்பந்தப்பட்டது. மொழி என்பது ஓர் ஊடகம். கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒரு கருவி. அதேநேரத்தில், ‘‘நாம் நினைக்கும் விஷயங்களை அப்படியே வெளிப்படுத்துகிறோமா?’’ என்றால், ‘‘இல்லை’’ என்று தான் பதில் சொல்வேன். நினைப்பதற்கும் சொல்வதற்கும் இடையில் பெருத்த இடைவெளி இருக்கும். நினைக்கப்படும் கருத்துகளை அப்படியே முழுமையாக வெளிப்படுத்துவது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
ஆனால், தனது எண்ணங்களை அச்சு அசலாக, முழுமையாக வெளிப்படுத்தும் விதத்தில் அண்ணாவின் எழுத்து அமைந்திருக்கும். அவரது மொழிநடை கடினமாக இருக்கிறது என்பது அடிப்படையிலேயே தவறான விஷயம். அவரது சிந்தனை ஆழம் முழுமையாக அப்படியே அவரது எழுத்தில் வெளிப்படுகிறது என்பது தான் சரி.
இவ்வாறு சொல்லும் போது, உடனேயே, ‘‘தெய்வத்தின் குரலில் அப்படி இல்லையே, அது படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதே, ஏன்?’’ என்ற கேள்வி எழலாம். தெய்வத்தின் குரலும் உண்மையில் அப்படித் தான் இருக்கிறது. ஆனால், கருத்துகளைச் சொல்வதில் பெரியவாளின் அணுகுமுறை வேறு. தெய்வத்தின் குரல் பேச்சு நடையில் இருப்பதும் அதன் எளிமைத் தோற்றத்துக்கான ஒரு முக்கியக் காரணம்.
மேலும், பெரியவா, ஆழமான விஷயத்தை ஆழமாகச் சொல்லாமல், மேலோட்டமாக, மேலோட்டமாக என்று ஏராளமான விஷயங்களைச் சேர்த்துச் சேர்த்துச் சொல்வார். (ஒரே கருத்து பலப்பல பக்கங்களாக விரிவதற்கும் இதுவே காரணம்.) இதனால், படிப்பதற்கு அது எளிமை போலத் தெரியும். உண்மையில், அண்ணாவின் எழுத்தை விட தெய்வத்தின் குரல் மிகமிகக் கடினமான, கனமான விஷயம்.
தெய்வத்தின் குரலைத் திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் அனைவருமே இதை உணர முடியும். தெய்வத்தின் குரலை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது மிகவும் கடினம். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இன்னும் இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம் நூல் உருவாக்கம் சார்ந்தது. நாம் பத்திரிகைகளைப் படித்ததும் தூக்கிப் போட்டு விடுகிறோம். அதுபோலவே, நிறைய புத்தகங்களையும் தூக்கிப் போட்டு விடுகிறோம். ஆனால், சில புத்தகங்களை மட்டும் பாதுகாப்பாக வைக்கிறோம் – மீண்டும் படிப்பதற்காக.
இதற்குக் காரணம் பெர்மனன்ஸி வேல்யூ. சில புத்தகங்களில் உள்ள விஷயங்கள் தனிமனித வாழ்விலும் சமுதாயத்திலும் பல வருடங்கள் தாக்குப் பிடிக்கும். அவை மட்டுமே நீண்ட நாள் உயிர் வாழும்.
இந்த பெர்மனன்ஸி வேல்யூ புத்தகத்துக்குப் புத்தகம் மாறுபடும். எழுத்தாளருக்கு எழுத்தாளர் மாறுபடும். எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கும் இது அமைவது இல்லை. தலைசிறந்த எழுத்தாளரே ஆனாலும், அவரது அனைத்துப் புத்தகங்களுக்கும் பெர்மனன்ஸி வேல்யூ இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பெர்மனன்ஸி வேல்யூ இல்லாத புத்தகங்கள் பத்திரிகைகளைப் போன்றவை. படித்து முடித்ததுமே அவற்றை நாம் தூக்கிப் போட்டு விடுவோம்.
சற்றே யோசித்துப் பாருங்கள், யாராவது தெய்வத்தின் குரலைத் தூக்கிப் போடுவோமா?
இதற்கு என்ன காரணம்?
தெய்வத்தின் குரலை நாம் மீண்டும் மீண்டும் படிக்க விரும்புகிறோம். பல வருடங்களுக்குப் பின்னரும் படிப்போம். அடுத்த தலைமுறைகளுக்கும் அது தொடரும்.
இதற்குக் காரணமாக அமையும் அம்சத்தைத் தான் பெர்மனன்ஸி வேல்யூ என்று குறிப்பிட்டேன்.
தெய்வத்தின் குரலுக்கு மட்டுமல்ல, அண்ணாவின் எழுத்தில் உருவான புத்தகங்களுக்குமே பெர்மனன்ஸி வேல்யூ ஜாஸ்தி.
எத்தனையோ எழுத்தாளர்கள் சாயி லீலை பற்றியும் பெரியவா அனுக்கிரகம் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அண்ணாவும் இவற்றைப் பற்றி எழுதி இருக்கிறார். ஆனால், அண்ணா அவற்றைத் தொகுத்திருக்கும் விதம் மாறுபடும். உதாரணமாக, அன்பு அறுபது, அற்புதம் அறுபது. அதாவது, வெறும் சாயி லீலை அல்ல, அன்பு + லீலை, அற்புதம் + லீலை. பெரியவா பற்றிய நூல்களும் அப்படியே. மைத்ரீம் பஜத, கருணைக் கடலில் சில அலைகள், மகா பெரியவா விருந்து – இதுபோல, கருத்துருவுடன் சம்பவங்களைச் சொல்வதால் அவரது நூல்களுக்கு பெர்மனன்ஸி வேல்யூ ஜாஸ்தி.
ஆங்காங்கே அவர் சுட்டிக் காட்டும் தத்துவ உண்மைகளும், அவரது கருத்தாழமும், அவர் பயன்படுத்தும் மேற்கோள்களும் அவரது நூல்களின் பெர்மனன்ஸி வேல்யூவுக்கான இன்னொரு முக்கிய காரணம்.
இந்த இரண்டு அம்சங்களும் அண்ணாவின் எழுத்து சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல, அண்ணாவின் இயல்பே இது தான். சொல்லும் கருத்துகளை முழுமையாக, அழகாகச் சொல்ல வேண்டும் என்பதும், சமுதாயத்துக்குப் பயனுள்ள விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்பதும் அண்ணாவுக்கு ஸஹ-ஜம் ஆக இருந்தன. ஸஹஜம் (ஸஹ – உடன், ஜம் – பிறப்பு) என்றால், பிறவியிலேயே உடன் வந்தது – அதாவது, இயற்கையாகவே அமைந்தது (அல்லது) இயல்பு – என்று பொருள்.
இவை இரண்டும் அண்ணாவின் குண விசேஷங்கள். அவரது வாழ்க்கை முழுவதும் இவற்றைப் பார்க்க முடியும்.
அண்ணா என் உடைமைப் பொருள் (23): குண விசேஷம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.