தைப்பூசம் ஞான சம்பந்தப் பெருமான் பாடல் சொல்வது என்ன?
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்
குறுநில மன்னன் ஒருவரால் “சரசோதிமாலை” என்ற நூல் எழுதப்பெற்றுள்ளது. அந்த நூலில், தை முதல் நாளில் அறுவடையைத் தொடங்கி, அவ்வாறு அறுவடை செய்யப் பெற்ற புது நெல்லின் அரிசியை தைப்பூச நாளில் பொங்கலாகக் கடவுளுக்கு நிவேதனம் செய்யப்பட்டதை பற்றிய குறிப்பு உள்ளது.
திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்குப் புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாகச் சென்று நெல்லை கூலியாகப் பெற்று வருவார்கள் ஒரு முறை அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது!
நெல் மணிகள் மழையில் நனைந்தால் தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. தங்கள் காயவைத்தப் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதை நினைவுபடுத்தும் விதமாகவே ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தைப்பூசத்தன்று
“தீர்த்தவாரி ” நிகழ்ச்சி நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள “தைப்பூச தீர்த்தவாரி ” மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் மற்றும் அஸ்திரதேவி ஆகியோர் (தைப்பூச தேதியன்று) நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு தைப்பூச மண்டபம் வந்து பின்னர் தீர்த்தவாரி ஏற்று மீண்டும் கோவிலுக்குள் செல்வார்கள். தாமிரபரணி சிலை தாமரபரணி நதியில் குளிப்பது சிறப்பு தானே?
இப்படித்தான் காலங்காலமாக நடந்து வருகிறது. நெல்லையப்பரும் தாமிரபரணி தேவியும் நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது தான் தைப்பூச மண்டபம் . இது நெல்லையில் நடைபெறும் கதை!! இனி காவேரி கரையில் தைப்பூச நாளில் நடைபெறும் நிகழ்வினைப் பார்ப்போம் திருவிடை மருதூர் காவிரிப் படித்துறை மண்டபத்திற்கு “பூச படித்துறை மண்டபம்” எனப் பெயர் வழக்கு இன்றும் உள்ளது.
திருவாரூர் திருக்கோயிலின் கிழக்குக் கோபுர சன்னதியில் திருநீலகண்ட ஈஸ்வரம் என்ற தேர் கோயில் உள்ளது. திருநீலகண்ட குயவர் பூசித்த கோயில் என்பது அதன் தலவரலாறு. அக்கோயிலுக்குரிய செப்பேடு சாசனம் ஒன்று திருவாரூர் தியாகேசன் கோயிலில் உள்ளது.
அதில் தில்லையில் பூச நாளில் பதஞ்சலி, வியாக்ர பாதர், இரணியவர்மன், திருநீலகண்ட குயவனார் ஆகியோர்க்கு சபாபதி தன் தூக்கிய இடது பாத தரிசனம் கொடுத்தார் என்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. இனி சென்னையில்………
திருமயிலை என அழைக்கப்படும் மயிலாப்பூர் திருக்கோயில் முன்பு சிவநேசரின் திருமகள் பூம்பாவையை சாம்பல் நிறைந்த குடத்திலிருந்து எழுப்ப வேண்டி திருஞானசம்பந்தப் பெருமானார் திருப்பதிகம் ஒன்றினைப் பாடி அப்பாவையை உயிரோடு எழச் செய்தார்.
அப்போது பாடிய அந்த பதிகத்தில் மாந்தோறும் நிகழும் முக்கிய விழாக்கள் எவை? என்பதை ஞான சம்பந்தப் பெருமான் பட்டியலிட்டுள்ளார்.
புரட்டாசியில் நிகழும் மாகேஸ்வர பூஜை, ஐப்பசி மாத ஓணம் விழா, கார்த்திகை மாதத்து தீப வழிபாடு, தை மாதத்து பூசம், மாசி மாதத்து மகநாள் கடலாட்டு, பங்குனி உத்திரம், சித்திரை மாதத்து அஷ்டமி, வைகாசி வசந்த உற்சவத்து பொன்தரப்பு, ஆனிமாதத்து சம்வத்சரபிஷேகம் எனப்பெறும் பெருஞ்சாந்தி என்பவை ஞானசம்பந்தப் பெருமானார் கூறும் திருவிழாக்களாகும்.
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் பௌர்ணமி நாளாக இருக்கும். தைப்பூச நாளில் காவடி எடுக்கும் பழக்கமும் விரதம் இருக்கும் பழக்கமும் பழனியில் இருந்து தோன்றியதாகவே அறியப்படுகிறது.
காலப்போக்கில் இது யாழ்ப்பாணம் மலேசியா சிங்கப்பூர் என்று பல வெளிநாடுகளிலும் பரவியதாகச் சொல்கிறார்கள். இன்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தைப்பூசத்தைச் சிறப்பாகவே கொண்டாடி வருகிறார்கள். முருகப் பெருமானே எண்ணியபடி!! இந்த நாளில் சிவபெருமானையும் எண்ணி வழிபடுவது சிறந்ததாகும்.