திருப்புகழ் கதைகள்: சிரஞ்சீவிகள்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8d-e0ae9ae0aebfe0aeb0e0ae9e.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 177
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

கருவின் உருவாகி – பழநி
சிரஞ்சீவிகள்

இரணியனுடைய புதல்வர் பிரகலாதர்; பிரகலாதருடைய புதல்வன் விரோசனன்; விரோசனனுடைய மைந்தன் பலி. இவரை மகாபலிச் சக்ரவர்த்தி என நாம் கூறுகிறோம். இவர் ஒரு சிரஞ்சீவி. அதாவது சாகா வரம் பெற்றவர். இதைப் பற்றி ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹனுமான்ச விபீஷண:
க்ருப: பரசுராமஸ்ச சப்தைதே சிரஜீவின:

மேற்கண்ட ஸ்லோகத்தை பலர் அறிவர் இந்த ஸ்லோகமானது அஸ்வத்தாமா, பலிச்சக்ரவர்த்தி, வியாசர், அனுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர், ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் என கூறுகிறது

இந்த ஸ்லோகமானது புராணங்களில் இருப்பதாய் தெரியவில்லை ஆனால் சமஸ்கிருதத்தில் நாம் தினமும் சொகிற “பிராதஸ்மரணத்தில்” உள்ளது. சிரஞ்சீவிகள் இத்தனை பேர் தான் என்றால் இங்கே மார்க்கண்டேயரைக் காணவில்லை. ஆனால் மேற்கூறிய ஸ்லோகமானது நாம் இருக்கும் இந்த சதுர்யுகத்தில் உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிடுகிறது.

வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம் என மூன்று அவதாரங்களுமே திரேதா யுகத்திலும் கிருஷ்ணவதாரம் துவாபார யுகத்திலும் நிகழ்ந்தவை. மேற்கூறிய ஏழு பேரும் இந்த நான்கு அவதாரங்களுடனும் சம்பந்தப்பட்டவர்களே. வாமன அவதாரம் திரேதா யுகத்தில் தான் நடந்தது. இராவணன் பலிச்சக்ரவர்த்தியிடம் யுத்தம் செய்ய முடிவெடுத்து சென்றதும், பலியின் மூத்த மகனான பாணாசுரனிடம் கிருஷ்ணர் யுத்தம் புரிந்ததும் வாமன அவதாரம் திரேதா யுகத்தில் நடந்ததே என்பதை காட்டுகின்றன

சிரஞ்சீவிகள் பிரம்மாவின் ஒரு பகலாக கருதப்படும் கல்ப காலம் வரை உயிரோடு இந்த பூமியில் இருப்பர். மேற்கண்ட ஸ்லோகத்தின்படி இவர்கள் சிரஞ்சீவி என்றால் இங்கு மார்க்கண்டேயர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. முன்பே கூறியது போல நாம் வாழும் இந்த சதுர்யுகத்திலே ஏழு பேர் சிரஞ்சீவிகள். நாம் வாழும் நமது சுவேத வராக கல்பத்தில் இதற்கு முன் 453 சதுர்யுகங்கள் கடந்துவிட்டன அதாவது 1812 யுகங்கள் தாண்டி அடுத்த சதுர்யுகத்தில் நாம் இருக்கிறோம் எனில் யுகத்திற்கு ஒருவர் சிரஞ்சீவி என்று நாம் எடுத்துக்கொண்டாலும் தற்போது 1812 சிரஞ்சீவிகள் உள்ளனர். இங்கு முதல் மன்வந்திரத்தில் பிறந்தவரே மார்க்கண்டேயர் எனக்குறிப்புகள் கூறுகின்றன அவ்வகையில் மொத்தம் ஏழு பேர் அல்ல பற்பல சிரஞ்சீவிகள் இங்கு உள்ளனர் ஆனால் இதுப்பற்றி நாம் அறியோம்.

முக்காலமும் உணர்ந்த நாரதருக்கு என சில கடமைகள் இருப்பதுபோல இவர்களுக்கு என சில வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பலிச்சக்ரவர்த்தி அடுத்த இந்திரன்; அஸ்வதாமன் அடுத்த வியாசர் மேலும் பரசுராமர், அஸ்வதாமன், கிருபர், வியாசர் ஆகியோர் அடுத்த மன்வந்திரத்தில் சப்தரிஷிகள் என்பதும் இதற்கு ஆதாரம். ஆனால் மேற்கூறிய ஏழுபேரில் விபீஷணர் சிரஞ்சீவி என ஆனதற்கு காரணம் தெரியவில்லை சில இடங்களில் அவருக்கு பதிலாக பிரம்மதேவரின் அவதாரமான ஜாம்பவான் சொல்லப்பட்டு உள்ளார். ராமாயணத்தில் இலங்கை அரசனாக முடிசூட்டப்படும் விபீஷணர் மகாபாரதத்திலும் இலங்கையின் அரசனாகவே இருந்துள்ளார்.

இராஜசூய யாகத்திற்கு தென்திசை நோக்கி படையெடுத்து வரும் சகாதேவன், கடோத்கசனை விபீஷணரிடம் தூது அனுப்புகிறான் அவனுக்கு தக்க மரியாதை அளித்து விவரம் கேட்கிறார். அப்போது ராஜசூயம் நடத்த கூறியது கிருஷ்ணர் என்பதை அறிந்தவுடன் கப்பங்கட்டுவதாய் கூறிய விபீஷணர் பல அறிய பரிசுப்பொருட்களை தருகிறார். அனுமந்தர் மற்றும் ஜாம்பவானிடம் சந்திப்பு நிகழ்ந்ததை போல விபீஷணரிடம் கிருஷ்ணரின் சந்திப்பு நிகழ்ந்து இருக்க வேண்டும். மகாபலிச்சக்ரவர்த்தியை பொறுத்தவரை அசுர குலத்தில் பிறந்தாலும் தர்ம பாதையில் செல்பவர் இதனாலே அடுத்த இந்திரனாக மாறும் பாக்கியம் பெற்றார். இவரது மகன் பாணாசுரன் தந்தையை மிஞ்சிய தனயனாய் இருக்கிறார் இவர் பூதவுடலுடன் சிவபெருமானின் கைலைக்கு சென்று அவருடன் வாழும் பேறு பெற்றார் ஒரு வேளை பூமியில் இருந்து இருந்தால் அவரும் சிரஞ்சீவியே.

மேற்கூறியவர்கள் இல்லாமல் சந்திர வம்சத்தை சேர்ந்த தேவாபி என்ற அரசனும், சூரிய வம்சத்தை சேர்ந்த மரு என்ற அரசனும் கூட நம்மிடையே உள்ளனர் கலியின் கொடுமையை அடக்கப்போகும் கல்கி பகவான் பூமியை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வைகுண்டம் செல்வார் பிறகு சத்ய யுகம் தொடங்கும் என கல்கி புராணம் கூறுகிறது

சிரஞ்சீவி எனப்போற்றப்படும் அனைவருமே சிறந்த பக்தர்களும் கூட (அஸ்வதாமனும் கூட). இவர்களை நாம் நினைத்தாலே புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம் மேலும் நாம் பயம் கொள்ளும் இடங்களில் இவர்ளை நினைத்தால் அவர்கள் நம்மை காப்பார்கள் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

திருப்புகழ் கதைகள்: சிரஞ்சீவிகள்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply