e0af8d-e0ae89e0aeb0e0ae95e0aea3.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 178
– முனைவர் கு.வை. பாலசுப்ரமணியன் –
கருவின் உருவாகி – பழநி
உரக அணைச் செல்வன் உலகளந்தது
அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது மகாபலி சக்கரவர்த்தி மட்டும்தான். மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார்.
அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலிக்கு அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியம் கிடைத்தது.
இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். இவர் பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை வாமன புராணத்தில் அமைந்துள்ளது. ஒரு சமயத்தில் மகாபலி இந்த பலி இந்திரனால் எல்லா நலன்களையும் இழந்து, பிருகுவமிசத்தில் வந்த மகரிஷிகளிடத்தில் சென்று, அவர்களுக்குச் சீடனாக இருந்தார். அம்முனிவர்கள் அப்பலியின் க்ஷேமத்தைக் குறித்து, ‘விசுவசித்து’ என்ற ஒரு யாகத்தைச் செய்தார்கள்.
சூரியனுடைய தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரைகட்கு நிகரான புரவிகள் பூட்டிய பொன்னாலான் தேரும், சிங்கக்கொடியும், பெரிய வில்லும், குறையாத அம்பறாத் தூணிகள் இரண்டும், உறுதியான கவசமும் அந்த யாகத்தில் உண்டாயின. இவற்றைப் பலிக்கு முனிவர்கள் வழங்கினர். பிதாமகரான பிரகலாதர் வாடாத பத்மமாலையையும், சுக்கிரர் ஒரு சங்கத்தையும் அவனுக்குக் கொடுத்தனர்; பலி அந்தப் பொற்றேரில் பயணித்து, சங்கநாதஞ்செய்து, உலகங்களை எல்லாம் நடுங்கச் செய்தான். அசுர சேனைகள் சூழ இந்திரனுலகிற் சென்று முற்றுகையிட்டு, சங்கத்தை ஊதினான்.
இந்திரன் பலியின் படை பலத்தையும் முனிவர்கள் தந்த வரங்களையும் உணர்ந்து, பயந்து சுவர்க்கலோகத்தைவிட்டு தேவர்களுடன் ஒளிந்து ஓடினான். பலியானவன் மூன்று உலகங்களையும் வசப்படுத்திக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். பிறகு நூறு அசுவ மேத யாகங்களைச் செய்து பெரும் புகழ் படைத்து சகல சம்பத்துடன் விளங்கினான்.
வாமனன் பிறந்தார்
தேவமாதாவாகிய அதிதி தேவி, தன் மக்களாகிய தேவர்களுக்கு மகாபலியாலேலே உண்டான துன்பத்தை அறிந்து, தன் கணவராகிய காசிபரைக் குறித்து தவமிருந்தாள். வெகுகாலத்திற்குப் பின் காசிபர் சமாதியினின்றும் வெளிப்பட்டு அதிதியினிடம் வர, அதிதி கணவனைக் கண்டு முறைப்படி பூசித்து “என் புதல்வர்க்கு வாழ்வு உண்டாகுமாறு அருள்புரிவீர்” என்று வேண்டினாள்.
காசிபர் “பெண் மணியே! வருந்தற்க. எனது பிதாவாகிய பிரமதேவர் எனக்கு உபதேசித்த இதனை அனுஷ்டிப்பாயாக. பால்குனமாதம் சுக்கில பட்சத்திலே, பிரதமை முதல் பன்னிரண்டு நாள் மிகுந்த பயபக்தியுடன், பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனை வழிபாடு செய்வாய். இதற்குப் பயோவிரதம் என்று பேர். இவ்விரத பலத்தால் எண்ணிய நலனை நீ விரைவில் பெறுவாய்” என்று அப்பயோவிரதத்தை நோற்கும் முறைகளையும் துவாதசாக்ஷர மகா மந்திரத்தையும் உபதேசித்து அருள் புரிந்து காசிபர் நீங்கினார்.
அதிதிதேவி அந்த அரிய விரதத்தை அன்புடன் அனுஷ்டித்து அரவணைச் செல்வனை வழிபட்டனள். வாசுதேவர், பஞ்சாயுதங்களுடன் அவள் முன் தோன்றியருளினார். அதிதி பெருமானைத் தெரிசித்து, அஞ்சலி செய்து துதித்து, தன் குறைகளை விண்ணப்பித்து நின்றாள். பகவான் “அம்மா, அதிதிதேவியே, நின்னுடைய மைந்தர்களாகிய வானவர்கள் சுவர்க்கத்தை இழந்து, பலியினால் துன்புறுவதைக் கண்டு மிகவும் வருந்தி என்னை ஆராதித்தனை.
தேவர்களுக்கு இப்போது நற்காலமில்லை. அவர்களுக்கு பராக்கிரமம் இப்போது உண்டாவது அரிது. ஆயினும், நின் விரதபலத்தால் உண்டாக்கி வைக்கிறேன். உனது பதியினிடத்தில் என்னுடைய இந்த உருவத்தைத் தியானித்து புத்திர பாக்கியத்தை யடைவாயாக. உனது துன்பத்தை நீக்கி தேவர்கட்கு இன்பத்தை தருவதற்காக நான் நினக்கு மைந்தனாக வருவேன்” என்று சொல்லி மறைந்தருளினார்.
அதிதி மிகவும் மகிழ்ந்து பகவானைத் தியானித்து, பதியாகிய காசிபரை அடைந்தாள். அரியினுடைய அம்சம் தன்னிடம் வந்து சேர்ந்ததை சமாதியினால் அறிந்த காசிபர். அந்த அரியின் அம்சத்தை அதிதியிடம் ஸ்தாபித்தார். காசிபரால் கர்ப்பதானம் செய்யப்பட்ட அதிதி – கருவிருந்தாள்.
பகவான் நீல நிறத்தை யுடையவராயும், இரு மகரகுண்டலங்களை யுடையவராயும், ஸ்ரீவத்சம் என்னும் மருவை விஷசிலே உடையவராயும், கௌஸ்துப மணியையும் மணிமகுட ஆரகேயூர இரத்தினாலங்க்ருதராயும் அதிதியினிடத்தில், சுக்கிலபட்ச சிரவண துவாதசியில் ஸ்ரீ வாமனமூர்த்தியாகத் திருவவதாரம் புரிந்தார். தேவ துந்துபி முழங்கிற்று. விண்ணவர் தண்மலர் பொழிந்தனர்.
வாமன மூர்த்தியைக் கண்டு அதிதி தேவியும், காசிப முனிவரும் மட்டற்ற மகிழ்ச்சி யடைந்தார்கள். அருந்தவ முனிவர்கள் ஜாதகருமம் முதலிய வைதிக கருமங்களைச் செய்துவைத்து உபநயனமும் செய்து வைத்தனர். வாமன மூர்த்திக்கு கதிரவன் காயத்திரியை உபதேசித்தான்.
பிரகஸ்பதி பிரம சூத்திரத்தைக் கொடுத்தார். காசிபர் முஞ்சியைக் கொடுத்தார். பூமிதேவி கிருஷ்ணாசனத்தைக் கொடுத்தாள். சந்திரன் தண்டத்தைக் கொடுத்தான். பிரம்மா கமண்டல பாத்திரத்தைக் கொடுத்தார். குபேரன் பாத்திரத்தைக் கொடுத்தான். உமாதேவியார் பிக்ஷையைக் கொடுத்தார்.
திருப்புகழ் கதைகள்; உரகணைச் செல்வன் உலகளந்தது! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.