சந்தோஷம் தரும் சந்தோஷிமாதா

கட்டுரைகள்

சித்தி, புத்தி ஆகியோர் பிரம்ம தேவனின் மகள்கள் ஆவார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்விக்க பிரம்ம தேவன் முயற்சிக்கையில், பிரம்ம தேவனின் மகனான நாரதர் அந்தப் பொறுப்பினை ஏற்றாராம்; தன் தங்கைகளான சித்திக்கும், புத்திக்கும் நல்ல வரனைத் தேர்ந்தெடுத்தாராம். அந்த மாப்பிள்ளையே விநாயகப் பெருமான் என்று ஒரு கதை உண்டு.

சித்தி, புத்தியை மணந்த விநாயகருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்று பாரதத்தின் வட பகுதி வாழ் மக்கள் கருதுகின்றனர். சித்தி தேவிக்கு “லட்சன்’ என்ற மகனும், புத்தி தேவிக்கு “லாபன்’ என்ற மகனும் பிறந்தார்கள் என்பது அவர்கள் கூறும் வியாக்யானம்.

வட நாட்டில் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று “ரட்சா பந்தன்’ என்னும் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். அன்று பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு, “சகல சௌபாக்கியங்களும் வந்து சேர வேண்டும்’ என்ற மகாலட்சுமியை  வேண்டி  விரதம் இருப்பார்கள்; அப்போது செய்யப்படும் பூஜையில் வைக்கப்படும் ரட்சையை தங்கள் சகோதரர்களின் கையில் கட்டி மகிழ்வார்கள். தங்கள் உடன் பிறந்த சகோதரர்களுக்காகக் கடைப்பிடிக்கும் இந்த முறையை, தங்களை சகோதரியாகக் கருதிப் பழகும் பிற ஆடவர்களுக்கும் ரட்சை கட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தும் முறை வடக்கே உள்ளது. இவ்வாறு ஒரு பெண், பூஜையில் வைக்கப்பட்ட ரட்சையை ஒருவன் கையில் கட்டி விட்டால், அவன் அவளை உடன் பிறந்த சகோதரியாகவே ஏற்றுக் கொள்வது வழக்கம்.

இந்த விழாவினைப் பூலோகத்தில் கண்டு மகிழ்ந்தார் நாரதர். உடனே தன் சகோதரிகளைக் (விநாயகரின் மனைவியருமான சித்தியையும், புத்தியையும்) காணச் சென்றார். தன் அண்ணன் நாரதர் மகிழ்வுடன் வந்திருப்பதைக் கண்ட சித்தியும், புத்தியும் அவரின் மகிழ்விற்கான காரணத்தைக் கேட்டனர். அப்போது பூலோகத்தில் தான் கண்ட “ரட்சா பந்தன்’ விழாவினைப் பற்றி விவரமாகச் சொன்னாராம் நாரதர்.

இதனை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த விநாயகரின் மகன்களான லட்சனும், லாபனும் தங்களுக்கு ஒரு சகோதரி இருந்தால் “ரட்சை’க் கட்டிக் கொள்ளலாமே என்று தங்கள் பெற்றோர்களிடம் கேட்டார்கள்.

புத்திரர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விநாயகர் முடிவு செய்தார். சித்தி, புத்தியான தன் மனைவிகளைப் பார்த்தார். அவர்களின் மனநிலையை அறிந்தார். அப்போது, அவரைச் சுற்றிலும் ஒரு ஒளி தோன்றியது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், அவர் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டது. சித்தி, புத்தியின் பார்வைகள் அந்த ஜோதியில் கலந்து தங்கமயமாயின. அங்கே, அனைவரும் வியக்கும்படி அழகே திரு உருவாக ஒரு கன்னிப் பெண் தோன்றினாள். அவள் தங்கள் பெற்றோர்களான விநாயகரையும், சித்தி-புத்தியையும் வணங்கினாள்.

விநாயக புத்திரியின் அவதாரம் எல்லா உலகங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முப்பெரும் தேவியர்களும் தங்கள் கணவர்களுடன்  வருகை தந்து கணேச புத்திரியை வாழ்த்தினார்கள். விநாயகரின் மகளுக்கு தங்கள் சக்திகளை வழங்கினார்கள். மூன்று சக்திகளின் திருவுருவாக விளங்கினாள் விநாயகரின் செல்வி. இவள் உலகத்தில் வாழ்பவர்களுக்கு சந்தோஷத்தை தர இருப்பதால் விநாயகச் செல்வியை “சந்தோஷிமாதா’ என்றே அனைவரும் அழைப்பார்கள் என்று வாழ்த்தினார்கள்.

சந்தோஷமான அந்த வேளையில் அவதரித்த செல்வியைக் கண்ட மற்ற தேவர்கள், “பூலோக மக்களுக்கு வேண்டிய வரத்தினை அளிக்கும் சக்தியை உனக்கு வழங்குகிறோம்’ என்று வாழ்த்தினார்கள். மேலும், நீ அவதரித்த இன்னாள், சகோதர-சகோதரிகளுக்கு ஒரு பொன்னாள் என்று அருளினார்கள். உடனே, சந்தோஷி மாதா, அருகிலிருந்த தன் சகோதரர்களான லட்சனுக்கும், லாபனுக்கும் ரட்சை கட்டி மகிழ்ந்தாள்.

ஆவணி மாதம் பௌர்ணமி நாளான ஒரு வெள்ளிக்கிழமையில் அவதரித்தவள் சந்தோஷி மாதா. எனவே, பிரதி மாதம் வருகின்ற பௌர்ணமி தினங்களிலோ, அல்லது பிரதி வாரம் வருகின்ற வெள்ளிக்கிழமைகளிலோ சந்தோஷிமாதாவை வழிபட, சகல பாக்கியங்களும் கிட்டும். அன்று விரதம் கடைப்பிடித்து, சந்தோஷி மாதா படத்தின் முன் நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

“சந்தோஷி மாதா விரதம்’ கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் உப்பில்லாத உணவு உண்ண வேண்டும்.  தயிர், மோர், புளிப்பு உணவு ஆகியவைகளைத் தவிர்க்க வேண்டும். கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டி இந்த விரதம் இருந்தால் பத்து வெள்ளிக்கிழமைகளுக்குள் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை. இந்த விரதத்தினால் சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்று சொல்லப்படுகிறது.

சந்தோஷி மாதாவிற்கு என்று தமிழகத்தில் தனியாகக் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. சில கோயில்களில் சந்தோஷி மாதாவின் சித்திரம் உள்ளது.  திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதிக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டபத்தின் தென் பகுதியில், வடக்கு நோக்கிய திசையில் சந்தோஷி மாதாவின் அழகிய சித்திரம் உள்ளது. அதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள். சந்தோஷி மாதாவை வழிபட சங்கடங்கள் விலகும்! சந்தோஷம் பெருகும்!

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=323655

Leave a Reply