“எப்போதெல்லாம் அநீதிகள் தலை தூக்கிப் பேயாட்டம் போடுகின்றனவோ, அப்போதெல்லாம் இறைவன் அவதரித்து, தர்மத்தை நிலை நிறுத்துவான்’ என்பது இந்து மதத்தின் தலையாய நம்பிக்கைகளில் ஒன்று.
ராமபிரான் அவதரித்த காலம், “திரேதா யுகம்’ என்கின்றனர். அப்போது ராவணன் என்ற அசுரனும் இருந்தான். அவனிடம் சில நற்குணங்கள் இருந்தும், அகந்தையினால் தேவர்களை வாட்டினான்; தனது அசுர குலத்தைச் சார்ந்தவர்கள் மூலமாக சாதுக்களாகிய முனிவர்களை இம்சித்தான். இதனால் தேவர்கள், திருமாலை சரணடைந்தனர். அவர்தானே காக்கும் கடவுள்! நல்லோர்களுக்குப் பொல்லாதவனாக விளங்கிய ராவணனை வதம் செய்ய, ராம பிரானாக திருமால் அவதாரம் எடுத்தார். “ஜகதேக வீரன்’ என்னும் புகழுடையவர் விஷ்ணு. தனியொருவராக எவரையும் வெல்ல அவரால் முடியும். ஆனாலும் தன் பெருமைகளைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அற்ப புத்தி அற்ற உலக அரசர் அவர். ராம பக்தர்களே அடக்கத்தின் திருவுருவாக இருக்கும்போது, அவர்களுடைய இதய தெய்வமான ராமபிரானின் குண நலன்களைப் பட்டியலிட முடியுமா? எனவே தேவர்களிடம், “எனது அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்களும் மண்ணில் தோன்றுங்கள்’ என்றார். ராமாயண கதாபாத்திரங்களில் பலர், தேவாம்சம் உடையவர்களே! அவர்களில் வாயுவின் அம்சமாகத் தோன்றியவர் அனுமன்.
ராமபிரானையும், பிராட்டியையும் சேர்த்து வைக்க அவர் செய்த சாகசங்கள் மெய் சிலிர்க்கச் செய்வன.
மலையைவிடப் பெரிய தோற்றம் எடுக்கவும், கடலைக் கடக்கவும், அசோக வனத்தில் சிறிய உருவம் கொண்டு சீதா பிராட்டியை தரிசித்து, “ராமபிரானின் தூதுவன்’ என்ற அங்கீகாரத்தை உறுதி செய்யவும், இலங்கையை தீயிட்டுக் கொளுத்தவும், திரும்ப வந்து, “கண்டனன் கற்பினுக்கு அணியை’ என்று ராமபிரானிடம் சொல்லவும், சேது பந்தனம் செய்யும்போது பெருந்துணையாக நிற்கவும், ராம-ராவண யுத்தத்தில் வீர தீர பிரதாபங்களைக் காட்டவும், “வெற்றியோடு ராமபிரான் வந்து கொண்டிருக்கிறார்’ என்று பரதனுக்கு சேதி சொல்லவும், ராமபிரானே வைகுண்டத்துக்கு அழைத்தபோதும், “இப்பூவுலகில் ராம நாமமும், ராம காதையும் சொல்லப்படுகின்ற இடங்களிலிருந்து உங்களுடைய குணங்களைக் காதால் கேட்டு அனுபவிப்பதே எனக்கு முக்தி நிலையிலும் பெரிது’ என்றுச் சொன்ன வல்லவர் அனுமன்.
அவர் பேராற்றலின் உறைவிடம்! ஆனால் அடக்கத்தில் அவருக்கு நிகர் அவரே! எல்லாத் திறமைகளும் அவரிடம் கை கட்டிச் சேவகம் செய்தன. ராமபிரானே அவரை, “சொல்லின் செல்வன்’ என்று புகழ்ந்துள்ளார். வள்ளுவர் கூறிய, “சொலல் வல்லன், சோர்விலன், அஞ்சான்’ என்ற வரிகள் அனுமனை வர்ணிப்பதாகவே தோன்றுகிறது. அவரது பெருமைகளை ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியுமா என்பது சந்தேகமே!
கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அவரை வசப்படுத்த யோகமோ, யாகமோ, விரதமோ, தீர்த்த யாத்திரையோகூட தேவையில்லை. எவர், “ராம நாமத்தை’ எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களே அனுமனுக்கு மிகவும் பிரியமானவர்கள்.
காற்று யாருக்கும் கட்டுப்படாது! காற்றில்லையென்றால் ஜீவராசிகள் மடிந்துவிடும். ஆஞ்சநேயரோ வாயு குமாரன். அவர் வீறு கொண்டெழுந்தால் அவரை யாராலும் விஞ்ச இயலாது. அனுமனின் அருளால்தான் அனைத்து உயிர்களுமே சுவாசித்து உயிர் பிழைக்கின்றன.
அப்படிப்பட்ட அனுமனுக்கு உயிர், உடல், உடமை எல்லாமே ராமபிரான்தான். அதே நேரம், “ராம நாமத்தை’ உச்சரிப்பவர்களிடம் அவர் கட்டுண்டு கிடக்கிறார். அத்தகைய பக்தர்களுக்கு புத்தி, பலம், துணிவு, ஆரோக்யம், வாக்கு வன்மை என அனைத்தையும் வழங்குகிறார்.
இதுவோ கலி காலம்! மண்ணாசை, பொன்னாசை, காமம், கள், கோபம், திமிர் போன்ற எல்லாத் தீய குணங்களும் மிகப் பெரும்பாலான மனிதர்களை ஆட்டிப் படைத்து அழிக்கின்றன. இந்த அவலங்களை அடியோடு ஒழித்துக் கட்ட “அனுமனின் ஆசி’ அவசியம் தேவை. “இளமையில் கல்வி, சிலையில் எழுத்து’ என்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ராம நாம ஜபத்தைக் “கட்டாயப் பாடமாக’ ஆக்கிவிட வேண்டும். இப்படிப் பழகிவிட்ட குழந்தைகள், பருவ வயதினை எட்டினாலும் பகவானது கருணையினால் தீயவழியில் செல்லாமல் காக்கப்படுவார்கள்.
“கலியுகீ தாரக ராம நாம போலே’ என்றும், “ராம என்ற இரண்டெழுத்து’ எனவும், “ஸ்ரீ ராம நாமமு மறவமு’ என்றும் ஸமர்த்த ராமதாஸர், கம்பன், பத்ராசல ராமதாஸர், துளசி தாசர் போன்ற எண்ணற்ற அருளாளர்கள் – எண்ணற்ற வரிகளால் ராம நாமத்தின் பெருமைகளை தத்தம் தாய் மொழிகளில் பாடியுள்ளனர். அந்த மகான்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தினால் நமக்குத்தான் நஷ்டம்! எனவே இளம் வயதிலேயே குழந்தைகளை ராம நாமம் சொல்லும் பழக்கத்தில் ஈடுபடுத்தினால், பிற்காலத்தில் அவர்களைப் பற்றி கவலையின்றி இருக்கலாம்.
இதிலே இன்னொரு சௌகரியமும் உண்டு. ஒரு வேளை “தோளுக்கு மேல் வளர்ந்தவர்கள்’ ராம நாமம் சொல்லாது போனாலும், அவர்களுடைய நல்வாழ்வு கருதி, பெற்றோர்களே ராம நாம ஜபம் செய்தாலும் அந்தக் குடும்பம் அனுமனால் காப்பாற்றப்படும்.
ராம நாமம், இந்து மதத்தின் பரம்பரைச் சொத்து. வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்காக புறப்பட்ட மகாத்மா காந்திக்கு, “ராம நாமத்தை விடாதே’ என்று உபதேசித்து அனுப்பினார் அவருடைய தாய். “”என் வாழ்வில் இருள் சூழ்ந்ததாக நான் உணர்ந்த கணங்களில், ராம நாமமே எனக்கு வெளிச்சம் காட்டியது” என்று பின்னாளில் உரைத்தார் காந்தியடிகள்.
முடியாட்சிக் காலத்தில் பாரதம் இருந்தபோது நம்மை ஆண்ட அரசர்கள், தங்களது அரண்மனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஆண்டவன் உறையும் ஆலயங்களைப் புதுப்பிப்பதே புண்ணியம் என்ற புனித உணர்வுடன் வாழ்ந்து மறைந்தனர். அதனால்தான் அவர்கள் கற்றளிகளாக்கிய கோயில்கள் இன்றுமுள்ளன; அவர்கள் வாழ்ந்த கட்டிடங்கள் மறைந்து போயின! அன்றைய அரசர்கள் அற வழியில் நின்றவர்கள். இதுவோ தர்ம தேவதையை தடுமாற வைக்கும் காலம்! தீய குணங்களே இன்றைய அசுரர்கள். இந்தத் தீமைகளிடமிருந்து மீட்சிபெற ராம நாமம் சொல்லுவோம்! மற்றவற்றை அரக்க குணங்களை அழிக்க வல்ல ஆஞ்சநேயர் பார்த்துக் கொள்வார்.
23651">https://www.dinamani.com/edition/Story.aspx?artid=323651