அதாவது முக்கோணம் மூலதாரமாகவும், அஷ்டாரம் சுவாதிஷ்டானமாகவும், தசாரம் மணிபூரகமாகவும், பஹிர் தசாரம் அனாஹதமாகவும், மன்வச்ரம் விசுத்தியாகவும், பிந்து ஆக்ஞையாகவும் கூறப்பட்டிருக்கின்றது. (அண்டத்திலே சுவாதிஷ்டான க்ஷேத்ரமாக திருஆனைக்கா விளங்குகின்றது.)
சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் ரத்னம் நான்கு தளங்களைக் கொண்டு சுவாதிஷ்டானம் என்னும் சக்ரமானது விளங்குகிறது. ஆறு இதழ்களோடு ஆறு அக்ஷரங்களோடு செந்நிறப் பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை அறிஞர்கள் சுவாதிஷ்டானம் என அழைப்பார்கள். அவ்விடத்தில் பாலன் என்ற சித்தனும், ராகினி என்ற தேவியும் வசிக்கின்றனர். ஆறு இதழ்களிலும் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம்பேஷ்டி என ஆறு தேவிகளும் வசிக்கின்றனர். இந்த ஆதாரமானது தனக்கு மேலான அக்னி தத்துவத்துடன் இணைந்து விளங்குகிறது. இவ்விடத்திலேதான் குண்டலினி தானே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருக்கும் என சாத்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்குச் சுவாதிஷ்டானம் எனப் பெயர்.
சித்தாந்த சாத்திரமானது சரஸ்வதியோடு கூடிய பிரம்மாவை, அபயம், வரதம், கமண்டலு, அக்ஷமாலை இவைகளை நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு அக்ஷரங்களோடு கற்பனை செய்யப்பெற்ற பத்மத்திலே காந்தியுடன் சிந்தனை செய்யவேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. சக்தி உபாசகர்கள் மேதஸ் என்ற தாதுவைத் தனது இருப்பிடமாகக் கொண்ட காசினி என்ற தேவதையைத் தியானம் செய்கின்றார்கள். இதே போன்று மற்ற ஆதாரங்களும் கூறப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீசக்ரத்தைப் பூஜிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் குருவினுடைய பரம்பரை வழிவந்த உபதேசம் பெற்று ஒவ்வொன்றையும் நன்கு கவனித்துச் செய்யவேண்டும். குருவினுடைய முன்னிலையில் பூஜைகள் செய்து, அவருடைய அனுமதியைப் பெற்றுத் தனிமையில் பூஜையைச் செய்யவேண்டும் என்பதும் நமது முன்னோர்களுடைய மரபாகும்.
>நவாவரண அமைப்பு…
அம்பிகையை ஸ்ரீசக்ரம் அல்லது ஸ்ரீ சக்ர மேருவில் நவாவரண பூஜை செய்வது சிறப்பு. நவ ஆவரணம் என்றால் ஒன்பது சுற்றுக்கள் & என்பது பொருள். ஆவரணம் என்றால் சுற்று அல்லது அடைப்பு என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீசக்ரத்தில் முதல் சதுர வடிவாய் உள்ள மூன்று கோடுகள் த்ரைலோக்ய மோகன சக்ரம் எனப்படும். இது முதலாவது ஆவரணம். இதில் உள்ள சக்திகள் பிரகடயோகினிகள் எனப்பெறுவர். இரண்டாவது ஆவரணம் ஸர்வாசாபரிபூரக சக்ரம் ஆகும். இதில் உள்ள சக்திகள் குப்தயோகினி ஆவர். மூன்றாவது ஆவரணம் எட்டுத்தளம் உடைய ஸர்வஸம்க்ஷோபண சக்ரம். இதில் உள்ள சக்திகள் குப்ததர யோகினிகளாவர். நான்காவது ஆவரணமான பதினான்கு கோணம் உடைய ஸர்வஸௌபாக்ய சக்ரத்தில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர். ஐந்தாவது ஆவரணம் வெளிப்பத்துக்கோணம், ஸர்வரக்ஷாகரசக்ரம். இதில் உள்ள சக்திகள் குலோத்தீர்ண யோகினிகளாவர். ஆறாவது ஆவரணம் பத்துக் கோணமுடைய ஸர்வார்த்தஸாதகசக்ரம் . இதில் உள்ள தேவதைகள் நிகர்ப்பயோகினிகள். ஏழாவது ஆவரணம் எட்டுக்கோணமுடைய ஸர்வரோகஹர சக்ரமாம். இதில் உள்ள சக்திகள் ரஹஸ்யயோகினிகளாவர். எட்டாவது ஆவரணம் முக்கோண வடிவமுடைய ஸர்வஸித்திப்ரத சக்ரமாகும். தேவதைகள் அதிரஹஸ்ய யோகினிகளாவர். ஒன்பதாவது ஆவரணம் ஸர்வானந்த மய சக்ரம். இது பிந்து வடிவமானது. இதில்தான் பரமேச்வரனும் பரமேச்வரியும் இருந்து உலகை ரக்ஷிக்கின்றனர்.{jcomments on}