அண்ணா என் உடைமைப் பொருள்(15) – ஸ்வாமி, பெரியவா, அண்ணா!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 15
ஸ்வாமி, பெரியவா, அண்ணா
– வேதா டி. ஸ்ரீதரன் –

எனது நண்பர் ஒருவர் நிறைய வெளிநாட்டினரை பேக்கேஜ் டூர் அழைத்துச் செல்வார். சாரதா பப்ளிகேஷன்ஸ் ஆரம்பிப்பது என்று முடிவான பின்னர் அந்த நண்பருடன் சில நாட்கள் நானும் பல்வேறு இடங்களுக்குச் சென்றிருந்தேன். அப்போது ஆனைமலையில் ரொம்ப விசேஷமான ஓர் அனுபவம் கிடைத்தது.

ஒரு தாய் யானை இறந்து விட்டதால், அதன் குட்டியை, மலைவாழ் மக்கள் உதவியுடன் காட்டிலாகாவினர் வளர்த்து வந்தார்கள். நாங்கள் அனைவரும் நீண்ட நேரம் அந்தக் குட்டியைத் தூக்கியும் கொஞ்சியும் விளையாடினோம். மறு நாள் வேறு பகுதிகளுக்குச் செல்லாமல் மீண்டும் அங்கேயே வந்து அந்தக் குட்டியைக் கொஞ்சி விளையாடினோம்.

சென்னை திரும்பியதும் பதிப்பக வேலைகளுக்காக வெளியூர் போக வேண்டிய சூழல். அதற்கு முன்னால் புட்டபர்த்தி போய் ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று ஆசையாக இருந்தது. கிளம்பிப் போனேன்.

அன்றைய தரிசனத்தின் போது ஸ்வாமி எனக்கு ஓரளவு பக்கத்தில் வந்து நின்றார். அவரது கண்கள் யானைக் கண்களைப் போல் எனக்குக் காட்சியளித்தன. மீண்டும் மீண்டும் கூர்ந்து பார்த்தேன். யானைக் கண்களே தான். எனக்குக் குழப்பமாக இருந்தது. வழக்கம் போல வலது கை விரல்களால் காற்றில் எழுதிக் காட்டுவதும், உள்ளங்கையை அந்தரத்தை நோக்கிக் காட்டுவதுமாய் சுமார் ஒரு நிமிடத்துக்கும் மேல் ஸ்வாமி அங்கேயே நின்றிருந்தார். அவரைப் பார்க்கும் போது, காற்றில் யானை எதையோ எழுதிக் காட்டுவது போலவே எனக்குத் தோன்றியது.

தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் ஆனைமலை அனுபவம் நினைவு வந்தது. அந்த யானைக்குட்டியின் தாக்கத்தினால் மனதில் ஏதோ பிரமை ஏற்பட்டுள்ளது, அதனால் தான் ஸ்வாமியைப் பார்த்தால் யானையைப் போல் தெரிந்தது என்று தோன்றியது.

தரிசனம் முடித்து அன்று இரவே கிளம்பி மறு நாள் காலை சென்னை வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்து பல் தேய்த்து விட்டு ஹாலில் அமர்ந்தேன். அயனாவரம் ரமேஷ் வந்து சேர்ந்தார். (நாங்கள் ஆரம்பித்த பத்திரிகை மூலம் இவரது அறிமுகம் கிடைத்தது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.)

ramsuratkumar - 1

அவர் எப்போது வந்தாலும் அண்ணா புத்தகங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அன்றும் அப்படியே. அண்ணாவின் தாயார் மரணத்துக்குப் பின்னர் அவர்கள் வீட்டுக்கு ஶ்ரீ உமேஷ் வந்திருந்ததைப் பற்றிக் கூறினார். (இந்தச் சம்பவம் பற்றி அண்ணா எழுதி இருக்கிறார். நான் அதுவரை படித்ததில்லை.)

அம்மாவின் தகனத்துக்குப் பின்னர் அண்ணா வீட்டுக்கு அவர் வந்த அவர், அம்மாவின் பிரேதப் பகுதிகள் சில அந்த வீட்டில் இருந்ததாகவும் அவற்றை அவரால் பார்க்க முடிந்ததாகவும் அண்ணாவிடம் தெரிவித்தாராம். (பிற்காலத்தில் ஒருமுறை, நான் அண்ணாவுடன் இருக்கும் போது அண்ணாவைப் பார்க்க உமேஷ் வந்திருந்தார். அவர் சென்ற பிற்பாடு அண்ணாவே இந்தச் சம்பவத்தைப் பற்றி என்னிடம் கூறினார்.)

அண்ணாவின் சஷ்டியப்த பூர்த்தியைப் பற்றி ரமேஷ் தெரிவித்த தகவல் தான் ரொம்ப விசேஷமானது. பெரியவா கடைசி காலத்தில் உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்த போது சைகை பாஷையிலேயே உரையாட முடிந்தது. பெரியவா சைகை மூலம் ஏதாவது சொல்வார். அருகில் இருப்பவர்கள் அதைப் புரிந்து கொள்ள முற்சிப்பார்கள். தாங்கள் புரிந்து கொண்டதை உரத்த குரலில் அவரிடம் சொல்லுவார்கள். அவர் சரியென்று ஆமோதிக்கும் வரை பெரியவா சைகை பாஷையில் பேசுவதும், அன்பர்கள் உரத்த குரலில் அவரிடம் கத்திப் பேசுவதும் தொடரும்.

periyava side profile
periyava side profile

அண்ணாவின் சஷ்டியப்த பூர்த்திக்கு முந்தைய நாள் மடத்து ஊழியர் பாலு அவர்களின் கனவில் பெரியவா காட்சி அளித்தாராம். தனது கடைசி காலத்தில் இருந்தது போலவே இந்தக் கனவில் பெரியவா காட்சியளித்தாராம். சைகை பாஷையில் தும்பிக்கையைக் காட்டுகிறார் பெரியவா.

‘‘தும்பிக்கை என்னது, ஆனையா?’’ என்று பாலு கேட்கிறார்.

இல்லை என்று கையசைத்த பெரியவா, தும்பிக்கையால் எழுதுவது போல சைகை காட்டுகிறார்.

‘‘எழுதற ஆனை… எழுத்தாளர் ரா. கணபதியா?’’

ஆமாம் என்று கையசைத்த பெரியவா ஆறு, பூச்சியம் ஆகிய எண்களைக் காட்டுகிறார்.

‘‘அறுபதுன்னா… சஷ்டியப்த பூர்த்தியா? ரா. கணபதிக்கு ஷஷ்டியப்த பூர்த்தியா? என்னிக்கு?’’

நாளை என்று சைகை காட்டிய பெரியவா, தனது ஆசிகளைத் தெரிவிக்குமாறு கைகளை உயர்த்திக் காட்டி மறைந்தார்.

மறு நாள் காலை பாலு அவர்கள் புதுப் பெரியவாளிடம் இந்தக் கனவைச் சொல்லி, மடத்து பிரசாதம், சால்வை முதலான மரியாதைகளுடன் கிளம்பி அண்ணா தங்கி இருந்த மோகனராமன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டுக்குள் நுழையும் போது திடீரென அவருக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ‘கனவில் பெரியவா வந்ததை நம்பி நான் மடத்து மரியாதைகளுடன் ரா. கணபதியைப் பார்க்க வந்து விட்டேன். உண்மையில் அவருக்கு இன்று சஷ்டியப்த பூர்த்தி தானா? இல்லையெனில் நான் மடத்து சார்பில் சஷ்டியப்த பூர்த்தி மரியாதை என்று அவருக்கு சால்வை போர்த்தினால் மடத்துக்கே இழுக்காகி விடுமே!’’ என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது.

இந்தச் சிக்கல் தீர்வதற்காக அவர் மனதுக்குள் பெரியவாளிடம் முறையிட்டார். பெரியவா தற்போது தனக்கு ஏதாவது சமிக்ஞை காட்ட வேண்டும். என்று பிரார்த்தனை செய்தார். உடனே வீட்டு ஹாலில் இருந்த சாயிபாபா படத்தில் இருந்து ஒரு புஷ்பம் கீழே விழுந்தது. மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளே சென்ற அவர், அண்ணாவுக்கு மடத்து மரியாதைகளை சமர்ப்பித்தார். தனது அறுபதாவது பிறந்த தினத்தன்று பெரியவாளின் ஆசிகளும், மடத்து பிரசாதமும் கிடைத்ததில் அண்ணாவுக்கும் மகிழ்ச்சி.


ரமேஷ் கிளம்பிப் போனதும் எனக்கு ஸ்வாமியின் கண்கள் நினைவு வந்தன. எழுதுவது போல அவர் சைகை காட்டியது அண்ணாவைத் தான் குறித்ததோ என்ற கேள்வி மனதில் எழுந்தது. அப்படியே அது அண்ணாவைக் குறித்தாலும், அதற்கு என்ன விளக்கம்? அண்ணாவைப் பற்றி ஸ்வாமி எனக்கு என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை.

அதை விளக்கியவர் யோகியாரே!

அண்ணா என் உடைமைப் பொருள்(15) – ஸ்வாமி, பெரியவா, அண்ணா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply