e0af8de0ae9fe0af81e0aeaee0aea3e0aebfe0aeafe0af81e0aeaee0af8d-e0ae95e0af81e0aeb0e0af81e0aeb5e0aebee0aeafe0af82.jpg" style="display: block; margin: 1em auto">


குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.
இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.
பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும். குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?
இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.
முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம்.

அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.
அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள் தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.
கடனமாக இருப்பினும் “கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே” என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.
கோவிலையும் அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால் தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.
அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் “என்ன ஆயிற்று..?” என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.
கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.
அப்பொழுது கர்ப்பக்ருஹத்தில் இருந்து “நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்” என்று அசரீரி கேட்டது.
உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.
அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.
அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.
பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.
குண்டுமணியும்.. குருவாயூரப்பனும்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.