நம்பிக்கை Vs மூடநம்பிக்கை

கட்டுரைகள்

சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம்.

அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

 

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.

தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

“ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்” என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், “நான் ஒரு மூடன்’ என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் “ஒன்றுமே இல்லை’ என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, “இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

“சுடு’ என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால̷் 0; பகுத்தறிவு மிஞ்சும்… நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.

“போர்’ என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது’ என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.

“மனம் உண்டானால் வழி உண்டு’ என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்” என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

கவிஞர் கண்ணதாசனின் கடைசிப் பக்கத்திலிருந்து…

Leave a Reply