தினசரி ஒரு வேத வாக்கியம்: 79. நிந்தைக்கு உரியவற்றை செய்யாதே!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

79. நிந்தைக்கு உரியவற்றை செய்யாதே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“யான்யநவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யானி” – தைத்திரீய உபநிஷத்.
“எந்த செயல்கள் நிந்தையற்றவையோ அவற்றைச் செய்வாயாக!”

வேதத்தை நன்றாக சீடனுக்கு பயிற்றுவித்தபின் அப்போதுவரை தான் போதித்த தர்மங்களை சூத்திரங்களாக எடுத்துரைத்த குரு கூறும் வாக்கியங்களில் இதுவும் ஒன்று.

பிரம்மனைக் குறித்து பேசும் உபநிஷத், தர்ம நடத்தையைக் குறித்து பேசுவதன் மூலம் ஆத்ம ஞானத்துக்கு முதல் படியாக மனத்தூய்மையோடு செயலாற்றுவது மிக மிக முக்கியம் என்று எடுத்துரைக்கிறது.

“நிந்தைகள் அற்ற செயல்களை நீ கடைபிடி! சீடர்களின் நடத்தையிலிருந்து  இந்த சம்பிரதாயங்களை நீ கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை சீடர்களின் நடவடிக்கையில் நிந்தைக்கு காரணமான செயல்களை தென்பட்டால் அவர்கள் செய்தார்கள் என்பதற்காக நீ செய்யக்கூடாது. அவ்வளவு ஏன்? குருவே ஒருவேளை சாஸ்திரத்திற்கு எதிரான செயல்களை கடைப்பிடித்தாலும் கூட நீ அவற்றை மேற்கொள்ளாதே!,

பண்டிதர்கள், சான்றோர்கள் ஆன பெரியவர்கள் உன் வீட்டிற்கு வந்தால் அவர்களுடைய சிரமத்தைப் போக்கும் அனைத்து சேவைகளையும் மிகவும் பக்தி சிரத்தையோடு செய்! உன் வசதிக்கு ஏற்ப அவர்களுக்கு சன்மானம் கொடு! அவர்கள் ஏதாவது சாஸ்திர அர்த்தம் கூறினால் எத்தகைய பணிவின்மையும் காட்டாமல் பெருமூச்சு கூட விடாமல் சிரத்தையோடு கேட்டு, அவர்கள் கூறுவதில் ஏதாவது தவறு இருப்பதாகத் தோன்றினாலும் அவருடன் விவாதம் செய்ய வேண்டாம். அவர் கூறும் உபதேசத்தில் நல்லவற்றை ஏற்றுக்கொள்! 

நீ செய்யும் செயல் தர்மத்தோடு கூடியதா இல்லையா என்ற ஐயம் ஏற்பட்டால் அந்த செயல்களில் நிபுணராக உள்ளவரிடம் சென்று அவர்களை கவனித்துப் பார்த்து அவர்கள் எவ்வாறு தம் ஆசாரங்களை கடைப்பிடிக்கிறார்கள் என்று அறிந்து அவற்றை நீயும் பழகிக்கொள்!

“யத்யதாசரதி ஸ்ரேஷ்டா: தத்ததேவேதரோஜனா:
ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனு வர்ததே||”

– சான்றோர் எதைச் செய்கிறார்களோ, எதை பிரமாணமாக ஏற்கிறார்களோ உலகம் அதை அனுசரிக்கிறது.  ஆனால் அவர்கள் கடின இயல்பு இல்லாதவர்களாக, சுயநலமற்றவர்களாக, வெகுமானத்தை விரும்பாதவர்களாக, தர்மத்தில் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதாவது  சாஸ்திரவாதிகளை விட சாஸ்திரமே பிரமாணம்.

“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணந்தே” என்பது கீதை வசனம். 

துஷ்டர்களோடு தொடர்பு கொள்ளாதே! இனி நிச்சயமாக தெரியாவிட்டாலும் சந்தேகப்படும்படியான நடத்தை கொண்ட மனிதர்களின் விஷயத்தில் மேற்சொன்ன தர்ம விரும்பிகளான சீடர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறாரோ அவ்வாறு நடந்து கொள்!”

Samavedam3
Samavedam3 சாமவேதம் சண்முக ச்ர்மா

இவ்விதமாக விநயத்தையும் ஒருவேளை சாஸ்திர விரோதமான செயல்கள் புரியும் பெரியவர்களைக் கூட கண்மூடித்தனமாக பின்பற்றாத மனோ தைரியத்தையும் பெரியவர்களிடமிருந்து நல்லவற்றை மட்டுமே ஏற்று தன்  வாழ்க்கையில் கடைபிடிக்கும் புத்திக்கூர்மையையும் கல்வி கற்று முடித்த மாணவனுக்கு மிக அன்பாக வேதம் போதிக்கிறது.இது நமக்கும் கூட பொருந்தும். 

தனிமனிதனுக்கு சமுதாயத்தின் மீது பொறுப்பு உள்ளது. அவனுடைய செயல்கள் சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே செயல்களில் விழிப்போடு இருக்கவேண்டும். அது தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அதன் மூலம் தேச நலனுக்கும் தீங்கு நேராதபடி எச்சரிக்கை அளிக்கும்.

வேதமும் அதன்படி நடக்கும் உலகமும் எவற்றைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கிறதோ அவையே நிந்தைக்குரிய செயல்கள்.

செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் போவதும் செய்யக் கூடாதவற்றைச் செய்வதும் குற்றம். அது பாவம். அத்தகைய பாவகரமான வாழ்க்கை நிந்தைக்குரியது.

இது வேதத்தின் கட்டளை. இல்லற வாழ்க்கையில் நுழையப் போகும் சீடனுக்கு குரு கூறிய போதனை  இது. 

தினசரி ஒரு வேத வாக்கியம்: 79. நிந்தைக்கு உரியவற்றை செய்யாதே! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply