682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 71 ஏக்கரில் அமையும் இந்த ஆலயம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
3 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
51 இஞ்ச் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை கருவறையில் வருகிற 22-ந்தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கான சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளார். விழாவில் சுமார் 7 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை ராமர் சிலைக்காக 3 சிற்பிகள் செய்த சிலைகளில் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகமவிதிகள்படி தொடங்கியது. இதையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு ஐதீகப்படி பூஜைகள் நடைபெறும்.
ராமர் கோவில் திறப்பு விழா: பிரமாண்ட ராமர் கோவில் பிராண பிரதிஷ்தா (கும்பாபிஷேக )விழாவிற்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை இன்று தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெறுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் திறக்கப்படும். இவ்விழாவில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சடங்குகளுடன் ஏழு நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கெர், அருண் கோவில், கங்கனா ரணாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட், முகேஷ் அம்பானி, கெளதம் அதானி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று ராமர் கோவில் கமிட்டி தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு என்னென்ன பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ராம் மந்திர் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய நிகழ்வுகள்….
ஜனவரி 16: பிராயச்சித்த பூஜை மற்றும் கர்மாகுதி பூஜை
ஜனவரி 17: மூர்த்தி பரிசார பிரவேஷ்
ஜனவரி 18 (காலை): தீர்த்த பூஜன், ஜல யாத்ரா மற்றும் கந்தாதிவாஸம்
ஜனவரி 18 (மாலை): ஔஷாதிவாஸம், கேசராதிவாஸம், கந்தாதிவாஸம்
ஜனவரி 19 (மாலை): தான்யாதிவாஸம்
ஜனவரி 20 (காலை): புஷ்பாதிவாஸம்
ஜனவரி 20 (மாலை): ஷர்கராதிவாஸம் , பலாதிவாஸம்
ஜனவரி 21 (காலை): மத்யாதிவாஸம்
ஜனவரி 22 (மாலை): ஷையாதிவாஸம்
பிராண பிரதிஷ்டா விழா
பிராண பிரதிஷ்டா விழா பொதுவாக ஏழு அதிவாசங்களை உள்ளடக்கியது, இருப்பினும் குறைந்தபட்சம் மூன்று அதிவாசங்கள் அதாவது தான்யாதிவாஸம், ஜலாதிவாஸம், ஸயனாதிவாஸம் பொதுவாக பின்பற்றப்படுகின்றன. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் சடங்குகளை மொத்தம் 121 ஆசார்யர்கள் செய்வார்கள்.
கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் அனுஷ்டானத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு, ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்குவார். முதன்மை ஆசார்யரின் பாத்திரத்தை காசியின் லக்ஷ்மி காந்த் தீட்சித் ஏற்றுக்கொள்வார்.
பிராண பிரதிஷ்டா விழா மற்றும் ராம் லல்லா கும்பாபிஷேகம் மதியம் 12:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதன்படி, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன. அங்கு முதல் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இதையடுத்து புனித நீராடல் மேற்கொள்ளப்படும். இதற்காக அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பசுக்கள் தானம் செய்யப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பிராயசித்த பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டது.
நாளை (புதன்கிழமை) குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதே சமயத்தில் சரயு நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு அயோத்தி ஆலயத்துக்கு வருவார்கள். அந்த புனித நீர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பயன்படுத்தப்படும்.
18-ந்தேதி (வியாழக்கிழமை) யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. விநாயகர் பூஜையுடன் யாகசாலைகளில் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் செய்யப்படும். வருண பூஜை, வாஸ்து பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும்.
அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படும். நவக்கிரக பூஜைகள் ஆகமவிதிகளின்படி மேற்கொள்ளப்படும். இதில் ஆயிரக்கணக்கான வேதவிற்பன்னர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக அயோத்தி ராமர் கோவில் அருகே மிக பிரமாண்டமாக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
20-ந்தேதி (சனிக்கிழமை) அயோத்தி ராமர் கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். சரயு நதியில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் ஆலயம் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
அதன் பிறகு வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை (21-ந்தேதி) முழுக்க குழந்தை ராமர் சிலை 125 வகை அபிஷேகங்களால் புனித நீராடல் செய்யப்படும்.
இதையடுத்து அயோத்தி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். அன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்வார்கள். இந்த பூஜையை வாரணாசியில் இருந்து வரும் வேதவிற்பன்னர்கள் கண்காணிப்பார்கள். குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது 121 ஆச்சார்யார்கள் வேத மந்திரங்களை முழங்குவார்கள்.
பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலைக்கு முக்கிய பூஜைகள் செய்வார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடனிருப்பார்கள்.
ராம் லல்லா சிலை பற்றி
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய ராம் லல்லா சிலை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக வழிபடப்படும் தற்போதைய சிலை, புதிய கோவிலின் கருவறையில் வைக்கப்படும்.
கோவில் எப்போது பக்தர்களுக்காக திறக்கப்படும்?
ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோயில் பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும். ஜனவரி 23 அன்று பக்தர்களுக்காக திறக்கப்படும்.