தினசரி ஒரு வேத வாக்கியம்: 78. விழிமின்! எழுமின்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

78. விழிமின்! எழுமின்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“பூத்யை ஜாகரணமபூத்யை ஸ்வபனம்” – யஜுர்வேதம் 
“விழிப்போடு இருப்பது ஐசுவரியத்தை அளிக்கும். உறக்கம் தரித்திரத்தை ஏற்படுத்தும்”

நமக்கு கிடைத்திருக்கும் உடலும் புலன்களும் எப்போதும் சைதன்யத்தோடு விளங்கவேண்டும். உழைக்கக்கூடிய அவயவங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். சோம்பி இருக்க விடக்கூடாது. புலன்களின் ஆற்றலை விழிப்படையச் செய்து வாழ்வில் சாதிக்க வேண்டியவற்றை சாதித்து அடைய வேண்டியது நம் கடமை. 

அதேபோல் விழித்திருப்பது, கவனமாக இருப்பது, விழிப்போடு இருப்பது ஆகியவை செல்வத்தையும் வெற்றியையும் பெற்றுத் தரும். சோம்பலையும் மந்த புத்தியையும் அருகில் நெருங்க விடாமல் நிரந்தரம் உழைத்து வேலை செய்து நினைத்ததை சாதிப்பது முக்கியம் என்று நம் வேதக் கலாச்சாரம் பல இடங்களில் எடுத்துரைக்கிறது.

உடலுக்கு நம் பணிகளை முன்னிட்டு எத்தனை ஓய்வு கொடுக்க வேண்டுமோ அத்தனை உறக்கம் தேவைதான். ஆனால் சூரியோதய, சூரிய அஸ்தமன சமயங்களில் தூங்கினால் தரித்திரம் ஏற்படும் என்று வேதங்களும் புராணங்களும் கூறி வருகின்றன. 

அனுஷ்டானங்களில் செலவிட வேண்டிய நேரத்தை அசதியோடு கழிப்பது வாழ்க்கை என்னும் வரத்தை வீணடிப்பதே ஆகும். இவ்விதம் உலகியல் ரீதியில் பொருள் கொள்வதோடு கூட இன்னும் பல அர்த்தங்களும் போதனைகளும் இந்த வாக்கியத்தில் உள்ளன.

விழிப்போடிருப்பது (ஜாகரணம்) என்றால் ஞானம் பெற்றிருப்பது. அஞ்ஞானமே உறக்கம். லௌகிக ஞானம், உலகியல் விஷயங்கள் ஒருபுறமிருக்க… “நான் யார்?” என்றறியும் ஆத்ம ஞானி பெறுவதே அகண்ட ஐஸ்வர்யமான மோட்சம்.

“ஞ்ஜானாதேவஹி  கைவல்யம்”என்பது வேதவாக்கியம். ஆத்மஞான விஷயத்தை உணர இயலாத அஞ்ஞான உறக்கத்தில் இருப்பவர் மோட்ச ஐஸ்வர்யத்தை பெற இயலாது.

விழிப்போடு இருப்பவர் சகல ஆற்றல்களையும் பயன்படுத்த இயலும். அனைத்தையும் பார்க்க இயலும். அனைத்துப் புறமும் பார்த்து ஆலோசித்து தனக்கும் உலகிற்கும் நன்மை பயக்கும் வெற்றிகளை சாதிக்க இயலும்.  

அதிகமாக தூங்குபவனிடம் லட்சுமி நிற்க மாட்டாள் என்பது பெரியோர் கூற்று. நம் கலாச்சாரம் முதலிலிருந்தே ஞானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

பௌதிக செல்வத்தை சேர்ப்பதிலேயே புத்தியின் ஆற்றலை பயன்படுத்தி வந்தால் இறுதியில் அது வீண் பிறவியாகி விடும்.

Theni vedapuri sidhbhavaranda ashram4
Theni vedapuri sidhbhavaranda ashram4

நித்தியம் விழிப்போடு இருப்பவனுக்கு மட்டுமே இடைவிடாத சாதனையும் பயிற்சியும் செய்வது சாத்தியமாகும். அப்படிப்பட்ட இயல்பாலேயே மகரிஷிகள் யோக வித்யை, சித்த வித்யை, மருத்துவம் போன்ற உயர்ந்த ஞானங்களைப் பெற முடிந்தது.

நல்ல நடத்தை, தியானம் போன்றவற்றை இன்று இழந்து வருகிறோம் என்றால் அதற்குக் காரணம் சோம்பலே. சோம்பித் திரிவது தரித்திரத்திற்கு வரவேற்பு கூறுவதே ஆகும். “உத்திஷ்ட! ஜாக்ரத!” என்று வேதமாதா பலமுறை போதிக்கிறாள். கடமை மறவாத கலாச்சாரம் நம்முடையது.

“ஷட்தோஷா: புருஷேணைவ ஹாதவ்யா பூதிமிச்சதா|
நித்ரா தந்த்ரா பயம் க்ரோதம் ஆலஸ்யம் தீர்கசூத்ரதா||”

– அதிக உறக்கம், தூங்கி வழிதல், பயம், கோபம், சோம்பல், ஒத்திப் போடுவது… இவை தமோகுண இயல்பு. இவை உள்ளவர்  எதையும் சாதிக்க இயலாது என்கிறது சுபாஷிதம்.

பாரதீய கலாசாரத்தில் பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கும் சோர்வுக்கும் இடமில்லை. நாம் எல்லாவற்றிலும் பின்தங்கி உள்ளோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். வேத போதனைகளை மறந்து விட்டால் தான் இந்த அவப்பெயர் வந்துள்ளது.

ஒரு முறை நம் சனாதன கலாச்சாரத்தின் சங்கொலியை நம் காதில் வாங்கினால் மீண்டும் விழித்தெழுவோம். நம் ஞான சக்தியை விழிப்படையச் செய்து அதனை தாய்நாட்டின் மேன்மைகாக தாரை வார்த்து உய்வடைவோம்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 78. விழிமின்! எழுமின்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply