60" />
வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். செவ்வாய், வெள்ளி விரதமிருந்து துளசியை விசேஷமாக பூஜிக்கலாம்
கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா அதைக் கண்டு பொறாமை கொண்டாள். அதனால் கோபம் கொண்ட ராதை, `சாதாரண மானிடப்பெண்போல் நீ பொறாமை அடைந்ததால் இந்த உயர்ந்த நிலையிலிருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள்.
அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான மாதவிக்கும் துளசி என்ற பெயரில் கோபிகா பெண்ணாய்ப் பிறந்தாள். சிறுவயதிலேயே பத்ரிகாவனம் சென்று, கிருஷ்ணனை மனைவியாக அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். அவள் வேண்டியபடி பிரம்மதேவனும் வரம் கொடுத்தார்.
ஆனால் சிறுவயதில் தான் பெற்ற வரத்தை மறந்தே போனாள் துளசி. அதே நேரத்தில் ராதையால் சபிக்கப்பட்ட சுதாமன் என்பவனும், சங்க சூடன் என்ற பெயரில் சிவ அம்சமாக பூமியில் பிறந்தான். இவன் நான்கு கைகளுடன் பெரும் வீரனாக விளங்கினான்.
அசுரர்களுடன் சேர்ந்து கொண்டு சங்கசூடன் தேவர்களை ஜெயித்து யாராலும் வெல்ல முடியாதவனாகத் திகழ்ந்தான். சங்கசூடன் கவச குண்டலத்துடன் பிறந்தவன். தன்னை அண்டியவர்களுக்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த குணம் உடையவனாகத் திகழ்ந்தான்.
தான் பெற்ற வரத்தை மறந்துபோன துளசி, இந்த சங்கசூடனையே திருமணம் செய்து கொண்டாள். வழக்கம்போல தேவர்கள், சங்கசூடனை வீழ்த்த பகவானை சரணடைந்தார்கள். சங்கசூடனுக்கும் பகவானுக்கும் யுத்தம் நடந்து கொண்டே இருந்தது.
அது ஒரு முடிவுக்கு வரவில்லை. சங்க சூடனின் மனைவியாகிய துளசி மிகுந்த கற்புக்கரசியாக விளங்கியதால் தான் அவனை அழிக்க முடியவில்லை என்பதை கிருஷ்ணன் புரிந்து கொண்டார். சங்கசூடனைப் போல் உருவெடுத்தாலும் சங்கசூடனது கவசம் இல்லாமல் துளசியை, தான் சங்கசூடன் என்று நம்ப வைக்க முடியாது என்பதால் சங்கசூடனிடம் மாறுவேடத்தில் போய் அவனது கவசத்தைத் தானமாகப் பெற்றார்.
பிறகு சங்கசூடனைப் போல் உருமாறி வெற்றிமாலை அணிந்து துளசி இருக்கும் இடத்திற்கு வந்தார். அவளும் கிருஷ்ணனை தன் கணவர் என்று நினைத்து அவருக்கு பாத பூஜை செய்ய, துளசியின் விரதத்திற்கு பங்கம் ஏற்பட்டது. அதன்பின் சங்கசூடன் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.
நடந்ததை அறிந்த துளசி, பகவானாக இருந்துகொண்டு நீ சாதாரண மனிதரைப் போல் நடந்து கொண்டதால் உன் உள்ளம் கல்லாய்ப் போனதுபோல் நீரும் கல்லாகப் போவீர்!'' என்று சபித்தாள். உடனே ராதை,
பகவானையே நீ சபித்ததால், நீயும் இந்த மனித ஜன்மாவை விட்டு ஒரு புல்லாய், செடியாய் போகக்கடவாய்” என்று சபித்தாள்.
அப்போது அங்கு வந்த நாரதர் ராதையை சமாதானம் செய்து, பகவான் பத்தினி சாபத்தால் கண்டகி நதியில் கல்லாய் இருப்பார். வஜ்ர கிரீடம் என்ற பூச்சி அந்தக் கல்லைத் துளைத்து பலவிதமான வடிவங்களை உண்டாக்கும். அந்தக் கல் வடிவங்கள் சாளக்கிராமம் என்று அழைக்கப்படும்.
மேலும் அவை இரண்ய கர்ப்பம், வாமனம், சீதாராமம், சுதர்சனம், நரசிம்மம், வராகம் என்று பல விதங்களாகவும் அழைக்கப்படும். இப்பிறவியில் தன் வரத்தை மறந்துபோன துளசி, அவளுடைய மறுஜென்மத்தில் கிருஷ்ணனை சேருவாள்” என்றார்.
செடியாய்ப் பிறந்த துளசியை யார் சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம். துளசியை வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலியாக நீண்ட காலம் வாழ்வார்கள். பகவானே இன்னுமொரு சமயத்தில் துளசியின் பெருமையை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று நாடக மாடினார்.
ஒருசமயம் சத்தியபாமா, கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் இருக்க என்ன செய்யலாம்?'' என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர்
நீ யாருக்காவது கிருஷ்ணனை தானமாகக் கொடுத்துவிடு. அதன்பின் நீ திரும்பி அவர்களுக்கு பொருள் கொடுத்து வாங்கிக்கொள்” என்றார்.
சத்தியபாமாவும், “உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத் தந்தோம்” என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள். அதன்பின் நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார்.
தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டுதான் இறங்கி இருந்தது. அங்கு வந்த ருக்மிணி தேவி, `இதற்கு என்ன செய்வது?’ என்று நாரதரிடம் வருத்தத்துடன் கேட்டாள். விலை மதிப்பில்லாத பொருளை இரண்டாவது தட்டில் வைத்தால் கிருஷ்ணர் இருக்கும் தட்டு சமநிலைக்கு வரும்” என்றார்.
ருக்மிணிதேவியும் கிருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது. வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம்.
செவ்வாய், வெள்ளி விரதமிருந்து விசேஷமாக பூஜிக்கலாம். துளசி இலையை நகங்களால் கிள்ளக்கூடாது. அமாவாசை, பவுர்ணமி, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலங்கள், மதியம் மற்றும் மாலைப்பொழுது, இரவு போன்ற காலங்களில் துளசி இலையைப் பறிப்பது கூடாது.
சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். துளசிச் செடி துஷ்ட சக்திகளை வீட்டினுள் அனுமதிக்காது. துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மகாலட்சுமி நித்யவாசம் செய்வாள்.