தினசரி ஒரு வேத வாக்கியம்: 71. நாம மாதுர்யம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

71. நாம மாதுர்யம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“மர்தா அமர்த்யஸ்ய தே பூரி நாம மநாமஹே” – ருக்வேதம்.
“அழிவில்லாத உன் மகிமை வாய்ந்த நாமங்களை நாங்கள் சிரத்தையோடு ஜபம் செய்வோம். கீர்த்தனை செய்வோம்”

பகவானின் நாமத்தில் சக்தி நிரம்பியுள்ளது. எனவேதான் நாமஸ்மரணைக்கு அத்தனை முக்கியத்துவம் கூறப்படுகிறது.

“நாமஸ்மரணாதன்யோபாயம்  நஹி பஸ்யாமோ பவதரணே” மோட்சத்தை சேருவதற்கு நாம ஸ்மரணையை விட சிறந்த உபாயம் வேறில்லை. நாமத்தில் இறைவனின் குணம்,மகிமை, தத்துவம் அனைத்தும் நிறைந்துள்ளன. அதனால் நினைத்த உடனே பகவான் நம் பாவனையில் தோன்றி ஆனந்தம் ஏற்படுகிறது.  இது பொருளோடு நிறைந்த சக்தி. அதுமட்டுமின்றி சொல்லின் சக்தி கூட நாம மந்திரத்தில் மறைந்துள்ளது.

ஒவ்வொரு பெயரிலும் உள்ள அட்சரங்களின் கோர்வையால் தோன்றும் ஒலி அற்புதமான தேவதா சைதன்யத்தை விழித்தெழச் செய்கிறது. அதனால்தான் நாம உச்சாரணை நம்மில் உள்ள தெய்வீக ஆற்றல்களை விழித்தெழச் செய்து பாவங்களைப் போக்கி சித்தத்தை தூய்மை செய்து பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கிறது.

“நாம்நாமகாரி பஹுதா நிஜ சர்வசக்தி:
தத்ரார்விதானியமிதா ஸ்மரேணேன கால:”

thyagaraja swamigal1
thyagaraja swamigal1

“கிருஷ்ணா! அனேக நாமங்களை ஏற்படுத்தி, அதில் உன் சர்வ சக்திகளையும் வைத்துள்ளாய். அவற்றை நினைப்பதற்கு நியமங்கள் எதுவும் தேவையில்லை. அப்படிப்பட்டது உன் கருணை!” என்று சைதன்ய மகாபிரபு கீர்த்தனை செய்கிறார்.

ஒவ்வொரு நாமத்திலும் உள்ள சக்தியையும் மாதுர்யத்தையும் பகதன் எப்போதும் அனுபவிக்கிறான். அதனால்தான், “ஸ்ரீ ராமா! நீ நாமம் ஏமி ருசிரா!” என்று தன்மயமானார் பக்த ராமதாஸர்.

ததி நவநீத க்ஷீரமுலு ருசோ!தாசரதீ த்யான சுதாரசமு ருசோ! நிஜமுக பல்கு மனசா!”  என்று பரவசமடைந்து ராம நாம கீர்த்தனையில் தன்னை மறந்தார் தியாகராஜர்.

“சிவநாம தரீம் ப்ராப்ய சம்சாராப்திம் தரந்திதே” – சிவ நாமம் என்னும் கப்பல் கிடைத்தால் சம்சார சமுத்திரத்தை எளிதாக கடந்து விடலாம் என்று புராணம் எடுத்துரைக்கிறது.

சிவ, விஷ்ணு, ராம, கிருஷ்ண,  தேவி நாமங்கள் கணக்கின்றி உள்ளன. அனைத்தும் ஒரே பரமாத்மாவின் பல வைபவங்களை தெரிவிக்கின்றன. ஒவ்வொன்றும் சக்தி நிறைந்ததே! அவை ‘பூரி’ (Bhoori)  நாமங்கள். அதாவது அனந்த்த நாமங்கள். 

நாமஸ்மரணை என்னும் பக்தி  மார்க்கத்தைப் பற்றி புராணங்களில் கூறப்படுவதே தவிர வேதங்களில் அதைப் பற்றிய குறிப்பு இல்லை என்று கூறுபவர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் சரியாக வேதங்களை ஆராயாமல் சனாதன தர்மத்தை பிரிவுபடுத்தும் முயற்சியில் கூறும் சொற்கள் இவை. 

tulsidas
tulsidas

வேதங்களிலேயே கடவுள் பக்தியும் நாமஸ்மரணையின் மகிமையும் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது போன்ற பிரமாண வாக்கியங்கள் ஏராளம் உள்ளன.

சிவேன வசோஸாத்வா கிரிஸாச்ச வதாமஸி”  -“சுவாமி! மங்களகரமான ஒலியோடு உன் பெயரை உச்சரிப்போம்” என்று யஜுர்வேதம் கூறுகிறது.

“ராம நாமம் என்ற மணிதீபம் நாக்கு என்ற வாயிற்படியின் மீது இருந்தால் உள்ளேயும் வெளியேயும் இருள் விலகி விடும்” என்று துளசிதாசர் கீர்த்தனை செய்கிறார்.

“ப்ரேம முப்பிரி கானுவேள நாமமு பலிகேவாரு எந்தரோ மஹானுபாவுலு” என்று தியாகராஜர் பாடினார்.

“சாலதா ஹரிநாம சௌக்யாம்ருதமு மனகு” என்ற கீர்த்தனை செய்த அன்னமாச்சார்யா நாமசங்கீர்த்தன மார்க்கத்தால் உய்வடைந்த உத்தமர்.

பிரேமையோடு நாம சங்கீர்த்தனம் செய்து பரவசமடைவது என்பது புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம். இறைவனின் நாமத்தைக்  கேட்டவுடனே மகிழ்ந்து இறை  உணர்வில் லயமாவதே பக்தி என்பது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாக்கு.

அவ்வாறு நாமத்தின் மீது பிரமை ஏற்படும் புண்ணியம் கிடைக்க வேண்டுமென்றால் பாவங்கள் தொலைய வேண்டும். பாவம் நீங்க வேண்டும் என்றாலும் நாமமே துணை. முதலில் நாமத்தை ஸ்மரணை செய்வதும் கீர்த்தனை செய்வதும் பழக்கமானால் சிறிது சிறிதாக உள்ளம் தூய்மை அடைந்து இறை நாமத்தின் மீது பிரேமை ஏற்பட்டு தன்மய நிலை அடைவது சாத்தியப்படும்.

அந்த நிலைமை மோட்சத்தை விட உயர்ந்தது என்று நினைக்கிறான் பக்தன். நாம மாதுர்யத்தை  அனுபவிப்பதை விட பாக்கியம் வேறென்ன இருக்கிறது?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 71. நாம மாதுர்யம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply