தினம் ஒரு வேத வாக்கியம்: 51. உன் ஆயுதங்களை பிரயோகி!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

51. உன் ஆயுதங்களை பிரயோகி!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மன்னிதேஹி தம்” – யஜுர்வேதம் – ருத்ராத்யாயம்.

“உன் ஆயுதங்களை எங்கள் எதிரிகளின் மீது பிரயோகி!”

பகவானின் ஆயுதங்கள் ரட்சணைக்கும் சிட்சணைக்கும் சின்னங்கள். தர்மத்தைக் காப்பாற்றுவதில் உள்ள காருண்யமே அதர்மத்தை தண்டிப்பதிலும் தென்படுகிறது.

கடவுளின் கருணை, வாத்சல்யம், மன்னிப்பு போன்ற மதுரமான குணங்களை போற்றுகிறோம். அதேபோல் வீரம், பிரதாபம், உக்கிரம் போன்ற கடினமான குணங்களையும் துதிக்கிறோம். நம் கடவுளரின் வடிவங்களில் சாந்தமூர்த்தியும், உக்கிர மூர்த்தியும் உள்ளனர். 

சாந்த (யோக) மூர்த்திகள் ஞானத்திற்கும், உக்ர மூர்த்திகள் பாதுகாப்புக்கும்  உபாசனைக்குரியவை. நமக்கு ஞானம், பாதுகாப்பு இரண்டுமே தேவை. தர்மத்தைக் காப்பதற்காக  நரசிம்மர், காளி, சண்டி போன்ற வடிவங்களிலும் யோக சித்திக்காக தத்தாத்ரேயர், தக்ஷிணாமூர்த்தி, சாரதா போன்ற ரூபங்களிலும் இறை சக்தியை பூஜிக்கிறோம்.

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தர்மத்திற்கும் கூட விரோதிகளின் தொந்தரவு இருக்கும். பகைவரின் தொல்லையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு கடவுளை பிரார்த்திப்பது உசிதமே. அது ஹிம்சையாகாது. ஆத்ம  ரட்சணை என்பது நல்ல நோக்கமே.

நம்மை வருத்தும் சக்திகளிடம் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்வது அவசியம். அதற்காகத்தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு அமைப்பு என்பது அரசாங்கத்தின் முக்கிய பிரிவாக உள்ளது. நம் தர்மத்தையும் கலாசாரத்தையும் அழிக்க நினைப்பவர்கள் தோல்வியுற வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.

lalithambal
lalithambal

சர்வபாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி !
ஏவமேவ த்வயாகார்யம் அஸ்மத் வைரி விநாசனம் !!
என்பது தேவீ மாஹாத்மியத்தில் தேவதைகளின் பிரார்த்தனை.

“ஓ ஜகதம்பா! மூன்று உலகங்களிலும் கஷ்டங்கள் நீங்க வேண்டும். எங்கள் எதிரிகளை அழிப்பது உன் வேலை!” என்ற இந்தப் பிரார்த்தனை சிறந்த கருத்தோடு கூடியது.

பெருந்துன்பம் தருபவர்களைலோக க்ஷேமத்திற்காக அழிக்கும்படி

பிரார்த்திப்பது தர்மம். பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று கடவுளின் அருளை வேண்டுகிறோம். நம் நாட்டிற்கும் நம் தர்மத்திற்கும்  பாதுகாக்கும் சக்தி அருளும்படி அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு அளிக்கக் கூடியவரை கடவுளே தூண்டிவிட வேண்டும்.

தர்ம ரட்சணைக்காக பிரயோகிக்கும் ஹிம்சை தர்மத்தின் ஒரு பகுதியே. ஆனால் அதர்மிகள் அதனை ஹிம்சைவாதமாக விமர்சிக்கக் கூடும். ஆக்கிரமிப்பு, கொள்ளையடிப்பது போன்றவற்றிற்கு பயன்படும் பலம் அசுர குணம் கொண்டது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பயன்படுத்தும் பராக்கிரமம் தெய்வீகமானது.

சுயநலத்திற்காக அன்றி, உலக நன்மைக்காக பயன்படும் வீரத்தை உற்சாகப்படுத்த வேண்டும். அதனால்தான் நாட்டுப் பாதுகாப்பை கடமையாகக் கொண்ட அர்ஜுனனை போருக்குத் தயாராகும்படி ஊக்கப் படுத்தினான் ஶ்ரீகிருஷ்ணன்.

சகல ஜகத்துக்கும்  பாதுகாவலர்களான ஶ்ரீராமர், ஶ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகள் கருணையின் கருவூலம் மட்டுமல்ல. வீர, சூர மூர்த்திகள் கூட.

எதற்கும் உபயோகமில்லாத பொறுமை கையாலாகாத்தனமே!நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தர்மத்துக்கும் ஆபத்தே! தகுந்த நேரத்தில் தகுந்த பலத்தை வெளிப்படுத்துவது முக்கியமான கடமை. பயிர்களை பீடித்த பூச்சிகளையும் உடலில் சேர்ந்த பீடைகளையும் விரட்டுவதற்காகவே பாதுகாப்பு அமைப்பு. அவ்வளவுதானே தவிர தயை என்ற பெயரால் பூச்சிகளையும் பீடைகளையும் வளர்த்து பாதுகாக்க மாட்டோம் அல்லவா? அதனால்தான் வேத விஞ்ஞானம் உலக நலனுக்காக ‘சத்ரு நாசனத்தை’ கூட தெய்வப் பிரார்த்தனையில் சேர்த்துள்ளது.

தினம் ஒரு வேத வாக்கியம்: 51. உன் ஆயுதங்களை பிரயோகி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply