e0af8d-e0ae8fe0aeb4e0af81-e0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 71
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அனைவரும் மருண்டு – திருச்செந்தூர்
ஏழு கடல், ஏழு மலை
‘அனைவரும் மருண்டு’ எனத் தொடங்கும் இத்திருப்புகழில் கடைசி பத்தியின் வரிகள்
எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற …… பெருமாளே... என்பனவாகும். இதில் ஏழு கடலைப் பற்றியும் எட்டு மலைகள் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது. ‘சிலம்பு’ என்றால் மலை. நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே.
பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பாடலின் பொருளாவது – (கோயிலடி) திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான். ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும், வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன் – என்பதாகும்.
காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற நாடகம் பற்றி நாம் அறிவோம். அதில் காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.
நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தில் ஏழுவகை மழைகள் பற்றிச் சொல்கிறார். அவையாவன –
சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம்- நீர் மழை
புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)
துரோணம் – மண் மழை
காளமுகி- கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
அவர் குறிப்பிடும் ஏழு மலைகள் – (1) இமயம்/கயிலை, (2) மந்த்ரம், (3) விந்தியம், (4) நிடதம், (5) ஹேமகூடம், (6) நீலம், (7) கந்தமாதனம் என்பவையாம். மேலும் அவர் குறிப்பிடும் ஏழு கடல்கள் – (1) உவர் நீர், (2) தேன்/மது, (3) நன்னீர், (4) பால், (5) தயிர், (6) நெய், (7) கரும்புச் சாறு இதனை கம்பர்
உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.
(கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மூலபல வதைப் படலம்)
கம்பர் – உப்பு, தேன், கள், ஒள்ளிய தயிர், பால், கருப்பஞ்சாறு, தண்ணீர் என்று உரைக்கப்பட்ட ஏழு கடல்களும் இப்போது, இராமனுடைய ஒப்பற்ற வில்லினால் பவழம் போல் உள்ள, இரத்த நீரால் சூழப்பட்டதால் தனித்தனி – ஏழு கடல்கள் என்று சொல்லப்பட்ட பழைய பேச்சுத் தவறாகிவிட்டது என்று இராமனின் வீரத்தைப் புகழும்போது ஏழு கடல்கள் பற்றிச் சொல்கிறார்.
இந்தத் திருப்புகழில் விநாயகர் ஞானப்பழம் பெற்ற கதையும் சொல்லப்படுகிறது. ஞானப்பழத்தைப் பெற முருகப் பெருமான் மயில்மீது ஏறி உலகைச் சுற்றிவந்தார். முருகனின் வாகனம் மயில் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகனுக்கு மூன்று மூன்று மயில்கள் இருப்பது தெரியுமா?
ஞானப்பழமான மாம்பழத்திற்காக உலகைச் சுற்றி வருவதற்கு உதவிய மயில் மந்திர மயில் என்று போற்றப்படுகிறது. இது முதலாவது மயில். அதன் பிறகு சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாக உருமாறி முருகனைத் தாங்கினான்.
இது தேவ மயில். பின் சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.
வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் எனும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் ஸ்லோகங்கள் மட்டுமே. ஞானப்பழம் பற்றிய கதையை நாளக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: ஏழு கடல், ஏழு மலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.