திருப்புகழ் கதைகள்: அடிமுடி அறிய இயலா அருட்பெருஞ்சோதி!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0ae85e0ae9fe0aebfe0aeae.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 89
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குகர மேவு – திருச்செந்தூர்
அடிமுடி அறிய இயலா அருட்பெருஞ்சோதி!

இத்திருப்புகழில் இடம்பெறும் கமல ஆதனற்கு அளவிட முடியா என்ற சொற்களில் அடிமுடி அறிவியலா அருட்பெருஞ்சோதி பற்றிய வரலாறு அடங்கியுள்ளது. பிரமதேவன் தேடியும் காணாத தகைமையுடையவர் சிவபெருமான். கலைமகள் நாயகன் பிரமன். அவனது கல்வியறிவால் காண முடியாதவன் ஆண்டவன். கலையறிவு அபரஞானம் எனப்படும். அபர ஞானத்தால் அறியவொண்ணாதவன் சிவபெருமான்.

ஒருமுறை, சரஸ்வதியின் நாயகன் பிரம்மனுக்கும் திருமகளின் நாயகன் மகாவிஷ்ணுவுக்கும் இடையே, ‘தங்களில் யார் பெரியவர்?’ என்று விவாதம் எழுந்தது. நெடுநேரம் விவாதித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த சர்ச்சை பெரிய யுத்தமாக மாறியது. அப்போது இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரிய நெருப்புத் தூணாக சிவபெருமான் வந்து நின்றார். பிரம்மனும் விஷ்ணுவும் தங்களது சண்டையை விட்டு விட்டு, கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது, ”ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என் திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு, உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன்!” என்றார் சிவபெருமான்.

இதையடுத்து, வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று, ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ, ஈசனின் திருமுடியைக் காண, அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார்.

arunachaleshwarar
arunachaleshwarar

ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்புற்றனர். திருவடியைக் காண முடியாமல் திருமால் திரும்பிவிட்டார். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில், தாழம்பூ ஒன்று வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம், ”எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார்.

”சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது, உங்களால் இயலாத காரியம்!” என்றது தாழம்பூ. உடனே பிரம்மன், ”எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப் பிழம்பின் திருமுடியைக் கண்ட தாகவும், அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும்” என்றார். தாழம்பூவும் சம்மதித்தது. தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன், தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார்.

பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். ”பிரம்மனே… பொய்யுரைத்த உனக்கு, கோயில்களும் பூஜைகளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ, இனி எந்த பூஜைக்கும் பயன்படாது” என்று சபித்தார்.

தவறு உணர்ந்த பிரம்மனும் தாழம்பூவும் தங்களை மன்னிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதன் பலனால்… ‘சிவ பூஜை தவிர, மற்ற பூஜைகளுக்கு தாழம்பூ பயன்படும்’ என்று அருளினார் சிவனார். இப்படி பிரம்மன், திருமால் இருவரது அகந்தையையும் போக்கி, சிவபெருமான், உலகுக்குத் தனது பேரொளியைக் காட்டிய திருவடிவே லிங்கோத்பவ மூர்த்தி ஆகும்.

இந்தப் புராணக் கதையில் உள்ள நுண்ணிய கருத்து சிந்தனைக்குரியது. பிரம்மன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் அகந்தையை அதிகப்படுத்தும். ஆனால் அறிவு, செல்வம் ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது! செல்வச்செருக்கு, இறுதியில் தனது தோல்வியை ஏற்றாலும் கல்விச் செருக்கு தனது தோல்வியை ஏற்கவில்லை. மாறாக, தோல்வியை மறைப்பதற்கான சூழ்ச்சியைத் தேடியது. ஆம், அறிவு கூடியதால் அகந்தை கொள்பவர்கள் பொய் சொல்லவும் அஞ்ச மாட்டார்கள் என்பதையே இந்தக் கதை விளக்குகிறது.

புராணங்கள் சிலவற்றில் இந்தத் தாழம்பூ கதை உள்ளது. ருக்வேதசம்ஹிதை, சரபோபநிஷத், லிங்க புராணம், கூர்ம புராணம், வாயுபுராணம், சிவ மகா புராணம், உபமன்யு பக்த விலாசம், மகா ஸ்காந்தம், நாரதம் மற்றும் தமிழில் கந்த புராணம், அருணகிரி புராணம், சிவராத்ரி புராணம், அருணாசல புராணம் ஆகிய நூல்களிலும், ஆகமங்கள் பலவற்றிலும் அடி- முடி தேடிய கதை விவரிக்கப்பட்டுள்ளது.

arunachala shiva - 2

லிங்க பாணம் அல்லது ரூபத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனி போல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இதில், திருமுடியும் திருவடியும் மறைக்கப்பட்டிருக்கும். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவனார் திகழ… பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. லிங்கத்தின் நடுவில்- சிவபெருமானும், மேல் பகுதியில்- அன்ன பட்சியாக பிரம்மனும், கீழ்ப்பகுதி யில்- வராகமாக திருமாலும் உள்ள லிங்கோத்பவ வடிவை பல கோயில்களில் காணலாம்.

லிங்கோத்பவ தத்துவ விளக்கத்தை, சிவலிங்கத் தத்துவம் எனலாம். பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளார் இறைவன். பஞ்ச பூதங்களில் காற்று, நீர், ஆகாயம் ஆகியவற்றை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வர இயலாது. ஆனால், மண்ணை ஒரு வடிவமாக உருவாக்கலாம். ஆனால் அது, ஒளி உடையது ஆகாது. சோதியுருவை, கொழுந்து விட்டு எரியும் தீயில் கண்ணால் காணலாம். அதன் மையத்தை உற்று நோக்கினால், நீள் வட்ட வடிவத்தில்- நீல நிற பிரகாசத்தைக் காணலாம். இதையே லிங்கமாக்கினர் நம் முன்னோர். இதுவே லிங்கோத்பவ மூர்த்தி ஆகும்.

திருப்புகழ் கதைகள்: அடிமுடி அறிய இயலா அருட்பெருஞ்சோதி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply