கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடிகள்!

கட்டுரைகள்

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

Leave a Reply