e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aea8e0aebfe0aeb2e0af88e0aeaf.jpg" style="display: block; margin: 1em auto">
நிலையாமை
காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!
மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்
வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,
வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,
வீண்பொழுது போக்காமலே
நேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்
நினைவுவைத் திருபோ தினும்
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க
நிமலனே! அருள்புரி குவாய்
ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தூயவனே!, ஆராயும் அறிஞர்கள் வணங்கும் திருவடிகளை யுடையவனே!,
அறிவின் வடிவே!, தலைவனே!, எமது தேவனே!, உடல் ஒரு நீர்க்குமிழி, வாழ்வு வாழ்க்கையோ மலையைச் சுற்றியுள்ள
கானகத்தில் ஓடும் ஆற்றின் வெள்ளம் ஆகும், அருளுக்கிடமான மக்களும் உறவினரும் வீடும் இல்லாளும் ஆகிய
இவைகளெல்லாம் பேய்த்தேரிலே காணப்படும் வெள்ளம்!, (நம்மிடம்),
பொருந்திய தோளாற்றலும் இளம் பருவமும் அழகும் ஆகிய இவை மஞ்சள்
வெயில் (இளவெயில்), உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு, என்றே
நினைத்து, வீணே காலத்தைக் கழிக்காமல், தெளிவடைந்து, உன் திருவடிகளிடையே நட்புவைத்து அன்புடன்
நினைத்து, காலையினும் மாலையினும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாயாக!
காட்டாறு விரைவில் வற்றிவிடும், வேனிற் காலத்தில் நண்பகலில் திறந்தவெளியில் நீர்ப்பெருக்கென்று நினைக்குமாறு
தோன்றுவதே கானல் அல்லது பேய்த்தேர் எனப்படும். இது பொய்த்தோற்றம்.
நிலையற்ற வாழ்க்கையில் உறுதி வேண்டின் இறைவனை வழிபடல் வேண்டும்.
அறப்பளீஸ்வர சதகம்: நிலையாமை! News First Appeared in Dhinasari Tamil