பெண்ணுக்கு இடம் அளிக்கலாமா?

கட்டுரைகள்

உண்மையில் இவ்வாறு தேடுகிறவரும் பதில் சொல்லுகிறவரும் இல்லை. ஆயினும் ஆழ்வார் ஒருவரே அவதாரங்களிலே உள்ள ஈடுபாட்டாலே இப்படி இருவராக வேடம் தாங்கி அனுபவிக்கிறார̷் 0;

இங்கு, ராமனைக் காண முடியுமா? என்று நாடி வருகின்றனர் சிலர். அப்படி நாடி வருபவரை நோக்கிப் பதில் கூறுகின்றனர் சிலர் – ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மனை உள்ளபடி கண்டவர் உளர் என்று! இதனால் ஸ்ரீராமனும் ஸ்ரீநரசிம்மனும் ஒருவரே என்பதை வெளியிட்டபடி!

அவதாரங்களில் முற்பட்டது ஸ்ரீநரசிம்ம அவதாரம். அதனினும் பிற்பட்டது ஸ்ரீராமாவதாரம். இந்த முறைப்படி கேட்பதுதான் உசிதம். அப்படிக் கேட்பதானால் “ஸ்ரீ நரசிம்மனைக் காண முடியுமோ?” என்று சிலர் தேடுவதாகவும், அவர்களை நோக்கி, “ஸ்ரீராமனைக் கண்டவர்கள் இருக்கின்றனர். அந்த நரசிம்மன்தான் ராமனாக அவதரித்துள்ளான்” என்று பதில் சொல்லுவதாகவும் பாசுரம் அமைக்க வேண்டும். அப்படியின்றிப் பிற்பட்ட அவதாரத்திலே முதலில் இழிந்து, பின்னர் முற்பட்ட அவதாரத்தை அனுபவிப்பதாக மேலே காட்டிய பாசுரம் அமைகிறது.

பெண்ணுக்கு இடம் கொடுத்த பெருமான்

இந்தப் பாசுரத்தால், ஸ்ரீராமனாக அவதரித்து, ராவணன் முதலானோரை அழித்து, விபீஷணனை லங்கையில் முடிசூட்டி, அயோத்தி எழுந்தருளி பட்டாபிஷேகம் கொண்டு, ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் பிரகாசித்ததைப் போல் விளங்கும் முடியையும் சூடி, பிராட்டியோடு கூடி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீராமன்தான் முன்னர் மகாவீரனான ஹிரண்யனது மார்பைப் பிளந்து அவனை அழித்து அழகியசிங்கமாய் ரத்தம் தோய்ந்த கைகளுடன் பிராட்டியோடு வீற்றிருந்து ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மன் எனும்படி நின்றான் என்கிறார் ஆழ்வார். ஆக, ஸ்ரீராமன்தான் ஸ்ரீ நரசிம்மன் என்று காண்பதே உள்ளபடி காண்பது. இந்த இரண்டு அவதாரங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அனுபவித்தால் ஆழ்வார் அருளியதன் அருமையையும் தலைப்பின் தனிச்சுவையையும் அறியலாம்.

பொதுவாகப் பெண்களுக்கு ‘இடம் தரலாகாது’ என்பது உலக நியதி. இதன் அர்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் பெண்களுக்கு இடம் – சலுகை – முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பது பண்டைப் பெருமக்கள் சொல்லும் நீதி. அப்படியா?

‘பெண்களுக்கு இடம் தரலாகாது’ என்ற உலக வழக்கில் ஒரு சாஸ்திர அர்த்தமும் உள்ளடங்கியுள்ளது. அதாவது – பெண்களுக்கு இடப்பக்கத்தைத் தரலாகாது என்பதுதான் அந்த சாஸ்திர அர்த்தம். ஓர் இடத்தில் கல்யாண சமயத்தில் ‘பெண்ணைப் பிள்ளைக்கு இடப்பக்கத்திலே உட்கார வைப்பதா? அல்லது வலப்பக்கத்திலே உட்கார வைப்பதா?’ என்ற கேள்வி வந்ததாம்.  அங்கிருந்த பெரியவர் ஒருவர், ‘பெண்ணுக்கு இடம் தரலாகாது’ என்று கூறினாராம். உடனே புரோகிதர் அதன் கருத்தை அறிந்து பிள்ளைக்கு வலப்பக்கத்திலே பெண்ணை உட்கார வைத்துக் கல்யாணத்தை முடித்தாராம். ஆக, பெண்களுக்கு இடப்பக்கம் தரலாகாது என்பதையேதான் இங்கு நான் சொல்ல வந்தேன்.

உலக நியதி இப்படி இருக்க, இதற்கு மாறாக ஸ்ரீராமனும் ஸ்ரீநரசிம்மனும் இடப்பக்கத்திலே பெண்ணை – ஸ்ரீமகாலட்சுமியைக் கொண்டு விளங்குகிறார்கள். வாமே பூமிஸுதா (வாமம் – இடப்பக்கம்; பூமி ஸுதா – பூமித்தாயின் புதல்வி) லக்ஷ்ம்யாஸமாலிங்கித வாமபாகம்  என்ற ச்லோகத்தில் ஸ்ரீநரசிம்மனுடைய இடப் பக்கத்திலே மகாலட்சுமி இருப்பது புலனாகும். நேரிலும் சேவித்து அறியலாம்.

ஆக இந்த இரண்டு அவதார மூர்த்திகளும் பெண்ணுக்கு இடம் தந்த எம்பெருமான்கள் ஆவர். உலக நியதிக்கு மாறாக இவர்கள் இடப்பக்கத்தில் லட்சுமியைக் கொண்டிருப்பதற்குக் காரணம் உண்டு. ஸ்ரீராம அவதாரத்தில் சீதையைவிட இனியவனான தம்பிக்கும், ஸ்ரீ நரசிம்ம அவதாரத்தில் பிராட்டியைவிட பிரியனான பிரகலாதனுக்கும் வலம் (வலது பக்கம் – நன்மை) தரவே, லட்சுமியை இடத்திலே கொண்டபடி… என்பர் பெரியோர். சரணாகதர் விஷயத்தில் பிராட்டியின் பேச்சுப்படி நடப்பவர் ஆகையால், பெண்ணுக்கு – லட்சுமிக்கு இடம் – சலுகை – முக்கியத்துவம் கொடுத்தவர்கள் ஆகிறார்கள் என்பதும் பொருந்தும்.

– ஸ்ரீஅஹோபில மடத்தின் 45வது பட்ட ஜீயர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநாராயண யதீந்த்ரமகாதேசிக ஸ்வாமி

Leave a Reply