அனுமன் வாலில் குங்குமம் வைப்பது எதற்காக?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

size-full" src="https://deivatamil.com/wp-content/uploads/2020/05/hanuman.jpg" alt="" width="1200" height="675" />

By Krishna Ramalingam

#ஆன்மீகஅமுதம் : அனுமன் வாலில் குங்குமம் வைப்பது எதற்காக? சக்தி தரும் அதிசய வழிபாடு!

ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது.

ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், உயரிய காரியங்களைச் செய்திருந்தாலும் கூட, ராமபிரானுக்கு அடுத்தபடியாக மக்கள் அனைவரும் வணங்கும் இடத்தில் இருப்பது அனுமன் மட்டுமே. தன்னலம் கருதாது, எவ்வித பலனும் வேண்டாது ராமபிரானுக்கு சேவை செய்தவர் ஆஞ்சநேயர்.

அப்படிப்பட்ட பக்தர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதையே, ஒவ்வொரு வைணவக் கோவில்களிலும் இருக்கும் ஆஞ்சநேயர் வடிவம் நமக்கு உணர்த்துகிறது.

இல்லத்தில் அனுமன் படம் வைத்து, அனுமனின் வால் பகுதியில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானதாகும். இதுகுறித்து ஒரு விளக்கம்.

ஆஞ்சநேயர் குரங்காக அவதாரம் எடுத்தது ஏன்? ஒருநாள் சிவபெருமான் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே வந்தார், அந்த நேரத்தில் பார்வதி தேவி, சிவபெருமானை பார்த்து, “சுவாமி கடவுளாக இருக்கும் தாங்களே இன்னொரு கடவுளின் பெயரை உச்சரித்து வருகின்றீர்களே!” அதற்கு தேவி “ராம” என்ற சொல் இரண்டு விஷயங்களை குறிக்கின்றது. ஒன்று ‘ராம’ என்பது பிரம்மம். இரண்டாவது விஷ்ணுவின் அவதாரமான ராமனை குறிக்கின்றது என்றார்.

மேலும், ராமர் தனக்கு பிடித்த அவதாரமாகவும், பூலோகத்தில் அவதரித்து ராமருக்குத் தொண்டு செய்ய போவதாகவும் கூறினார். இதைக் கேட்டு, பார்வதி தேவிக்கு கோபம் வந்து விட்டது. நான் உங்களை விட்டு ஒரு நொடி கூட பிரிந்திருக்க மாட்டேன் எனச் சொல்ல, “அதற்கு ஈசன் தேவி கவலை வேண்டாம் பூலோகத்துக்கு அனுப்பப் போவது என்னுடைய ஒரு சிறு பகுதி தான் மற்றபடி நான் இங்கு தான் உன் கூடவே இருப்பேன்” என்றார்.

பார்வதி தேவி சமாதானமாகி, அவர் எடுக்கப்போகும் அவதாரத்தைப் பற்றி கேட்டார். பலத்த விவாதத்துக்குப் பின் சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

மனிதனாக அவதாரம் எடுத்தால் தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும். எஜமானை விட சேவகன் எப்போதும் ஒரு படி கீழ்நிலையில் இருப்பதே சரி. இந்நிலையில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. அதற்கு விசேஷமான தேவைகள் இருக்காது.

உடனே பார்வதி தேவி தானும் இறைவனுடன் வருவதாகக் கூறினாள். சிவபெருமான் அதற்கு சம்மதம் கொடுத்து தான் எடுக்கப் போகும் அவதாரத்தில் குரங்குக்கு வாலாக நீ இருக்கலாம் என்று முடிவு செய்யவும், அதற்கு பார்வதி தேவி சம்மதம் தெரிவித்தார்.

எனவே, சிவபெருமான் குரங்காகவும், அதன் வாலாகப் பார்வதி தேவியும் அவதாரம் எடுத்ததால் தான் அனுமன் அழகாகவும் பலசாலியாகவும் இருக்கின்றார்.

ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் அனுமன் குரங்காக அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். அனுமன் சூரியனைக் குருவாக நினைத்து வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுமனின் பின் வலம் வந்தது. இதன் காரணமாகத்தான் அனுமனின் வாலிற்குப் பின் நவகிரகங்கள் ஒன்பதும் வரிசையில் அமர்ந்துள்ளனர்.

எனவே அனுமனின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு தொடர்ந்து 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். மேலும் அனுமனின் வாலில் பொட்டு வைத்து செய்யும் இந்த வழிபாடானது நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாக கருதப்படுகிறது.

அனுமனின் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொள்ளும் அனைத்தும் நிறைவேறும் என்று கூறுகிறார்கள். திருமணம் நடைபெறாத பெண்கள் ஆஞ்சநேயர் வாலில் பொட்டு வைத்து வழிபாடு செய்து வந்தால் பார்வதி தேவியின் அருளால் விரைவில் திருமணம் நடக்கும்.

பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வாலின் முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசி அன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து `ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய’ என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், சந்தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில்வைத்து கொடுக்கலாம், அந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்கள் வெற்றி அடையும் வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்குரிய முக்கிய வழிபாட்டு தினங்களாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவன், சக்தி, பெருமாள் என மூவரையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

சிவன் எதற்காக குரங்கு அவதாரம் எடுத்தார்? புரிகிறதா? ஒரே கல்லில் இரண்டு மாங்காய், எப்படி அனுமனை வணங்கினால் அவருடைய கருணையும் அப்பன் ஈசருடன், அம்மையையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

இந்த விஷயத்தை அனுமன்கூட அறிந்து இருக்கமாட்டார், ஏன்…. எப்படி? அவருக்குத் தான் ராம நாமம் தவிர வேறு எதுவும் வேண்டாமே….!!!

ஜெய் ஶ்ரீ ராம்… ஜெய் ஶ்ரீ ராம்….

Leave a Reply