திருப்புகழ் கதைகள்: சப்த சிவ தாண்டவங்கள்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 234
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தலைவலி மருத்தீடு – பழநி
சப்த சிவ தாண்டவங்கள் 1

இந்தத் திருப்புகழின்
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …..வருவோனே – என்ற வரிகளில் மாகாளி நாண முன்னம் அவைதனில் ஆடி நடித்தோனைப் பற்றிய குறிப்பு வருகிறது. இது சிவபெருமான் ஆடிய ஊர்த்துவ தாண்டவம் பற்றிய குறிப்பாகும்.

சைவ சமயக் கடவுளான சிவபெருமான் ஏழு வகையான தாண்டவங்கள் ஆடியுள்ளதாக பல திருக்கோயில்களின் புராணங்கள் கூறுகின்றன. இந்த தாண்டவங்களின் மூலமாக சிவபெருமான் ஏழு சுவரங்களைப் படைத்ததாக சைவர்கள் நம்புகிறார்கள். சுவரங்கள் ஏழு என்பதால் இவையும் ஏழு என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த ஏழு தாண்டவங்களாவன – காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், சம்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகியனவாகும். ஸ்ரீ தத்துவநிதி என்ற நூலிலும் இந்த ஏழுவகைத் தாண்டவங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

ஆனந்தத் தாண்டவம்

இது சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடியது. சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர் (புலி நகமுடையவர்), பதஞ்சலி (பாம்புத்தலையுடையவர், ஆதிசேஷன் என்றும் சிலரால் சொல்லப்படுகிறார்) ஆகிய முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற இந்நடனம் ஆனந்த தாண்டவம் என்று வழங்கப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாக ஆனந்த தாண்டவம் அறியப்படுகிறது. ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. இந்நடன திருக்கோலத்தினை திருநாவுக்கரசர் குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும் என்று பாடுகிறார்.

natarajar 1 - Dhinasari Tamil

இந்நடனமாடியமையால் சிவனை கூத்தன் என்றும், தில்லையில் நடமாடியமையால் தில்லைக் கூத்தன் என்றும் அழைக்கின்றனர். கூத்திறைவர் என்றும், நடராசர் என்றும் ஆடல்வல்லான் என்றும் போற்றுகின்ற சிவபெருமானின் இத்தாண்டவம், மற்ற தாண்டவங்களில் முதன்மையான தாண்டவமாக கருதப்படுகிறது. இந்நடனம் களிநடனம் எனவும் வழங்கப்படுகிறது.

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று கொண்டாடுகின்றோம். உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.

சிவனும் சக்தியும் சமமென உணராத காரணத்தில் சிவனின் சாபப்படி சக்தி, உக்கிரமான காளியாக மாறினாள். தில்லையில் சிவனை அடைய தவம் செய்தாள். ஆனால் சிவன் காட்சியளிக்காததால் மேலும் உக்கிரமாக மாறினாள். அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள். ஆடல்கலையின் வல்லவனான சிவனை தன்னுடன் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் வெற்றிபெற்றது யார்? நாளை காணலாம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply