நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி… மகாபெரியவர் சொன்னவை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

தெய்வத்தின் குரல் : தற்கால யுனிவர்ஸிடி ஸெட்-அப்பிலேயே இருந்தது நாலந்தா வித்யாசாலைதான். அங்கேதான் ‘ரூயின்’ஸைப் பார்க்கும்போது பெரிய பெரிய லெக்சர் ஹால்கள், ஹாஸ்டல்கள் ஆகியன இருந்தது தெரியவருகிறது. இது பழைய காலத்தில் மகதம் எனப்பட்ட இன்றைய பிஹாரில் இருக்கிறது. புத்த விஹாரங்கள் நிறைய ஏற்பட்டது மகத தேசத்தில்தான்.

விஹாரம், விஹார் என்பதே பிஹார் என்றாயிற்று. அதைத் தப்பாக பீஹார் என்கிறோம்! பட்னா என்கிற பாடலிபுத்ரத்துக்கு ஸமீபத்தில் புத்தர் வாழ்க்கையோடு ஸம்பந்தப்பட்ட ராஜக்ருஹம் (ராஜ்கிர்) இருக்கிறது, அதற்குப் பக்கத்தில் நாலந்தா இருக்கிறது. பௌத்த தத்வதர்சிகளில் முக்யம் வாய்ந்த ஒருவரான நாகார்ஜுனர் இந்த இடத்தை ஸர்வகலாசாலை, அல்லது விச்வ வித்யாலயம், அல்லது தமிழில் பல்கலைக் கழகம் என்கிற ரீதியில் பெரிய கல்விச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்தார்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நரஸிம்ஹ பாலாதித்யரின் காலத்தில் நாலந்தா விச்வ வித்யாலயம் பூர்ண வளர்ச்சியைப் பெற்றதாகத் தெரிகிறது. பௌத்த சாஸ்த்ரங்கள் மட்டுமின்றி, ஓரளவு வேத வித்யையும் மற்றும் விஸ்தாரமாகவே கணிதம், ஜ்யோதிஷம், தர்க்கம், ஸங்கீதம், வைத்யசாஸ்த்ரம் ஆகியனவும் இங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே பத்தாயிரம் பேர் ரெஸிடென்ஷியலாகத் தங்கிப் படித்தார்களென்று தெரிகிறது. ஆசியாவிலுள்ள வெளி தேசங்களிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கூட நல்ல அறிவுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்காக இங்கே வந்தார்கள் என்று தெரிந்து கொள்ள நமக்கு மிகவும் பெருமையாயிருக்கிறது.

ஆனாலும், தக்ஷசிலத்தில் அக்கால இன்ஜீனீயரிங் முதலான டெக்னிகல் ஸப்ஜெக்ட்களை போதித்ததுபோல இங்கே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் அட்மிஷன் இருந்தாலும், குறிப்பாக பிக்ஷுமார்களை உண்டாக்குவதே நாலந்தா கலாசாலையின் நோக்கமாயிருந்ததால் காரிய ரீதியில் மிகவும் லௌகீக ஸம்பந்தமுண்டாக்குவதான டெக்னிகல் ஸப்ஜெக்ட்களை இங்கே பாடதிட்டத்தில் சேர்க்கவில்லை என்று ஊகிக்கப்படுகிறது.

ஆனால் ஜ்யோதிஷம் ஒரு ஸப்ஜெக்டாக இருந்ததால் இங்கே வான மண்டலத்தை தீர்க்க த்ருஷ்டிக் கருவிகளால் ஆராய்வதற்காக ஒரு சிறந்த ‘ஆப்ஸர்வேடரி’ இருந்திருக்கிறது. ஒன்பது மாடிகளுள்ள ஒரு பெரிய லைப்ரரியும் இருந்திருக்கிறது.

கஜனி முஹமது, கோரி முஹமது முதலானவர்கள் படையெடுத்து நம் கலாசாரத்துக்குப் பெரிய ஹானி உண்டாக்கி, அப்புறம் துருக்கர்களின் Slave Dynasty (அடிமைவம்ச) ஆட்சி பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டபோது நாலந்தா யுனிவர்ஸிடி, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நசித்துப் போய்விட்டது. எட்டு நூற்றாண்டுகள் இப்படி ஒரு யுனிவர்ஸிடி நடைபெற்றதென்பதே மிகவும் பெருமைக்குகந்த விஷயம்.

நாலந்தா யுனிவர்ஸிடி பூர்ணரூபம் பெற்ற ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்நூறு வருஷங்கள் அப்புறம், வங்காளத்தில் பால வம்சத்தவர் ஆட்சியில் ஏற்பட்டது விக்ரமசிலம். கங்கைக்கரையில் ஒரு குன்றின்மேல் தர்மபாலன் என்ற அரசின் பௌத்த மடாலயமும் அதைச் சேர்ந்ததாக இந்த வித்யாசாலையும் ஸ்தாபித்தான். திபெத்திலிருந்தே பிக்ஷுக்கள் நிறைய வந்து இங்கே கல்வி கற்றிருக்கிறார்கள். இங்கிருந்து பிக்ஷுக்கள் திபெத்துக்குப் போயும் பௌத்தமதப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

அநேக பௌத்த நூல்கள், குறிப்பாக தாந்த்ரிகமானவை (தந்த்ர சாஸ்த்ரத்தைக் குறித்தவை) பிற்காலத்தில் இந்தியாவில் கிடைக்காமல் திபெத்திலிருந்தே நாம் பெறும்படியாக இருந்தது. இப்போதுங்கூட இப்படிப் பல பழைய புஸ்தகங்கள் திபெத் மடாலயங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன.

இவை அங்கே போய்ச் சேர்ந்ததற்கு நாலந்தா – விக்ரமசிலா யுனிவர்ஸிடிகளால் ஏற்பட்ட பரிவர்த்தனைதான் காரணம்.

Leave a Reply