style="text-align: center;">11ஆம் பத்து 3ஆம் திருமொழி
தரவு கொச்சகக் கலிப்பா
1972
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப்
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்
தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்
என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே. (2) 11.3.1
1973
இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர்
பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட
வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே. 11.3.2
1974
அன்னே. இவரை யறிவன், மறைநான்கும்
முன்னே யுரைத்த முனிவ ரிவர்வந்து
பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து
என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே. 11.3.3
1975
அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு,
வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி,
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே? 11.3.4
1976
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு,
தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால்,
தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி,
தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே. 11.3.5
1977
வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம்
உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும்
எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி,
கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே 11.3.6
1978
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே. 11.3.7
1979
பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்
கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே. 11.3.8
1980
நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே. 11.3.9
1981
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே (2) 11.3.10